என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Rain"
- சென்னை புளியந்தோப்பில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
- புளியந்தோப்பு டிமெல்லர்ஸ் சாலையில் கே.பி. பூங்கா அருகே இன்று காலையிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி கிடந்தது.
சென்னை:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது.
7 மணி அளவில் தூறிக் கொண்டிருந்த மழை இரவு 10 மணிக்கு பிறகு பலத்த மழையாக மாறியது. சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் இரவில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் வாகனங்களில் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், சைதாப்பேட்டை, வேப்பேரி, பூக்கடை, புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கையூர், அண்ணாநகர், சூளைமேடு, கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், மதுரவாயல், போரூர், கே.கே.நகர், கிண்டி உள்ளிட்ட சென்னையின் அனைத்து பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய மழை பெய்தது.
இரவில் பெய்த பலத்த மழையால் சாலையில் மழை நீர் தேங்கினாலும் சில இடங்களில் மழைநீர் உடனடியாக வடிந்தது. ஆனால் சென்னையில் சில இடங்களில் இன்று காலையிலும் வெள்ளம் வடியாமல் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை புளியந்தோப்பில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. புளியந்தோப்பு டிமெல்லர்ஸ் சாலையில் கே.பி. பூங்கா அருகே இன்று காலையிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி கிடந்தது.
இதனால் இன்று காலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புளியந்தோப்பு, பெரம்பூர், அயனாவரம், சென்ட்ரல், பாரிமுனை, வேப்பேரி போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் இந்த சாலையையே பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
இன்று காலையில் தண்ணீர் சற்று வடியத் தொடங்கியது. அங்கு மோட்டார் பம்பு மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களிலும் மழைநீர் தேங்கி கிடந்தது. பட்டாளம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் இந்த வழியாக சென்ற வாகனங்கள் பழுதானது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்றனர்.
ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு நேற்று இரவு பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீர் உடனே அகற்றப்பட்டது. ராயப்பேட்டை ஜி.பி. சாலையிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை பகுதியிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.
ராயபுரம் ராஜகோபால் தெரு, லோட்டஸ் ராமசாமி தெரு, புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகர், திருவள்ளூர் குடியிருப்பு, இளையதெரு ஆகிய இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
பழைய வண்ணாரப்பேட்டை சி.பி.சாலை ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வ.உ.சி.நகர் 28-வது குறுக்குத்தெரு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கீழ் தளத்தில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளில் இருக்கும் மழைநீரை வாளிகள் மூலம் பொதுமக்கள் எடுத்து வெளியே ஊற்றி வருகின்றனர்.
அதேபோல் பெரம்பூர் சுரங்கப்பாதையிலும் இன்று காலையில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலத்தில் நேற்று இரவு மழை பெய்தபோது தண்ணீர் தேங்கியது. இன்று காலையில் வடிந்தது.
சென்னை மந்தவெளி சி.ஐ.டி. காவலர் குடியிருப்பில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்பு வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு மோட்டார் பம்பு மூலம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் மழைநீர் வடிகால்வாய் வழியாக அப்புறப்படுத்தப்படுகிறது.
திருவொற்றியூர் மேற்கு பகுதி ஆதிதிராவிடர் காலனியில் மழை வெள்ளம் இடுப்பு அளவு தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.
திருவொற்றியூர் ராஜா சண்முகபுரம், ராஜா சண்முகம் நகர் பகுதிகளில் மழைநீர் நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனுக்குடன் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலம் அருகே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மணலியில் கண்ணபிரான் தெரு, வேலு தெருக்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதே போல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
சென்னையில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்துவதற்காக மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளன. தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்குவது பற்றிய தகவல் கிடைத்தவுடன் உடனுக்குடன் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மழை காரணமாக மரம் விழுந்தாலும், கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டாலும், மின்வெட்டு, மின் கசிவு ஏற்பட்டாலும் அதை சரி செய்யவும், சீரமைக்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்தது. சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, கோடம்பாக்கம், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய இடங்களில் இன்று காலை 8 மணி அளவில் மழை பெய்தது.
இதேபோல் மீனம்பாக்கம், ஆலந்தூர், போரூர், நந்தம்பாக்கம், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் ஆகிய இடங்களிலும் இன்று காலையில் மீண்டும் மழை பெய்தது.
