என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • நீங்கள் எத்தகைய குணம் படைத்தவர் என்பது பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது.
    • ஊட்டச்சத்துமிக்க, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.

    பெற்றோர் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், குணாதிசயங்கள், அன்றாட செயல்பாடுகள், பிறரிடம் பழகும் விதம், நட்பு-உறவுகளுடன் பேணும் நெருக்கம் உள்ளிட்ட வாழ்வியல் விஷயங்களை குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதன்படியே செயல்படவும் தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

    பெற்றோர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள், பேசும் தொனி போன்றவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அத்தகைய வார்த்தைகளை கேட்பதோடு மட்டுமல்லாமல் பெற்றோரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, ரகசியமாக பின்பற்றவும் செய்கிறார்கள். அப்படி கவனிக்கும் விஷயங்கள் பற்றியும், பெற்றோரின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.

    மன அழுத்தத்தை கையாளும் விதம்

    மன அழுத்தத்தில் இருக்கும்போது பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அந்த சமயத்தில் மற்றவர்களுடன் எப்படி பேசுகிறார்கள்? எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதையும் கவனத்தில் கொள்கிறார்கள். அந்த கடினமாக சூழலில் கத்துவது, பீதி அடைவது, மற்றவர்களை பற்றி புகார் செய்வது, மனக்குழப்பத்தில் இருப்பது என பெற்றோரின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்காணிக்கிறார்கள்.

    அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சமயத்தில் பெற்றோர் பின்பற்றிய அணுகுமுறையை செயல்படுத்தி பார்க்கவும் முன் வருவார்கள். அதனால் பெற்றோர் மன அழுத்தத்தில் இருக்கும் சமயத்தில் குழந்தைகளிடத்தில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். மன இறுக்கத்துடன் இருப்பது, சத்தமாக பேசுவது உள்ளிட்ட செயல்களை செய்யக்கூடாது. மன அமைதியை தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    உங்கள் உணர்ச்சிகளை குழந்தைகளிடத்தில் வெளிப்படுத்தி, ''நான் இப்போது மன அழுத்தத்தில் இருக்கிறேன். ரொம்பவே விரக்தி அடைந்துவிட்டேன். அதனால் மூச்சை ஆழமாக உள் இழுத்து வெளியிட்டு மனதை அமைதிப்படுத்த முயற்சிக்கப்போகிறேன்'' என்று கூறி அதனை குழந்தைகள் முன்னிலையில் செயல்படுத்தியும் காண்பிக்க வேண்டும். குழந்தைகள் அத்தகைய சூழலுக்கு ஆளாகும்போது மூச்சு பயிற்சியை பின்பற்ற வழிகாட்ட வேண்டும்.

    மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் சுபாவம்

    நீங்கள் எத்தகைய குணம் படைத்தவர் என்பது பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் குணத்தை நீங்கள் உச்சரிக்கும் வார்த்தையும் பிரதிபலித்துவிடும். வீட்டு பணியாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், உங்களை விட வயது குறைந்தவர்கள் என உங்கள் கட்டளைப்படி நடப்பவர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொண்டாலோ, கடுஞ்சொற்களை உச்சரித்து பேசினாலோ அதை பார்த்து குழந்தைகளும் தாமும் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.



    வேலை, சமூக அந்தஸ்து, பொருளாதார பின்னணியை பொருட்படுத்தாமல் அனைவரையும் மரியாதையுடன் நடத்துவது அவசியம் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய சமூக கடமை பெற்றோருக்கு இருக்கிறது. குழந்தைகள் அதன்படி நடக்க பெற்றோர் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

    மற்றவர்களிடம் அன்பாக பழக வேண்டும். பிறரை பார்த்ததும் புன்னகைப்பது, கண்களை பார்த்து பேசுவது, பணிவாக நடந்து கொள்வது போன்ற செயல்களை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதனை பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் வேண்டும்.

