search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "security upped"

    தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு போராட்ட குழுவினர் மற்றும் மக்கள் சார்பில் தூத்துக்குடி நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் நினைவு அஞ்சலி கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதையொட்டி தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மேற்பார்வையில் 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 28 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 103 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 280 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்து 300 போலீசார் மற்றும் 6 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உள்பட சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.



    தூத்துக்குடி சிப்காட் வளாகம், கலெக்டர் அலுவலகம், எப்.சி.ஐ. குடோன், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பகுதி, தென்பாகம் போலீஸ் நிலையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறும்போது, “பொதுமக்கள்-போலீஸ் உறவு நல்ல முறையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் மக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். தூத்துக்குடி மக்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுபவர்களாக உள்ளனர். தேவையான அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடக்க பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

    இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் தலைமையில் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாளை (அதாவது இன்று) எந்தவித சிறிய அசம்பாவிதமும் நடக்காமல் சிறந்த முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×