இதனால் இன்று காலையில் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும், நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை செங்குன்றத்தில் 12.7 செ.மீ, நுங்கப்பாக்கத்தில் 7 செ.மீ, மீனம்பாக்கத்தில் 3 செ.மீ, நாகர்கோவிலில் 2 செ.மீ மழை பெய்துள்ளது.
4 நாட்கள் மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் பெய்து வரும் கனமழையையொட்டி அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு வெள்ள தடுப்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு நேரில் சென்று தீவிரமாக ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் பகுதியில் இன்று காலை மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 220 கி.மீ. தூர அளவுக்கு ரூ.710 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. 157 கி.மீ. தூர அளவுக்கு பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.
இதுபோன்று பணிகள் முடிவடைந்த பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதற்கு முன்னர் 700 இடங்கள் வரையில் தண்ணீர் தேங்கி காணப்படும். தற்போது 40 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் 9 இடத்தில் மட்டுமே மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் செம்மஞ்சேரி பகுதிகளும் பாதிப்பை சந்தித்து வந்தது. இந்த பாதிப்புகளை சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக செம்மஞ்சேரி பகுதியில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. கல்லுக்குட்டை, புழுதிவாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.
ஓரிரு இடங்களில் தேங்கும் மழைநீரும் ½ மணி நேரத்தில் வடிந்து விடுகிறது. கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பணிகள் நடைபெற்றதால் அங்கு இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. இங்கு தேங்கும் தண்ணீர் வடிவதற்கு ஒரு வாரம் வரை ஆகும். ஆனால் தற்போது 2 இஞ்ச் அளவுக்கு அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலை மற்றும் பி.டி.ராஜன் சாலை பகுதியில் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டார். இதனால் கால்வாய் ஆக்கிரமிப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் இந்த மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 155 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது நடத்தப்பட உள்ள மருத்துவ முகாம்களின் போது மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த முறை மழை பெய்ய தொடங்கிய உடனேயே சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கி இருந்ததை காண முடிந்தது. இதனால் பல சுரங்க பாதைகள் மூடியே கிடந்தன. ஆனால் தற்போது கணேசபுரம் சுரங்கபாதையில் மட்டுமே வாகன போக்கு வரத்து தடைபட்டுள்ளது. மற்ற 15 சுரங்க பாதைகளும் எப்போதும் போல செயல்படுகின்றன. மழை பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- சில இடங்களில் மிதமானதாகவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, நவ.2-
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது.
நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிறிது நேரம் ஓய்வதும் மீண்டும் கொட்டி தீர்ப்பதுமாக தொடர்கிறது.
மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிவடைந்த பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. ஓரளவு தண்ணீர் தேங்கி னாலும் மழை ஓயும்போது வடிந்து விடுகிறது.
ஆனால் உட்புற சாலை கள், தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மோட்டார் கள் மூலம் அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், செங்குன்றம், பூந்தமல்லி, மணலி, மாதவரம் உள் ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.
சிறு சிறு கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அந்த தண்ணீர் சாலைகளை சூழ்ந்தது.
சென்னையை பொறுத்த வரை 32 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 1-ந் தேதியன்று அதிகமழை பெய்துள்ளது. அதாவது நுங்கம்பாக்கத்தில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இதே நாளில் 13 செ.மீட்டரும், 1964-ம் ஆண்டு 11 செ.மீட்டரும் மழை பெய்து இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில இடங்களில் மிதமானதா கவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள வானிலை முன்னறி விப்பில் கூறி இருப்பதா வது:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் கூறப் பட்டுள்ளது.
கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சுநிற அலர்ட் கொடுக் கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் வருமாறு:-
சென்னை, செங்கல் பட்டு, காஞ்சீபுரம், ராணிப் பேட்டை, வேலூர், திருவண் ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட் டங்களில் இன்று 2-வது நாளாக பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை விடப் பட்டு உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் வசிப் பவர்கள் கவனமாக இருக் கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார்கள்.