    உணவு - உடல் தோற்றம்

    நேர்த்தியாக உடை அணிவதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதை விட உடல் தோற்றத்தை பராமரிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் உடனே களமிறங்கி விட வேண்டும். முதலில் உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.

    ஊட்டச்சத்துமிக்க, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் அதனை பழக்கப்படுத்த வேண்டும். விரும்பிய எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற மனோபாவம் கொண்டிருந்தால் அதை பார்த்து குழந்தைகளும் பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். உண்ணும் உணவுகளில் எது நல்லது? எது கெட்டது? என்று முத்திரை குத்தினால் குழந்தைகளும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட பழகிவிடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் உடல் தோற்றம் பற்றி எதிர்மறையாக பேசுவதை தவிர்க்க வேண்டும். உடல் தோற்றத்தை பார்த்து மற்றவர்கள் விமர்சித்தாலும் அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலம் உடல் நலனை பராமரிக்க ஊக்குவிக்க வேண்டும்.

    குடும்ப நேரம்

    அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் நேரங்களிலும் செல்போனை உபயோகிப்பது குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை பாழ்படுத்திவிடும். அவர்களும் பெற்றோர் தங்களிடம் அன்பாக, அக்கறையாக நடந்துகொள்வதில்லை என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். பெற்றோர் வீட்டுக்குள் நுழைந்ததும் உற்சாகமாக ஓடோடி வரும் குழந்தைகளாக அவர்கள் வளர வேண்டும்.அதை விடுத்து செல்போனிலோ, டி.வி.யிலோ நேரத்தை செலவிட்டால் அவர்களும் அதே பழக்கத்தைத்தான் பின்பற்றுவார்கள். தினமும் இரவில் 'குடும்ப நேரம்' என்ற ஒன்றை நிர்வகிக்க வேண்டும். அந்த நேரத்தில் செல்போன் உள்ளிட்ட எதிலும் கவனம் செலுத்தாமல் குடும்ப விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்கள் கடந்த கால வாழ்க்கையை பற்றி பேசலாம். பள்ளியில் நடந்த விஷயங்களை குழந்தைகளிடம் கேட்டறியலாம்.

    குடும்ப நிர்வாகம்

    குடும்ப பொறுப்புகளை பெற்றோர் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதையும் குழந்தைகள் கவனித்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் முன்னிலையில் எந்த வேலையையும் அசட்டையாக செய்தாலோ, 'அந்த வேலையை பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று அலட்சியமாக பதில் அளித்தாலோ குழந்தைகளும் அதனை கருத்தில் கொள்வார்கள். அந்த வேலையை சுமையாக கருதினால் குழந்தைகளும் அவ்வாறே எண்ணுவார்கள்.

    அவர்களிடம் ஏதேனும் வேலை கொடுத்தால், அந்த வேலையை செய்ய விரும்பாதபட்சத்தில் பெற்றோரை போன்றே அலட்சியமாக நடந்து கொள்வார்கள். ஒரு வேலையை செய்ய முடியாவிட்டால், 'இன்று நான் பிஸியாக இருக்கிறேன். எப்படியாவது குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடித்துக்கொடுத்து விடுவேன்' என்று கூறுங்கள். அதன்படியே செயல்படவும் செய்யுங்கள். அதை பார்த்து குழந்தைகளும் அவ்வாறே செயல்பட பழகிவிடுவார்கள்.

    • பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது.
    • குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஓராண்டு பாடத்திட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்து, இப்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒருசில வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் பாடம் நடத்த நடத்த படித்து புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு மத்தியில், பாடங்களை இறுதியில் படித்து கொள்ளலாம் என நினைக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் சிலர், தாங்கள் நினைத்தபடியே இறுதியில் ஒட்டுமொத்தமாக படித்து 'பாஸ்' மார்க் வாங்குவதுடன், ஒருசிலர் கணிசமான மதிப்பெண்களை பெறுகிறார்கள். அத்தகைய மனபக்குவம் கொண்ட மாணவர்களாக நீங்கள் இருந்தால், இந்த செய்தி தொகுப்பு உதவியாக இருக்கும். தேர்வு நெருங்கிய இறுதி நேரத்தில், எப்படி பாடங்களை படிப்பது, எப்படி தேர்வுக்கு தயாராகுவது என்பதை அறிந்து கொள்வோம்.

