என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புராண வரலாறு"
- வாள் வச்ச கோஷ்டம் என்றால் வாளை வைத்த கோவில் என்று பொருள்.
- மகிஷாசுர மர்த்தினி தேவி திருவிதாங்கூர் மன்னர்களின் குடும்ப தேவதை.
இன்றைய குமரி நிலம் தொன்மையும், புராதன பாரம்பரியங்களும் மிக்க நிலம் என்றால் மிகையாகாது. இந்த நிலத்தில் வாழும் மக்களெல்லாம் நீண்ட பாரம்பரியம் கொண்ட வரலாற்றின் குழந்தைகள் என்று கூறலாம்.
நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைகள் செய்த செயல்கள் ஆகியவற்றை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பளிக்கின்றன. அறம் போதித்தவர்கள், ஆன்மிகம் வளர்த்தவர்கள் இந்த மண்ணில் ஏராளமானோர் இருந்திருக்கின்றனர். தெய்வங்கள் எழுந்தருளியதாக நம்பிக்கைக் கொள்ளும் இடங்களில் பெரும் கோவில்கள் கட்டிய மன்னர்களும், கோட்டைக் கொத்தளங்களுடன் ஆட்சியை தக்கவைக்க போர்களுடனேயே வாழ்ந்த மன்னர்கள் விட்டுச் சென்றுள்ள அடையாளங்கள் பல. அது பற்றிய பல்வேறு சம்பவங்கள் இப்போதும் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குமரி நிலத்தின் ஒவ்வொரு ஊரின் பெயரின் பின்னாலும் ஒரு கதையுடன் கூடிய வரலாறு இருக்கின்றது.
குமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த ஊர் தான் வாள் வச்ச கோஷ்டம். வாள் வச்ச கோஷ்டம் என்றால் வாளை வைத்த கோவில் என்று பொருள் கொள்ளலாம். அதாவது போருக்கு பயன்படுத்தப்படும் வாளை வைத்த கோவில் என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்த ஊர் நாகர்கோவிலில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அழகான குளங்கள், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள், பச்சையாய் பரவி நிற்கும் வாழை மரங்கள், ரப்பர் மரங்கள் என இந்த ஊர் இயற்கை எழில் நிறைந்து காட்சி தருகிறது.
வாள் வச்ச கோஷ்டம் என்னும் இந்த அழகான ஊரின் பெயருக்கான காரணத்தை நாம் கண்டடைய வேண்டுமெனில் அதற்காக நாம் மன்னராட்சிக் காலத்திற்கும், அதற்கு முந்தைய புராண காலத்திற்கும் செல்ல வேண்டும். இந்த ஊரின் தனித்துவ அடையாளமாக அமைந்துள்ளது இங்குள்ள மகிஷாசுர மர்த்தினி கோவில் ஆகும்.
இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் மகிஷாசுர மர்த்தினி தேவி திருவிதாங்கூர் மன்னர்களின் குடும்ப தேவதையாக இருந்துள்ளார். மகிஷாசுர மர்த்தினி தேவியின் பாதத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன்பு தங்களது வாளை வைத்து வணங்கி முதற்குருதி தொட்டு கிளம்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இது போன்று மன்னர் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் நாட்டை விரிவாக்கம் செய்து பத்மநாப சுவாமிக்கு சமர்ப்பணம் செய்த பின்னர் தனது பெயரை பத்மநாபதாசன் என்று மாற்றியபிறகு மகிஷாசுரமர்த்தினி கோவிலுக்கு வந்து தேவியின் முன்பு தனது வாளை சமர்ப்பித்து வழிபட்டதால் இந்த கோவிலுக்கு வாள் வச்ச கோஷ்டம் என்று பெயர் வந்ததாகவும், இதுவே பின்னர் ஊரின் பெயராக நிலை பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கோவிலில் தமிழ், கிரந்தம், வட்டெழுத்து மொழி வடிவங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. கோவிலின் தெற்குப் பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு, வேணாடு மன்னரின் உதவியுடன் அரங்க நாயகம் என்பவரால் கி.பி. 1234-ல் கட்டப்பட்டதாகக் கூறுகிறது. வீர ரவி கேரள வர்மன். கருவறை முன்புறம் உள்ள முகமண்டபம் முள்ளமங்கலம் திருவிக்கிரமன் நம்பூதிரியால் கி.பி.1620-ல் கட்டப்பட்டதாக கூறுகிறது.
இக்கோவிலின் உள்பகுதியிலிருந்து ஒரு சுரங்கப்பாதை செல்கிறது. இது பத்மநாபபுரம் அல்லது சாரோடு அரண்மனைக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது இந்தச் சுரங்கப்பாதை மூடிய நிலையில் உள்ளது.
இந்த கோவிலை மகாபாரத கதையுடன் இணைத்து கூறப்படுவதும் உண்டு. பாண்டவர்கள் 14 ஆண்டுகள் வன வாசத்திற்கு செல்லும் முன்பு தங்களது ஆயுதங்களை மகிஷாசுரமர்த்தினி குடி கொண்ட இந்த இடத்தில் வைத்து பூஜை செய்ததாகவும், பரசுராமர் ரத்தம் சிந்துவதை நிறுத்தும் வகையில், இங்கு வந்து தனது வாளைக் கழுவி தேவியின் முன்பு வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கோவிலை ஒரு சிற்பக் கலையின் பொக்கிஷம் என்று கூறினால் அதில் மிகையில்லை. அந்த அளவுக்கு இக்கோவிலின் வாசலில் காட்சி தரும் துவார பாலகிகள் முதல் உள் மண்டபங்களின் தூண்களில் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ள தெய்வங்களின் சிலைகள் வரை ஒவ்வொன்றும் காண்போரை வியப்படைய செய்கின்கின்றன. இவையெல்லாம் அன்றைய சிற்பக் கலைக்கு கட்டியம் கூறுவதாகவும் உள்ளன.
இந்த கோவிலில் மகிஷாசுர மர்த்தினி தேவி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த கோவிலாக மகிஷாசுர மர்த்தினி எழுந்தருளியுள்ள இக்கோவில் பார்க்கப்படுகிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள மகிஷாசுர மர்த்தினி கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினரும் மாதம் தோறும் இங்கு வந்து வழிபட்டும், சிறப்பு பூஜைகளும் செய்கின்றனர்.
இப்போது மகிஷாசுர மர்த்தினி கோவிலும் வாள் வச்ச கோஷ்டம் ஊரும் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. வாள் வச்ச கோஷ்டம் ஊரில், குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற 12 சிவாலயத் திருத்தலங்களில் 11 -வது சிவாலயமான திருப்பன்றிகோடு மகாதேவர் ஆலயம், மும்மத வழிப்பாட்டுத் தலமான பள்ளியாடி பழைய பள்ளி திருத்தலம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. வாள் வச்ச கோஷ்டம் தற்போது பேரூராட்சியாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்