சென்னை மாநகர பகுதி யில் 19,500 ஊழியர்கள் வெள்ள நிவாரண பணி களில் ஈடுபட்டுள்ளார்கள் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குதல், தேங் கிய தண்ணீரை மோட்டார் கள் மூலம் அகற்றும் பணி களை செய்து வருகிறார்கள்.
கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
நுங்கம்பாக்கத்தில் நேற்று காலை வரை 8 செ.மீ. மழை பெய்திருந்த நிலையில் நேற்று முதல் இன்று காலை வரை அதை விட அதிகமாக பெய்துள் ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 12.9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் மீனம் பாக்கத்தில் 10.2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
- கணேசபுரம் சுரங்கப் பாதை முழுவதும் மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
- ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதன் உள்ளே அனுமதிக்கப்படாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் மழை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இருப்பதாவது:-
மழைநீர் பெருக்கு காரணமாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம், வியாசர்பாடி, கணேசபுரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளன.
ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை சேறும் சகதியுமாக உள்ளதால் இரண்டுசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கணேசபுரம் சுரங்கப் பாதை முழுவதும் மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதன் உள்ளே அனுமதிக்கப்படாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கணேசபுரம் சுரங்கப் பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின்பாலம் வழியாகவும், வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து உள்வரும் மாநகர பஸ்களும் பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பிலிருந்து திருப்பி விடப்பட்டு பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம், பெரம்பூர் பாலம் வழியாக செல்கிறது.
வெளிச்செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பில், ஓட்டேரி, ஜமாலியா வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.
ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதன் உள்ளே அனுமதிக்கப்படாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்து.
கணேசபுரம் சுரங்கப் பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும், வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அபிராமபுரம் 3-வது தெரு, கீழ்ப்பாக்கம் மகரிஷி பள்ளி அருகில் ஆகிய 2 இடங்களிலும் மரங்கள் விழுந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீர் இரவு பகலாக நடந்த தீவிர பணியின் மூலம் உடனடியாக வெளியேற்றப்பட்டது.
- இன்னும் 15 இடங்களில் மட்டுமே மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதில் மழைநீர் தேங்கக் கூடிய பகுதிகளில் மோட்டார் பம்ப்செட் வைத்து தண்ணீரை வெளியேற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டன.
536 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த முறை மழைநீர் தேங்கிய 156 இடங்களுக்கு மோட்டார் பம்ப் செட் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் இந்த முறை மழைநீர் தேங்காததால் அவை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.
65 இடங்களில் மட்டுமே மழைநீர் அதிகளவு தேங்கியதை அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த பகுதியில் மட்டுமே மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டன.
50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீர் இரவு பகலாக நடந்த தீவிர பணியின் மூலம் உடனடியாக வெளியேற்றப்பட்டது. இன்னும் 15 இடங்களில் மட்டுமே மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை 19 மரங்கள் பல்வேறு பகுதிகளில் விழுந்தன.
இதற்கு, மாநகராட்சிக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஊழியர்கள் மரத்தை துண்டு துண்டாக அறுத்து போக்குவரத்தை சீராக்கினார்கள். கொட்டும் மழையிலும் இந்த பணி நடந்தது.
- ஆப் மூலம் புக் பண்ணினால் எளிதில் புக் ஆவதில்லை. புக் ஆனாலும் இரு மடங்கு கட்டணம் கேட்பார்கள்.
- வாடிக்கையாளர்கள் செயலியில் இவ்வளவுதானே கட்டணம் வந்துள்ளது என்று கேட்டால் மழை நேரம் கூடுதல் கட்டணம் தந்தால் தான் முடியும் என்று கூறி விடுகிறார்கள்.
சென்னை:
சென்னையில் மழை வந்தால் பொதுமக்களுக்கு திண்டாட்டம். ஆனால் வாடகை கார், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொண்டாட்டம் தான்.
மழை நேரம் என்பதால் அலுவலகங்கள் மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் ஓலா, ஊபர் கார் மற்றும் ஆட்டோக்களை நாடினார்கள். பெரும்பாலும் எல்லோரும் போன்களில் ஓலா, ஊபர் செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்து உள்ளனர்.
இந்த ஆப் மூலம் புக் பண்ணினால் எளிதில் புக் ஆவதில்லை. புக் ஆனாலும் இரு மடங்கு கட்டணம் கேட்பார்கள்.