    1. கால அட்டவணை

    பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது. என்ன தேர்வு முதலில் வர இருக்கிறது, அந்த தேர்வுக்கான பாடத்தின் முதல் பகுதி, கடைசி பகுதி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் பகுதி என பாடத்திட்டத்தை நீங்களே பிரித்தெடுத்து அதற்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, கால அட்டவணைக்கு ஏற்ப பாடங்களை படித்து, தேர்வுக்கு தயாராக வேண்டும்.

    2. வினா வகை

    குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும். என்ன வகையான வினாக்கள், எப்படிப்பட்ட அமைப்பை நமது பாடம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதில் அதிக மதிப்பெண் பெறும் முறையில் படிக்க வேண்டும்.

    3. துறை ரீதியாக தயாராகுதல்

    நீங்கள் படிக்கும் துறை சார்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். வரலாறு, உயிரியல், மொழி சார்ந்த பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அரசியல், விஞ்ஞானம், பொறியியல் போன்ற பாடங்களை நன்கு புரிந்து கொண்டு தயாராக வேண்டும். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களை தீர்வு காணும் வகையில் படிக்க வேண்டும்.

    4. அதிக முக்கியத்துவத்தை உணருதல்

    பாடத்திட்டத்தில் எந்த பகுதியை படித்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், எந்த பகுதியில் அதிக கேள்விகள் வரும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தேர்வுக்கு தயாராக வேண்டும்.

    5. உணவும், உறக்கமும்...

    உணவும் உறக்கமும் இரு கண்கள் என்று நினைத்துக் கொண்டு அளவோடு உண்டு உறங்குவது தேர்வு பயிற்சிக்கு மிகமிக முக்கியமானது. அதிகம் உண்டால் தேர்வின் போது தூக்கம் வரும். நீண்ட நேரம் விழித்திருந்தாலும் இதே பிரச்சினை தொடரும். எனவே அளவோடு உணவை உட்கொள்ள வேண்டும். எளிதில் செரிமானமாகும் உணவை தேர்வு செய்ய வேண்டும். கிரீன் டீ, சாக்லெட்டுக்கள் போன்றவற்றை அவ்வப்போது படிக்கும் நேரத்தில் சாப்பிட்டால் உற்சாகத்துடன் படிக்கலாம்.

    • குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
    • பிறர் முன்பு திட்டுவது குழந்தைகளின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும்.

    குழந்தைகள் எத்தகைய குணாதிசயம், சுபாவம் கொண்டவர்களாக விளங்குகிறார்கள் என்பதை பெற்றோரின் வளர்ப்புமுறைதான் தீர்மானிக்கிறது. அவர்கள் எந்த அளவுக்கு பொறுப்புணர்வோடு பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் வாழ்க்கை பாதை கட்டமைக்கப்படுகிறது.

    சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிள்ளைகள் பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பதற்கு பெற்றோரின் வளர்ப்பில் தென்படும் குறைபாடுகளே காரணமாக அமையும். அவை குறித்தும், அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.


    குழந்தைகளை பாராட்டுவதில்லை

    குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவை மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தாலோ, பாராட்டும்படியாக இருந்தாலோ மனதார வாழ்த்த வேண்டும். இன்னும் சிறப்பாக செயல்படும்படி ஊக்குவிக்க வேண்டும். அப்படி புகழ்ந்து பேசுவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

    'தாம் சிறப்பாக செயல்படுகிறோம்' என்று அவர்களும் தங்களை பற்றி பெருமை கொள்வார்கள். அப்படி அல்லாமல் குழந்தைகள் எது செய்தாலும் 'இதெல்லாம் ஒரு விஷயமா?' என்று பெற்றோர் சாதாரணமாக கடந்து செல்வது ஏற்புடையதாக இருக்காது. தாம் என்ன செய்தாலும் பெற்றோர் உற்சாகப்படுத்தமாட்டார்கள் என்ற மன நிலை பிள்ளைகளை ஆட்படுத்திவிடும்.

