search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை."

    நெல்லையில் 4 பள்ளிக்கூடங்களில் பணம் கொள்ளை போனது. ஒரே நாளில் அடுத்தடுத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    நெல்லை:

    நெல்லையில் 4 பள்ளிக்கூடங்களில் பணம் கொள்ளை போனது. ஒரே நாளில் அடுத்தடுத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    இந்த துணிகர கொள்ளை பற்றிய விவரம் வருமாறு:-

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூட நிர்வாகி நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பள்ளிக்கூட அலுவலக கதவு திறந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் அந்த பள்ளிக்கூடத்தின் கேமராவை கைப்பற்றினர். அதில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பள்ளிக்கூடத்தில் நடந்த இந்த கொள்ளை பரபரப்பு அடங்குவதற்குள் அதே பகுதியில் இன்னொரு பள்ளிக்கூடத்திலும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்திலும், நெல்லை தச்சநல்லூரில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்திலும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த 4 பள்ளிக்கூடங்களிலும் கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.

    பாளையங்கோட்டை கே.டி.சி.நகர், தியாகராஜநகர் பள்ளிக்கூடங்களில் நடந்த கொள்ளை குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாரும், தச்சநல்லூரில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பள்ளிக்கூடங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தை மர்மநபர்கள் அரங்கேற்றி உள்ளனர். எனவே ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ஏற்கனவே பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் சங்கர்நகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடத்திலும் ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், அந்த பள்ளிக்கூடங்களை குறி வைத்து மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வருவது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×