என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தைகளை சாப்பிட வைக்கும் முறை"
- குழந்தைகள் முதல் பருவ வயது குழந்தைகள் வரை காய்கறிகள் சாப்பிட மறுக்கின்றனர்.
- காய்கறிகளில் சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.
பலவித வண்ணங்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை பற்றிய விளம்பரங்களை நிமிடத்திற்கு ஒரு தரம் இடைவிடாது ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் கைவண்ணத்தில் சிறு குழந்தைகள் முதல் பதின் பருவ குழந்தைகள் வரை சத்தான காய்கறிகள் சாப்பிட மறுக்கின்றனர். இது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்கிறது. இதில் இத்தனை சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.
சத்து இல்லாத பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கும் குப்பை உணவுகளை உண்டு அந்த ருசிக்கு அடிமையான பின்பு காய்கறிகள் மற்றும் பழங்களின் சுவை பிள்ளைகளுக்கு பிடிக்காமலேயே போய் விடுகிறது. ஆனால், அதற்காக அப்படியே அவர்களை விட்டுவிட முடியாது. உறுதியான உடலுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் அவசியம். அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. முதலில் பிள்ளைகளை சாப்பிட வற்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும். தனக்கு பசி இல்லை என்று சொன்ன பின்பு அவர்களை வற்புறுத்த வேண்டாம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
2. சாப்பிடும்போது, முக்கியமாக டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டோ அல்லது செல்போனை பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை முதலில் இருந்தே ஊக்கப்படுத்தக் கூடாது. தட்டை பார்த்து சாப்பிடும்போதுதான் உணவின் சுவை தெரியும்.
3. இரண்டு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு தனி தட்டு கொடுத்து குடும்பத்தினருடன் சேர்த்து அமர வைத்து உணவு தர வேண்டும். அப்பா, அம்மா மற்றும் பெரியவர்களின் தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் காய்கறிகளை பார்த்து குழந்தையும் சாப்பிட ஆரம்பிக்கும்.
4. சில காய்களின் சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காது. காய்களின் வண்ணங்கள் மற்றும் அவை செய்திருக்கும் முறையை பார்த்தாலே அவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். கேரட், பீட்ரூட் போன்ற இனிப்பான காய்கறிகள் மற்றும் சுவையான உருளைக்கிழங்கு போன்றவற்றை சுலபமாக பிள்ளைகள் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால், புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்தமான முறையில் அது இருக்க வேண்டும்.
5. தட்டில் காய்களை பரிமாறும்போது நிறைய அளவு வைக்காமல் கொஞ்சமாக முதலில் வைக்க வேண்டும். அவற்றை சாப்பிட்டு முடித்த பின்பு அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.
6. சில அம்மாக்கள், 'நீ இந்த காய் சாப்பிட்டா சாக்லேட் தருகிறேன். பாப்கார்ன் தரேன். பிஸ்கட் தரேன்' என்று அவர்களை தவறான வழியில் ஊக்குவிப்பார்கள். கடமைக்கு அந்த காய்கறிகளை விழுங்கி விட்டு நொறுக்கு தீனிக்கு ஆசைப்பட்டு குழந்தைகள் நிற்கும். அந்த காய்களை பிடிக்காமல் போய்விடும்.
7. சரியான நேரத்திற்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த நொறுக்கு தீனியும் குளிர்பானங்களும் கொடுக்கக் கூடாது. சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.
8. காய்கறிகள் கூட்டு போன்றவற்றை பரிமாறும்போது கூடவே வடகம், அப்பளம் போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களை வைக்கக் கூடாது. அவற்றை எடுத்து உண்டு விட்டு காய்கறிகள் வேண்டாம் என்று பிள்ளைகள் தவிர்ப்பார்கள். எனவே அவற்றை தனியாகத் தருவதுதான் நல்லது.
9. காய்கறி வாங்க கடைகள் அல்லது மார்க்கெட்டுக்கு செல்லும்போது உடன் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களையே காய்கறிகளை தேர்ந்தெடுக்கச் சொல்லலாம். காய்கறிகளை கண்களால் பார்க்கும்போது குழந்தைகளுக்கு அவற்றின் மீது ஒரு ஈர்ப்பு, விருப்பம் உருவாகலாம்.
10. ஏழெட்டு வயது குழந்தை என்றால் அதை காய்கறிகள் நறுக்கும்போது உதவிக்கு அழைக்கலாம். மேல் தோல் சீவி விட்டு சிறிது சிறிதாக நறுக்கச் சொல்லி ஊக்கம் தரலாம்.
11. கதை சொல்வது போல அதில் உள்ள சத்துக்களை பற்றி எடுத்துச் சொல்லலாம். கேரட் சாப்பிட்டால் நல்லா கண்ணு தெரியும். உன் முகம் பளபளப்பாகும். கீரை சாப்பிட்டால் மூளை நல்லா வேலை செய்யும், முடி வளரும் என்பது போல சொல்லலாம்.
12. காய்கறிகள் செய்யும்போது இரண்டு விதமான காய்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு காய் பிடிக்காவிட்டால் கூட, இன்னொன்றை சாப்பிடச் சொல்லி சொல்லலாம்.
13. காய்கறிகள் சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர காய்கறிகளை அவர்கள் உண்ணும் உணவில் சேர்த்து விட வேண்டும். பீட்ரூட், கேரட், கீரை பொரியல்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவற்றை சாதத்தில் கலந்து கொடுக்கலாம். தோசை ஊற்றும்போது பீட்ரூட் பொரியலையோ கேரட் பொரியலையோ தூவி தோசை செய்து கொடுக்கலாம். பார்க்க வண்ணமயமாக இருக்கும். சுவையாகவும் இருக்கும். அவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.
14. வெரைட்டியாக காய்களை செய்து கொடுக்கலாம். காய்களை சூப்பில் போட்டுத் தரலாம். சப்பாத்தி ரோலில் காய்களை வேகவைத்துக் கொடுக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்