    பெற்றோர் தம்மை மதிப்பதில்லை என்ற மனநிலைக்கும் வந்துவிடுவார்கள். அது பிடிவாத குணத்தை அவர்களுக்குள் விதைப்பதற்கு அடித்தளமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர் ஊக்குவித்து கொண்டாட வேண்டும்.


    மற்றவர்கள் முன்பு விமர்சனம் செய்தல்

    பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டி திருத்துவது பெற்றோரின் கடமை. அதேவேளையில் அந்த தவறை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதோ, அவர்கள் முன்பு திட்டுவதோ பிள்ளைகளுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

    அப்படி பிறர் முன்பு திட்டுவது அவர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும். பெற்றோரின் கருத்துக்கு மதிப்பு கொடுக்காமல் பிடிவாதம் கொண்டவர்களாக மாறுவதற்கு வித்திடக்கூடும்.

    பெற்றோர் உச்சரிக்கும் எந்த வார்த்தையும் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்படி அமைந்துவிடக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகள் எதுவானாலும் அவர்களிடமே நேருக்கு நேர் பேசி அதனை சரி செய்வதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு அல்லாமல் கடுமையாக திட்டுவது மன ரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பெற்றோர் என்ன செய்தாலும் தம்மை கண்டிப்பார்கள் என்ற எண்ணம் உருவாகி, வீண் பிடிவாதம் அவர்களுக்குள் எழ வழிவகுத்துவிடும்.

    அதற்கு இடம் கொடுக்காமல் சிறு வயதிலேயே அவர்கள் செய்யும் தவறுகளை மென்மையான அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்வதற்கு வழிகாட்டினால் எதையும் சுமூகமாக எதிர்கொள்ளும் பக்குவம் கொண்ட பிள்ளைகளாக வளர்வார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் அது நலம் சேர்க்கும்.

    தன் நண்பர்களோ, உறவுகளோ தவறு செய்திருந்தாலும் அதனை அவர்கள் மனம் புண்படாதபடி திருத்திக்கொள்வதற்கு ஆலோசனை தரும் இடத்தில் இருப்பார்கள்.


    தக்க சமயத்தில் அறிவுரை வழங்காமல் இருத்தல்

    எந்தவொரு காரியத்தை குழந்தைகள் செய்வதாக இருந்தாலும் அவர்களுக்கு தக்க அறிவுரை கூற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. அந்த அறிவுரை அவர்கள் தொடங்கும் காரியத்தை சிறப்பாக முடிப்பதற்கு வழிகாட்ட வேண்டும்.

    திட்டமிடுதல், இலக்கு நிர்ணயித்தல், எதிர்கொள்ளும் இடையூறுகளை சமாளித்தல் என எல்லா நிலையிலும் பிள்ளைகளுக்கு பின்புலமாக இருந்து செயல்பட வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வது, 'நீ எது செய்தாலும் அது சிறப்பாக முடியாது' என்று மனம் நோகும்படி பேசுவது பெற்றோர் மீது தேவையற்ற அதிருப்தியை ஏற்படுத்தும்.

    நம் உணர்வுகளை பெற்றோர் மதிப்பதில்லையே என்ற ஆதங்கம் பிள்ளைகளை பிடிவாத குணம் கொண்டவராக மாற்றக்கூடும்.


    அடிக்கடி தொந்தரவு செய்தல்

    பெற்றோர் ஏதேனும் ஒரு வேலையை பிள்ளைகளிடம் ஒப்படைத்தால் அதனை அவர்கள் நிறைவேற்றி கொடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். அந்த வேலை பற்றிய செயல்பாடுகளில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்களா? தொடர்ந்து ஆர்வமாக வேலையை தொடர்கிறார்களா? என்று கண்காணிக்கலாம்.

