search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saturn Migration Ceremony"

    • சனிப்பெயர்ச்சி விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிழக்கு நோக்கிய முகமாக தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

    2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா இந்தாண்டு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் ரூ.1,000, ரூ.600 மற்றும் ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500, சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300, சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் திருநள்ளாறுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காரைக்கால் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், சந்தைதிடல், பஜன்கோ வேளாண் கல்லூரி, செல்லூர் வி.ஐ.பி. நகர், அத்திப்படுகை ஆகிய முக்கிய இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இ-ஆட்டோ சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருநள்ளாறுக்கு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு புதுவை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து செல்லும் வகையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1,400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் புனித நீராடும் நளன் குளத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு கோவில் வளாகம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.

    சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×