என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐகோர்ட் நீதிபதி"
- தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் தமிழ் பேசுவதை மேம்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
- செம்மொழி கல்லூரி அமைத்து தனி பயிற்சி கொடுக்க வேண்டும்.
சென்னை:
கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 51-வது ஆண்டு விழா சென்னை தி.நகர் வாணிமகாலில் நேற்று நடந்தது. விழாவுக்கு வேலூர் வி.ஐ.டி. வேந்தரும், தமிழியக்கம் தலைவருமான முனைவர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள பொருளாதார வளர்ச்சி ஏற்றத் தாழ்வு எந்த அளவுக்கு கவலை தரும் வகையில் உள்ளது என்பதை அவர் புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.
எழுத்தாளர்கள் துணிச்சலாக எழுதி, சமுதாய மேம்பாட்டுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றும் முனைவர் கோ.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டார்.
விழா மலரை தொழில் அதிபர் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட, தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொண்டார். கவிஞர் ஏர்வாடி ராதா கிருஷ்ணன் எழுதிய, "யாவரும் கேளிர்" என்ற நூலை டாக்டர் விஜய.ராஜமூர்த்தி வெளியிட எவர்வின் பள்ளிகளின் குழும தலைவர் புருசோத்தமன் பெற்றுக்கொண்டார்.
"வண்ணமில்லாமல் என்ன வானவில்" நூலை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் அவ்வை ந.அருள் வெளியிட சாந்தகுமாரி சிவகடாட்சம் பெற்றுக் கொண்டார். விழாவில் கவிதை உறவு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மரபு கவிதை, புதுக்கவிதை, மனித நேயம், வாழ்வியல், சிறுகதை, இலக்கிய கட்டுரை, பொது கட்டுரை, குழந்தை இலக்கியம், நாவல், கல்வி, இளைஞர் நலம், ஆன்மிகம், மத நல்லிணக்கம் ஆகிய பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. 32 எழுத்தாளர்கள் விருதுகளைப் பெற்றனர்.
விருதுகள் மற்றும் சிறந்த நூல்களுக்கான பரிசுகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இரா.சுரேஷ்குமார் வெளியிட்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் 130 நூல்களை எழுதி இருக்கிறார். அவரது நூல்களை ஆய்வு செய்து 8 பேர் எம்.பில் பட்டம் பெற்று உள்ளனர். 4 பேர் பி.எச்.டி. முனைவர் பட்டம் பெற்று உள்ளனர்.
ஏர்வாடி ராதா கிருஷ்ணன் கவிதைகள் மிக எளிமையாக இருக்கும். இதற்காக அவர் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது உள்பட எத்தனையோ விருதுகளை பெற்று உள்ளார். என்றாலும் அவரை "எளிமை கவிஞர்" என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
ஏர்வாடி ராதா கிருஷ்ணன் வங்கியில் பணி புரிந்தவர். அவர் வங்கிகளில் பயன்படுத்தப்படும் சுமார் 15 ஆயிரம் ஆங்கில சொற்களுக்கு தூய தமிழ் பெயரை தேர்வு செய்து கலை களஞ்சியம் தயாரித்து கொடுத்து உள்ளார். இது நிகரற்ற பணியாகும்.
நமது தொன்மை கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவது இலக்கியங்கள் தான். 2 ஆயிரம், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்வியலை நமக்கு இலக்கியங்கள்தான் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன. தற்போதுதான் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் தெரிய தொடங்கி உள்ளன.
ஒரு சமுதாயத்தை நெறிபடுத்தி மேம்படுத்துவதில் இலக்கியங்களுக்குத்தான் முக்கிய பங்கு உள்ளது. இலக்கியங்கள் மேம்பட்டால் தான் சமுதாயமும் மேம்படும். ஆனால் தமிழகத்தில் தமிழில் பேசவே தயங்குவது வேதனை அளிக்கிறது.
இந்த அரங்கில் உள்ள ஒவ்வொருவரும் தமிழ் மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்கிறார்கள். என்னை போன்றவர்கள் நீதித்துறையில் வரும் புதியவர்களுக்கு தமிழில் பேச வாய்ப்பு கொடுத்து உற்சாகப்படுத்துகிறோம்.
என்றாலும் தமிழகத்தை பொது இடங்களிலும், மேடை பேச்சுகளிலும் தமிழ் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவது அதிகரித்து வருகிறது. இன்றைய தலைமுறைக்கு தமிழில் பேசவும் தெரியவில்லை, எழுதவும் தெரியவில்லை.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழில் தேர்ச்சி பெறவில்லை. சமீபத்தில் வெளியான இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்விலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழ் மொழி தேர்வை எழுதவே வரவில்லை. இதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை மட்டும் குறை சொல்லக்கூடாது.
இதில் தமிழ் ஆசிரியர் களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மீது உள்ள ஆர்வத்தை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும். தமிழ் என்றால் இனிமை, அமுது என்று எளிமைப்படுத்தி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் சொல்லி கொடுத்தால் தாய் மொழி தமிழில் நிச்சயம் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.
தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் தமிழ் பேசுவதை மேம்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதற்கு ஆசிரியர்களை நாம்முதலில் தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு செம்மொழி கல்லூரி அமைத்து தனி பயிற்சி கொடுக்க வேண்டும். அந்த தமிழ் பயிற்சியில் வெற்றி பெறுபவர்களையே தமிழ் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
இதற்காக தமிழகத்தை சென்னை, கோவை, நெல்லை அல்லது மதுரை, திருச்சி என்று 4 மண்டலங்களாக பிரித்து ஒரு மண்டலத்துக்கு ஒரு செம்மொழி கல்லூரி உருவாக்க வேண்டும். இதை இந்த அரங்கில் இருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு இரா.சுரேஷ் குமார் பேசினார்.
விழாவில் கவிஞர் முத்துலிங்கம், இயக்குனர் எஸ்.பி.முத்து ராமன் உள்பட ஏராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்