    ஆனால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மீது குறை சொல்லிக்கொண்டே இருப்பது, அடிக்கடி திருத்தம் சொல்லிக்கொண்டே இருப்பது, 'இப்படி செய்தால்தான் சரியாக இருக்கும்' என்று கருத்து கூறுவது, வேலையில் சிறு தவறு செய்தாலும் கண்டிப்பது போன்ற செயல்பாடுகள் பிள்ளைகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தும்.

    அந்த வேலை மீதான ஆர்வத்தை குறைக்கக்கூடும். எப்போதும் நம்மை குறைசொல்வதுதான் பெற்றோரின் மன நிலையாக இருக்கிறது என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள்.

    அடுத்து பெற்றோர் சொல்லும் வேலையை பிடிவாதமாக மறுக்கும் மன நிலைக்கு ஆளாகக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் பிள்ளைகளை அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

    நன்றி சொல்லாமல் இருத்தல்

    பிறர் நமக்கு செய்யும் உதவிகளுக்கு உடனடியாக நன்றி தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்து கொடுக்கும் வேலைக்கு நன்றி சொல்வதற்கு பெற்றோர் முன்வர வேண்டும்.

    வயதில் சிறியவர்தானே நாம் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடத்தில் வெளிப்படக்கூடாது. நன்றி சொல்வதற்கு வயது பொருட்டல்ல.

    செய்யும் வேலை, உதவியின் தன்மைக்கேற்ப நன்றி சொல்ல முன் வர வேண்டும். இந்த பழக்கத்தை குழந்தைகள் சிறு வயதிலேயே கற்றுக்கொள்வதற்கு பெற்றோரே 'ரோல் மாடலாக' இருக்க வேண்டும்.

    அதைவிடுத்து 'இதெல்லாம் ஒரு வேலையா? இதை செய்ததற்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமா?' என்ற மனப்பான்மை உருவாகுவதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது.


    ஒழுக்கத்தை கடைப்பிடித்தல்

    பெற்றோரின் நடத்தைகள் எப்படி இருக்குமோ அதனை பின்பற்றித்தான் பிள்ளைகள் வளர்வார்கள். அதனால் ஒழுக்கம் விஷயத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

    ஒழுக்கம் வாழ்வின் உயர்வுக்கு இன்றியமையாதது என்பதை சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அதுவே பின்னாளில் அவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றும்.

    • குழந்தைகளின் கவலைகள், உணர்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.
    • காலை உணவை தவிர்ப்பது அல்லது அவசரமாக உண்பது நல்லதல்ல.

    காலை நேர பரபரப்புக்கு மத்தியில் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவது பெரும்பாலான பெற்றோருக்கு சவாலான விஷயமாகவே இருக்கிறது. அதிலும் வேலைக்குச்செல்லும் பெற்றோர் கடும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இது ஒருபுறமிருக்க காலை வேளையில் குழந்தைகளிடத்தில் கடுமையாக நடந்து கொள்வது மன ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகளை எப்படிக் கையாளுவது என்று பார்ப்போம்.

    இன்முகத்துடன் வழி அனுப்புங்கள்

    குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றடைவதற்கு ஆகும் நேரத்தை கணக்கிட்டு 5 நிமிடங்களுக்கு முன்பாகவே வீட்டில் இருந்து புறப்படும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லும் பெற்றோரும் தாமதம் செய்யக்கூடாது.

    அவசர அவசரமாகப் புறப்பட்டுச் செல்வது, இன்று தாமதமாகி விடும் என்று குழந்தைகளிடம் கடிந்து கொள்வது இருவருக்கும் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தக்கூடும்.

    5 நிமிடங்களுக்கு முன்பாக புறப்படும்போது நிதானமாக வழி அனுப்பி வைக்கலாம். அரவணைப்பு, புன்னகையை வெளிப்படுத்தலாம். குழந்தைகளும் ரிலாக்ஸாக, இன்முகத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள்.

