search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச உளவு அமைப்பு"

    • கடந்த 14 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் நீடித்து வருகின்றன.
    • பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானபடி இருக்கிறது.

    சென்னை:

    இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது.

    90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள் விடுதலைப்புலிகளின் இயக்ககத்தை பயங்கரவாத அமைப்பு போல கருதி தடைகள் விதித்தன. அது மட்டுமின்றி கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் நடந்த போது அந்த நாடுகள் இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்தன.

    சர்வதேச நாடுகளிடம் பெற்ற ஆயுதங்களை கொண்டு 2009-ம் ஆண்டு மே மாதம் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இறுதியாக முல்லி வாய்க்கால் பகுதியில் நடந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அவரது மனைவி, மகள், மகன்களும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது.

    ஆனால் பிரபாகரனும், மனைவி, மகள் ஆகியோரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியானது. அன்று முதல் கடந்த 14 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் நீடித்து வருகின்றன. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானபடி இருக்கிறது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பிரபாகரனின் மனைவி, மகள் உயிரோடு இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இதை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு சாரார் மறுத்தனர்.

    பிரபாகரன் மனைவி, மகள் பெயரில் சிலர் நிதி வசூல் செய்து முறைகேடு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சர்ச்சைக்கு மத்தியில் பிரபாகரன் மகள் துவாரகா பெயரில் நேற்று மாலை புதிய வீடியோ வெளியானது. அதில் துவாரகா போன்ற உருவ அமைப்புடைய ஒரு பெண் தோன்றி பேசினார்.

    துவாரகா பேசியது என வெளியான வீடியோவில் அந்த பெண் பேசுகையில், "சிங்களத்துக்கு எதிரான தமிழ்ஈழ அரசியல் போராட்டம் இன்னும் அப்படியேதான் உள்ளது. அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டம் முற்று பெறவில்லை" என்று கூறியிருந்தார். அதே சமயத்தில் சிங்களர்கள் தங்களுக்கு எதிரி அல்ல என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் இந்த வீடியோவை பார்த்தனர்.

    பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 27-ந்தேதியை எப்போதும் ஈழ தமிழர்கள் மாவீரர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த தினத்தில் இந்த வீடியோ வெளியானதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    14 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட துவாரகா சமூக வலைதளங்களில் தோன்றியதை ஈழ தமிழர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். ஆனால் இந்த வீடியோ குறித்து உடனடியாக சர்ச்சை கருத்துக்களும் வெளியானது.

    செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி துவாரகா பெயரில் போலி வீடியோ தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரது உடல் அமைப்புடன் மற்றொருவர் உடல் அமைப்பை மிக எளிதாக பொருத்தி மோசடி செய்வது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

    நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைப், கஜோல், ஆலியாபட் ஆகியோரது படங்களும் ஏஐ தொழில் நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்று துவாரகா பெயரிலும் போலி வீடியோ வெளியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    துவாரகா பெயரில் வெளியான வீடியோ குறித்து இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாட்டு உளவு அமைப்புகள் தீவிர ஆய்வு செய்து வருகின்றன. அந்த வீடியோ போலியானதாக இருக்கலாம் என்று சில உளவு அமைப்புகள் சந்தேகத்தை எழுப்பி உள்ளன.

    விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவினரும் அதை போலி வீடியோ என்று கூறியுள்ளனர்.

    ×