search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்துக்கட்சி"

    நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் 18-ந் தேதி தொடங்குகிறது. அதையொட்டி, நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்துகிறார். #LokSabhaSpeaker #SumitraMahajan
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், 18-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். நாளை இந்த கூட்டம் நடக்கிறது.

    அந்த கூட்டத்துக்கு முன்பாக, பல்வேறு கட்சி தலைவர்களை சபாநாயகர் தனித்தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது, எம்.பி.க்கள் அவரவர் பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

    மக்களவை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், ராகுல் காந்தியை சபாநாயகர் அழைத்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நான் வெளிநாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தேன். அப்போது, இந்திய நாடாளுமன்றம் அடிக்கடி முடங்குவது குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். இந்த மக்களவை பதவிக்காலத்தின் கடைசி ஆண்டில் நாம் நுழைந்துள்ளோம். இன்னும் 3 கூட்டத்தொடர்கள்தான் உள்ளன. அவற்றிலும், மழைக்கால கூட்டத்தொடரிலும், குளிர்கால கூட்டத்தொடரிலும்தான் மசோதா தொடர்பான பணிகளை கவனிக்க முடியும்.

    ஆகவே, எம்.பி.க்கள் அவரவர் பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க வேண்டும். முதல்முறை எம்.பி. ஆனவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

    கட்சி மேலிடத்தின் செல்வாக்குடன், வேட்பாளரின் நற்பெயரும் தொகுதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்சி மேலிடத்தின் செல்வாக்கால் மட்டுமே தொகுதியில் வெற்றி பெற முடியாது. எனவே, எம்.பி.க்கள் தங்களது நாடாளுமன்ற கடமைகளை ஆற்ற அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வாக்காளர்களின் நம்பிக்கையை அவர்கள் பெற முடியும்.

    எதிர்க்கட்சிகளின் யோசனைகளை பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாதுகாப்பது அனைத்து உறுப்பினர்களின் கூட்டு பொறுப்பு ஆகும்.

    இவ்வாறு சுமித்ரா மகாஜன் கூறினார்.  #LokSabhaSpeaker #SumitraMahajan #Tamilnews
    ×