    சத்தமிடாதீர்கள்

    குழந்தைகள் சிலர் காலையில் தாமதமாகவே கண் விழிப்பார்கள். பள்ளிக்கூடம் செல்லும் நேரம் நெருங்குவதாக பெற்றோர் எச்சரித்த பிறகுதான் எழுந்திருப்பார்கள். அப்போது பெற்றோர் கடுமையான வார்த்தைகளால் வசை பாடி எழுப்புவது, தண்ணீர் ஊற்றுவது, சத்தமாக திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது குழந்தைகளிடத்தில் மன அழுத்தத்திற்கான சூழலை உருவாக்கும். கவலை, வருத்தத்தை ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக நேரமாகிவிட்டது என்பதை மென்மையான அணுகுமுறையால் சுட்டிக்காட்டுவது, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் எழும் வழக்கத்தை பின்பற்ற வைப்பது சரியான வழிமுறையாக அமையும். எந்த அழுத்தத்துக்கும் ஆளாகாமல் தாமாகவே விழித்தெழும் வழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.

    நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறுங்கள்

    குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு வீட்டை விட்டு வெளியேறும்போது திட்டியபடியோ, ஊக்கப்படுத்தாமலோ வழி அனுப்புவது அவர்களது தன்னம்பிக்கையைக் குறைக்கும்.

    'இன்றைய நாள் சிறந்த நாளாக அமையட்டும்'. 'உன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்'. 'நீ பொறுப்புணர்வோடு நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன்' என்பன போன்ற வார்த்தைகள் அவர்களின் மன நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள்

    குழந்தைகளின் கவலைகள், உணர்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. காலை வேளையில் கவலை தோய்ந்த முகத்துடனோ, ஏதேனும் மன குழப்பத்துடனோ இருந்தால் அது பற்றி குழந்தைகளிடம் விசாரித்து அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    அதை விடுத்து அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அன்றைய நாள் முழுவதும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதோடு அல்லாமல் கற்றல் திறனையும் பாதிக்கும். காலையில் எழுந்ததும் குழந்தைகளின் மன நிலையைக் கணித்து அவர்களை வழிநடத்துவது நேர்மறை எண்ணங்களை பின் தொடர செய்யும். கவனமுடன் கற்றலைத் தொடரவும் வழிவகுக்கும்.

    விமர்சனம் செய்யாதீர்கள்

    காலை வேளையில் விமர்சனம் செய்வது, புகார் கூறுவது அவர்களை மன ரீதியாக பலவீனப்படுத்திவிடும். அதற்கு பதிலாக நேர்மறையான வார்த்தைகளைப் பேசுவது, நற்சிந்தனைகளைத் தூண்டும். சுயமரியாதை உணர்வுடன் செயல்பட வைக்கும்.

    காலை உணவு அவசியம்

    காலை உணவை தவிர்ப்பது அல்லது அவசரமாக உண்பது நல்லதல்ல. அந்த உணவுதான் நாள் முழுவதும் ஆற்றலையும், அறிவுத்திறனையும் தூண்டிவிடக்கூடும்.

    வேலை செய்ய ஊக்கப்படுத்துங்கள்

    ஒரே நேரத்தில் பல வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தாதீர்கள். ஷூ பாலீஷ் செய்வது, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது, மதிய உணவை பேக்கில் எடுத்து வைப்பது உள்ளிட்ட சின்ன சின்ன வேலைகளைக் குழந்தைகளே செய்து கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

    இந்த வேலைகளை செய்வதற்கு போதிய அவகாசமும் கொடுங்கள். அதனை தினமும் தவறாமல் பின்பற்ற வையுங்கள். நாளடைவில் அந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.

    அத்தியாவசிய பொருட்களை ஞாபகப்படுத்துங்கள்

    குழந்தைகள் பலர் பள்ளிக்கூடம் புறப்படுவதற்கு முன்புதான் அன்றைய நாளின் பாடவேளை அட்டவணைப்படி நோட்டு, புத்தகங்களை அவசர அவசரமாக எடுத்து பேக்கில் வைப்பார்கள்.

