search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துகுவிப்பு வழக்கு"

    • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • ரூ.45.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட 9 மாவட்டங்களில் 11 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

    அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள் என ஒட்டு மொத்தமாக 56 இடங்களில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 120-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு மாநகராட்சியில் கெங்கேரி மண்டலத்தில் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து வரும் பசவராஜ் மாகி வீட்டிலும் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது.

    மேலும் பெங்களூரு, கலபுரகியில் உள்ள பசவராஜ் மாகிக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன. அவரது வீடுகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணம் சிக்கியது.

    மேலும் அவருக்கு பெங்களூருவில் 5 வீடுகளும், கலபுரகியில் தனது பெயர் மற்றும் சகோதரி பெயரில் 5 வீடுகள் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியது. இதுதவிர பசவராஜ் மாகியின் தாய் பெயரில் 50 ஏக்கர் நிலம் இருப்பதும் தெரியவந்தது.

    பெங்களூரு வடக்கு தாலுகா தாசனபுரா கிராம பஞ்சாயத்து செயலாளர் ஜெகதீசுக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீடு, ஹாசன் மாவட்டத்தில் உள்ள வீட்டிலும் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி பணம், வாகனங்கள், நகைகள், சொத்து ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    மேலும் மண்டியாவில் ஓய்வு பெற்ற என்ஜினீயர் சிவராஜ், அவரது உறவினர் வீட்டிலும், மைசூரு மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறை என்ஜினீயராக இருந்து வரும் மகேஷ், பெலகாவி மாவட்டத்தில் நிர்மிதி மையத்தின் திட்டமிடுதல் அதிகாரி சேகரகவுடா, ராமநகர் மாவட்டம் ஆரோஹள்ளி தாசில்தார் விஜியண்ணா, பெலகாவி மாவட்ட பஞ்சாயத்து உதவி என்ஜினீயர் மகாதேவ் பன்னூர், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித் துறை என்ஜினீயர் ஜெகதீஷ் ஆகியோரின், வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தாவணகெரே மாவட்டத்தில் தொழில்துறை என்ஜினீயராக பணியாற்றி வரும் உமேஷ், அதே மாவட்டத்தில் மின்வாரிய என்ஜினீயராக இருந்து வரும் பிரபாகர், சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு என்ஜினீயரான ரவீந்திராவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தி, தங்க நகைகள், பொருட்கள், சொத்து ஆவணங்களை கைப்பற்றி எடுத்துs சென்றுள்ளனர்.

    லோக் ஆயுக்தா போலீசார் சோதனைக்கு உள்ளான 11 அரசு அதிகாரிகளும் தங்களது வருமானத்தை விட சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    11 அதிகாரிகள் வீடுகளில் இருந்தும் ரூ.45.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லோக் ஆயுக்தா போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீசார் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலம் முழுவதும் 11 அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக் கணக்கான மதிப்புள்ள நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக பல மடங்கு சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர வங்கி லாக்கர் களிலும் பணம், நகை பதுக்கி வைத்திருந்தனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் பல்வேறு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 11 அதிகாரிகள் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கர்நாடகாவில் வால்மீகி மாநகராட்சி ஊழல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிகாரிகள் வீடுகளில் இருந்து கோடிக் கணக்கான சொத்துக்களை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குற்றவியல் விசாரணை முறை சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, இந்த ஐகோர்ட்டு செயல்பட்டுள்ளது.
    • ஒரு குற்ற வழக்கில், போலீசாரும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது.

    சென்னை:

    சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் வேலூர் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

    ஆனால், இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக்கூடாது. வேறு நீதிபதிதான் விசாரிக்க வேண்டும். சொத்துகுவிப்பு வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு மாற்றி ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவு சரியில்லை என்று கூறுவதால், ஐகோர்ட்டு பதிவுத்துறையையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பிலும், பொன்முடி தரப்பிலும் வாதிடப்பட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    பொன்முடி, விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் உள்ள நிலையில், இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதால், மேல்முறையீடு செய்யும் தங்களது உரிமை தடுக்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது.

    குற்றவியல் விசாரணை முறை சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, இந்த ஐகோர்ட்டு செயல்பட்டுள்ளது. இதனால், போலீசாரின் மேல்முறையீடு செய்யும் உரிமை எதுவும் பறிக்கப்படவில்லை.

    மேலும், தாமாக முன்வந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் முடிவு ஒருவேளை கீழ் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அமைந்தால், அது போலீசாருக்கு சாதகமானது தானே? ஆனால், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கோரிக்கை வியப்பாக உள்ளது.

    இந்த வழக்கில் ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவை குற்றம்சாட்டுவதால், ஐகோர்ட்டு பதிவுத்துறையை வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டு, தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள ஐகோர்ட்டுக்கு வலிமை இருக்கும்போது, ஐகோர்ட்டின் நிர்வாக தரப்புக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசாரும், பொன்முடி தரப்பும் எதற்காக மெழுகுவர்த்தி ஏந்தி வெளிச்சம் காட்ட வேண்டும்.

    ஒரு குற்ற வழக்கில், போலீசாரும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது. ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தோளில் அமர்ந்துகொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் துப்பாக்கியால் சுடுவது போல, ஒரே கோரிக்கையை முன்வைப்பது மர்மமாக உள்ளது. எனவே, இவர்களது கோரிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறேன்.

    இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது அரசுக்கும், பொன்முடிக்கும், ஐகோர்ட்டு நிர்வாகத்துக்கும் எதிராக கருத்து தெரிவித்துள்ளதால், இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறேன்.

    அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகளின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதால், கடந்த சில நாட்களாக ஒரு தரப்பினர் எதிரான எண்ணத்தில் உள்ளனர், ஆனால், விசாரணைக்கு எடுத்தது ஒரு நீதிபதி அல்ல. ஐகோர்ட்டு என்ற அமைப்பு என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

    குற்றவியல் வழக்கு விசாரணை என்பது தூய்மையாக, கறைபடியாதவாறு இருக்க வேண்டும். அதுபோல, இந்த ஐகோர்ட்டு உத்தரவு, தனிப்பட்ட நீதிபதிகளுக்கு எதிராகவும் இல்லை.

    எனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார், பொன்முடி ஆகியோர் தரப்பினர் விடுத்த கோரிக்கை அனைத்தையும் நிராகரிக்கிறேன்.

    இந்த வழக்கில் பதில் அளிக்க எதிர்தரப்புகளுக்கு அவகாசம் தேவைப்படும். அதேநேரம், அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், எந்தெந்த நீதிபதிகள், எந்தெந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து, தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார். அப்போது, எம்.பி.., எம்.எல்.ஏ., வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    ×