search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Searching for Love"

    • கிறிஸ்தவம் அன்பை போதிக்கின்ற மதம்.
    • கடவுளே அன்பு எனும் மேலான சிந்தனையை சொல்கிறது கிறிஸ்தவம்.

    பிப்ரவரி மாதத்தை உலகம் வேலண்டைன் மாதமாகக் கொண்டாடுகிறது. அன்பை பகிரும் மாதமாகவும், அன்பானவர்களை நினைவுகூரும் மாதமாகவும் இதை பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. உலகம் போதிக்கின்ற அன்பின் மதிப்பீடுகள் இன்றைக்கு போலித்தனமாகவும், வெற்றிடங்களாகவும், சிற்றின்பக் கூடாரங்களுமாக மாறிவிட்டன.

    கிறிஸ்தவம் அன்பை போதிக்கின்ற மதம். கடவுளும் அன்பும் வேறு வேறல்ல, கடவுளே அன்பு எனும் மேலான சிந்தனையைச் சொல்கிறது கிறிஸ்தவம். விண்ணகத்தின் வழி என்பது அன்பின் வழியே என அது அழுத்தமாய்ச் சொல்கிறது.

    விவிலியம் என்பது கடவுள் நமக்காய் எழுதிய மிகப்பெரிய காதல் கடிதம். இறைவன் மனித குலத்தின் மீது கொண்டிருக்கின்ற பேரன்பின் வெளிப்பாடே இறைவார்த்தைகளில் வெளிப்படுகின்றன. அந்த அன்பினைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் அன்பினைச் செயல்படுத்துகிறார்கள். வெறுமனே வார்த்தைகளை வாசித்துக் கடப்பவர்கள் வெறுமையான கிறிஸ்தவர்களாய் வாழ்கிறார்கள்.

    அப்படி இயேசுவின் அன்பின் அடி ஆழத்தை மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்ட குடும்பமாக ஸ்டெயின்ஸ் குடும்பத்தைச் சொல்லலாம். அழுக்கடைந்த ஒரு ஏழைக்கு உதவும் போது நாம் அவர்களைத் தொட்டிருக்கிறோமா? கார் கதவைத் தட்டும் திருநங்கைக்கு அன்பின் உரையாடலோடு ஏதேனும் உதவியிருக்கிறோமா? அவலட்சணமாய் இருக்கும் மனநோயாளி ஒருவரை அரவணைத்துப் பேசியிருக்கிறோமா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் நமக்கும் இயேசுவுக்கும் இடையேயான தூரத்தைச் சொல்லிவிடும்.

    கிரகாம் ஸ்டெயின்ஸ் அப்படியல்ல. தொழுநோயாளர்கள் மத்தியில் பணியாற்றியவர். அவர் படுகொலை செய்யப்பட்ட நாளில் கூட அவர் உணவருந்தியது தொழுநோயாளர் இல்லத்தில், தொழுநோயாளிகளோடு தான். அவர்களைத் தொடவோ, அவர்களுக்குப் பணிவிடை செய்யவோ அவருடைய இதயம் கடுகளவும் தயங்கியதில்லை.

    இயேசு வாழ்ந்த காலத்தில் தொழுநோய் என்பது பாவத்தின் விளைவு என நம்பினார்கள். தொழுநோயாளிகள் அழுக்கடைந்த, கிழிந்த ஆடைகளைத் தான் உடுத்தவேண்டும். தலையை மூட வேண்டும். தொலைவில் இருந்தே தீட்டு தீட்டு என கத்திக் கொண்டே செல்ல வேண்டும். ஊருக்கு ஒதுக்குப்புறமாய்த் தான் வசிக்க வேண்டும். குறைந்தது ஆறு மீட்டர் தொலைவில் நின்று தான் பேச வேண்டும்.

    அவர்களைத் தொட்ட காற்று தொட்டால் தீட்டு, அவர்கள் நகருக்குள் நுழைந்தால் நகர் தீட்டு இவ்வாறு தொழுநோயாளிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டு இருந்தனர்.