வாடிக்கையாளர்கள் செயலியில் இவ்வளவுதானே கட்டணம் வந்துள்ளது என்று கேட்டால் மழை நேரம் கூடுதல் கட்டணம் தந்தால் தான் முடியும் என்று கூறி விடுகிறார்கள்.
அதில் பலர் சவாரியை ஏற்ற பிறகு வருவதில்லை. அந்த டிரிப்பை அவர்கள் ரத்து செய்யவும் மறந்து விடுகிறார்கள். வாடிக்கையாளர்கள் ரத்து செய்தால் ரூ.50 வசூலிப்பார்கள்.
எழும்பூரில் இருந்து அயனாவரம் பஸ் நிலையத்துக்கு ஆட்டோ கட்டணம் செயலியில் ரூ.117 காட்டியது. ஆனால் டிரைவர்கள் ரூ.200 கேட்டனர். இதே போல் கார் வாடகை ரூ.150 ஆக இருந்தது. ஆனால் ரூ.250 வசூலித்தார்கள்.
- இருமல், சளி இருப்பவர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
சென்னை:
சென்னையில் மழை பெய்யும் போதெல்லாம் கூடவே நோய் பரவலும் அதிகரித்து விடும். இதை கருத்தில் கொண்டு தற்போது வடகிழக்கு பருவமழை கடும் சீற்றத்துடன் பெய்ய தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவ துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
சென்னையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் இன்னமும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. தற்போது மழைக்காலத்தில் இந்த வைரஸ் பரவல் அதிகரிக்கும் சூழல் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இருமல், சளி இருப்பவர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
தொடர் மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசுவதால் காய்ச்சல் பரவவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
மழைக்காலத்தில் பொதுவாக இதய நோய் பிரச்சினை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பார்கள். அது போக குழந்தைகளை வைத்திருப்பவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
பருவமழைக்கு ஏற்ப சென்னை மருத்துவமனையில் தேவைக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் கையிருப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
- நாளை (4-ந்தேதி) தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. 31-ந்தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது.
வட மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்தது. 2 நாட்களாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். நாளை (4-ந்தேதி) தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யும்.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு வெயில் இன்று தலைகாட்டியது. இதையடுத்து 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.
சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்ததால் குழிகள் உள்ள பகுதிகளில் கற்கள் போட்டு நிரப்பப்படுகின்றன. இடைவிடாத மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள் இன்று வழக்கம்போல பணிகளை மேற்கொண்டனர்.
- மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்.
சென்னை:
சென்னையில் மீண்டும் நேற்று மழை பெய்ததால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு கொளத்தூரில் நடந்த பணிகளை இன்று ஆய்வு செய்தார்.
அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நேற்று இரவு முதல் பெய்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. புதிதாக கால்வாய் கட்டாத பகுதியிலும் ஏற்கனவே உள்ள பகுதியிலும் நின்ற மழைநீரை மின்மோட்டார் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. சேரும் சகதியும் கூட அகற்றப்பட்டுள்ளது.
மேலும் தி.மு.க. சார்பில் மருத்துவ முகாம்கள் 4 இடங்களில் நடக்கிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீர் முழுமையாக அகற்றும் பணி முடிந்தவுடன் சென்னை முழுவதும் சாலைகள் சீரமைக்கப்படும். இதற்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். மழை முடிந்தவுடன் சாலைகள் செப்பனிடும் பணி தொடங்கும்.
கடந்த 10 வருடமாக அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளாததால் தான் சென்னையில் மழைநீர் தேங்கியது. அவர்கள் அந்த பணியை செய்திருந்தால் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும். தூர்வாரும் பணியை செய்யாததால்தான் சென்னை பாதித்தது.
முதல்-அமைச்சர் 1000 கி.மீ தொலைவிற்கு மழை நீர் கால்வாய் பணிகளை செய்ய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தென் சென்னை, மத்திய சென்னை பகுதியில் அறவே தண்ணீர் தேங்கவில்லை.
வட சென்னையில் கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதுவும் ஓட்டேரி கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மழைநீர் தேங்கியது.
