search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shantanu Thakur"

    • சிஏஏ மூலம் குடியுரிமை பெற விண்ணப்பிக்க முடியும் என மத்திய மந்திரி பேச்சு.
    • சிஏஏ மூலம் விண்ணப்பித்தால் மந்திரி பதவி பறிபோகிவிடும் என்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்.

    இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான இணைய தளம் மற்றும் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சிஏஏ-வை செயல்படுத்தமாட்டோம் என மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் மத்திய இணை மந்திரி ஷாந்தனு தாகூர், சிஏஏ மூலமாக குடியுரிமை பெற விண்ணப்பம் செய்வேன் எனக் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவரது மந்திரி பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இது தொடர்பாக ஷாந்தனு தாகூர் கூறுகையில் "ரிஜிஸ்டர் செய்யப்பட்ட சமூக அமைப்புகள் மூலம் பெறப்பட்ட சான்றிதழ் மூலம் கூட குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு நாங்கள் குடியுரிமை வழங்குவோம். நான் கூட குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பேன். இருந்த போதிலும் என்னுடைய பாட்டியின் அம்மா குடிபெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் குடியுரிமை பெற்றுள்ளனர். இதனால் நான் விண்ணப்பிக்க தேவையில்லை" என்றார்.

    மேலும், எதிர்க்கட்சிகளால் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. மம்தா பானர்ஜி என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும். குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதால், எனக்கு வசதிகள் இல்லாமல் போய் விடுமா? என்று பார்க்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், மத்திய இணை மந்திரி ஷாந்தனு தாகூரின் மத்திய மந்திரி பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பிரத்யா பாசு "ஷாந்தனு தாகூர் இந்திய குடிமகனாக இருந்து, ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், மீண்டும் குடியுரிமை கேட்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது" என்றார்.

    மற்றொரு தலைவர் சந்திரமா பட்டச்சார்யா "சாந்தனு தாகூர் எப்போது விண்ணப்பிப்பார் என்று நாங்கள் காத்திருக்கிறோம், ஏனெனில் அவர் விண்ணப்பித்தவுடன், அவர் இனி இந்திய குடிமகன் இல்லை என்பதால் அவரது அமைச்சர் பதவி போய்விடும்" என்றார்.

    ஷாந்தனு தாகூரின் மூதாதையர்கள் வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தன்னால் சிசிஏ-யின் கீழ் விண்ணப்பிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×