    ஆனால், இயேசு மனிதர்களை அன்பினால் அளவிடக் கூடியவர். அவர்கள் இறைவனின் பிம்பங்கள் என்பதைப் புரிந்தவர். ஒரு தொழுநோயாளியை நிராகரிப்பவனும் கடவுளையே நிராகரிக்கிறார் எனும் உண்மை உணர்ந்தவர். அதனால் அவர் தொழுநோயாளரைத் தொட்டார், அவர்களோடு உலவினார், அவர்களோடு விருந்துண்டார்.

    அவரது அன்பின் நீட்சியாகப் பணியாற்றிவர் தான் கிரகாம் ஸ்டெயின்ஸ். ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர் நினைத்திருந்தால் வளமான வாழ்க்கையை அங்கே வாழ்ந்திருக்கலாம். பிள்ளைகளை டாக்டர் ஆக்கியிருக்கலாம். ஒரு சொகுசான வாழ்க்கையில் இருந்து கொண்டே கொஞ்சம் காணிக்கை, கொஞ்சம் நற்செய்தி என இதயம் கசங்காமல் நற்செய்தி அறிவித்திருக்கலாம். ஆனால் அவர் உண்மையான இயேசுவின் தொண்டர். பழைய கால மிஷனரிகளைப் போல அளப்பரிய களப்பணிக்காய் தன்னை அர்ப்பணித்தார்.

    அவரும் அவரது இரண்டு மகன்கள் பிலிப் மற்றும் திமோத்தி இருவரும் இறைவனிடம் செபித்துவிட்டு ஜீப்பில் படுத்து உறங்குகிறார்கள். நரிகளுக்கு வளைகள் உண்டு, வானத்துப் பறவை களுக்கு கூடுகள் உண்டு தொழுநோயாளரிடம் பணியாற்றும் கிரகாம் குடும்பத்துக்கோ ஜீப் மட்டுமே உண்டு.

    அன்பின் விதைகளைத் தூவி நடந்தவர்களை, மதத்தின் கொம்பு சீவி விடப்பட்டவர்கள் சந்திக்கிறார்கள். எந்த மதமும் சொல்லித்தராத வன்முறையை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். கனவுகளோடு துயின்றவர்களை கனல்களால் எரித்துத் தீர்க்கிறார்கள். எட்டு வயது, பத்து வயது என துள்ளித் திரிந்த பிள்ளைகளைக் கூடவிட்டு வைக்க வேண்டுமென அந்த வெறியர்களுக்குத் தோன்றவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தார்கள்.

    தன் கணவன், மகன்கள் என மூன்று பேரைப் படுகொலை செய்த அந்த குடும்பத்தை கிளாடிஸ் மன்னித்துவிட்டார். சிலுவையின் உச்சியில் இயேசு நின்ற அதே அவஸ்தை. அதே மனநிலை. கால் நூற்றாண்டு கடந்து விட்டது. உலகம் அவரை வியப்பாய்ப் பார்த்தது.

    கிரகாம் ஸ்டெயின்ஸின் படுகொலையைப் பார்த்துப் பதறியவர்கள், மனைவியின் விசுவாசத்தைப் பார்த்து நடுங்கினார்கள். கடவுளுக்காய் கொலை செய்வதா? கடவுளுக்காய் கொலையாளிகளையும் மன்னிப்பதா? மிகப்பெரிய கேள்வியை கிளாடிஸ் அன்றைக்கு விதைத்தார்.

    உலகில் அன்பைவிடப் பெரியதாய் எதுவும் இல்லை. அது தான் மனித மாண்பை மீட்டெடுக்கிறது. அது தான் சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் பேணிக்காக்கிறது. அன்பு இருக்கின்ற மனிதர் ஒரு அழகான தேசத்தைக் கட்டியெழுப்புகிறார்.

    அன்புக்காய் எதையும் இழப்போம். எதற்காகவும் அன்பை இழக்க மாட்டோம் எனும் சிந்தனையே இயேசுவின் வாழ்க்கையில் இருந்தது. அதையே நம் வாழ்விலும் கொள்வோம்.

    ×