கொளத்தூர் கன்னித்தீவு போல இருப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது வேறு நினைவை ஏற்படுத்துகிறது. அவர் போகிற கன்னித்தீவு வேறு. அவர் கட்சியில் தான் இருப்பதை காட்டிக்கொள்ளவே இது போன்று பேசுகிறார்.
மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்.
நிதி ஒதுக்கி செயல்படுத்தியது யார் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் செய்கிறோம்... செய்கிறோம்... என்றார்கள். ஆனால் கடைசி வரை செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறையும் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.
- 3 நாட்களில் மழை நீர் தேங்கிய பள்ளிகளை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் ஒரு இடங்களில் மழை நீர் தேங்கியது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர்.
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி வளாகம் மற்றும் மைதானத்திலும் மழை நீர் தேங்கி நின்றது. குளம் போல தேங்கி நின்ற மழை நீரால் 5 பள்ளிகளில் நேற்று முழுமையாக வகுப்புகள் நடைபெறவில்லை. மாணவர் பாதுகாப்பு கருதி ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் 15-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்கியது. அங்கு மின் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத வகையில் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் அறிவுறுத்தி உள்ளார்.
அதைத் தொடர்ந்து சென்னையில் அனைத்து பள்ளி கட்டிடங்கள், கழிவறை, வகுப்பறை போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர். மின் கசிவு ஏற்பட்டு உள்ளதா? எனவும் பரிசோதனை செய்கின்றனர்.
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறையும் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த 3 நாட்களில் மழை நீர் தேங்கிய பள்ளிகளை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- குடிநீர் ஏரிகளில் கடந்த 31-ந்தேதி நிலவரப்படி 6,629 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.
- இன்றைய நிலவரப்படி 7 ஆயிரத்து 224 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக தெளிய விட்டு தெளிய விட்டு போட்டு தாக்குகிறது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புறநகர் பகுதியிலும் மழை வெளுத்து கட்டுவதால் சென்னையின் நீர் ஆதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர் தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த குடிநீர் ஏரிகளில் கடந்த 31-ந்தேதி நிலவரப்படி 6,629 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்றைய நிலவரப்படி 7 ஆயிரத்து 224 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது.
சென்னைக்கு ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீர் கடந்த 3 நாட்களில் பெய்த மழையால் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு வருமாறு:-
தண்டையார்பேட்டை-14 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம், கோவை, மேட்டுப்பாளையம்-12 செ.மீ., பெரம்பூர், வேதாரண்யம், காயல்பட்டினம்-10 செ.மீ.
கயத்தாறு, கடம்பூர், சென்னை கலெக்டர் அலுவலகம்-8 செ.மீ., அயனாவரம், அண்ணா பல்கலைக்கழகம், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், ரெட்ஹில்ஸ், கடலூர் கலெக்டர் அலுவலகம்-7 செ.மீ., கோடியக்கரை, நாங்குனேரி, விருதுநகர், திருத்துறைப்பூண்டி, ஆவடி பேச்சிப்பாறை-6 செ.மீ., தூத்துக்குடி, திருக்கோவிலூர், பரணியார், நத்தம், திருவாலங்காடு-5 செ.மீ., மதுரை, துவாக்குடி, தாம்பரம், பாளையங்கோட்டை, அதிராம்பட்டினம், சிவகிரி, கொரட்டூர், வில்லிவாக்கம்-4 செ.மீ.
- புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 10-ந்தேதி வியாழக்கிழமை மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அது தமிழக கடலோரத்தின் அருகே வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை:
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக மாநில ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அது வலுப்பெறும் தன்மையை பொறுத்து தான் அது புயலாக மாறுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.
புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 10-ந்தேதி வியாழக்கிழமை மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அது தமிழக கடலோரத்தின் அருகே வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அது வலுவடைவதைப் பொறுத்தும் மற்றும் நகரும் திசையை பொறுத்தும் அது தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழை பொழிவை கொடுக்கும் என்பது தெரிய வரும். ஏற்கனவே தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்துள்ள நிலையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்த வாரம் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தின் வட மாவட்டங்களில்தான் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் அடுத்த வார இறுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெரும்பாலான வானிலை ஆய்வாளர்கள் அடுத்த வாரம் சென்னையில் மழை சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.