    போதிய நேரமில்லாமலும், அவசரத்திலும் சில பொருட்களை மறந்து வீட்டிலேயே வைத்துவிடுவார்கள். அல்லது பள்ளிக்கூடம் செல்லும்போதுதான் அந்த பொருட்களை தேடிக்கொண்டிருப்பார்கள். அது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும். அதைப்பார்க்கும்போது பெற்றோர் டென்ஷனாகி குழந்தைகளைக் கடிந்து கொள்வார்கள்.

    கடைசி நேரத்தில் ஏற்படும் இத்தகைய சச்சரவுகளைத் தவிர்க்க முந்தைய நாள் இரவே குழந்தைகளிடத்தில் ஞாபகப்படுத்துங்கள். என்னென்ன பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதை முந்தைய நாள் இரவே எடுத்து வைத்துவிட்டால் மறுநாள் டென்ஷன் இன்றி பள்ளிக்கூடம் புறப்பட்டு செல்லலாம்.

    • செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள்
    • செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

    குழந்தைகளுக்கு எப்போதும் விளையாடத் துணை தேவை. பெரும்பாலும் தன் வயதை ஒத்தவர்களிடமும், தன்னைவிட வயது குறைந்தவர்களிடமுமே அதிக நேரம் விளையாட விரும்புவார்கள். அதுபோல் வளர்ப்பு பிராணிகளிடமும் அதிக பாசம்காட்டி விளையாட விரும்புவார்கள். குழந்தைகள் விரும்பும் செல்லப்பிராணிகளை, வீட்டில் வளர்க்கிறீர்கள் என்றால் சில விஷயங்களில் கவனமாக இருங்கள். அவை இதோ...

    * குழந்தைகள் வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளின் காதைப் பிடித்து இழுக்கும். வாலைப் பிடித்து கடிக்கும். இந்த இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் செல்லப்பிராணிகள் திருப்பி கடித்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் எவ்வளவுதான் நல்ல பிராணியாக இருந்தாலும் குழந்தைகளிடமிருந்து அவைகளை சற்று விலக்கி வையுங்கள்.

    * குழந்தைகளுக்கும்-செல்லப்பிராணிகளுக்கும் இடையே எப்போதும் தேவையான இடைவெளி இருக்கவேண்டும். பிராணிகளிடம் எப்படி பழகவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உடனிருந்து கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளின் கண்களை நோண்டுவது, கையில் கிடைத்ததை அதன் மீது தூக்கி எறிந்து விளையாடுவது, அவைகளை பயமுறுத்துவது போன்றவைகளில் ஈடுபட குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.



    * நாய்கள் மனிதர்களிடம் மிக அன்போடு, நன்றியோடு பழகக்கூடியவை. அவைகளுக்கும் குழந்தைகளைப் போல் அன்பு தேவை. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செல்லப்பிராணிகளை விலக்கி வைக்கும் போது அவைகள் மனதுக்குள் வருத்தப்படும். அதுவே குழந்தைகள் மீது அவைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் வளர்ப்பு பிராணிகள் மீதும் பாசம் செலுத்துங்கள்.

    * குழந்தைகள் சாப்பிடும் தட்டில் வாய் வைக்கவோ, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை முகர்ந்து பார்க்கவோ வாய்ப்பளிக்கவேண்டாம். செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள். அதேநேரம் குழந்தைக்கு ஆபத்து நேராமலும் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தையால் அவைகளுக்கும் ஆபத்து வரக்கூடாது. ஒருபோதும் செல்லப்பிராணியையும் குழந்தையையும் தனியாக பழக அனுமதித்து விடக்கூடாது.

    * செல்லப்பிராணியோடு குழந்தை எவ்வளவுதான் அன்போடு பழகினாலும் உங்கள் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே ஆபத்துகளை தவிர்க்கலாம். வெளியில் வாக்கிங் போகும்போது செல்லப்பிராணி, குழந்தை இரண்டையும் அழைத்துச் செல்லலாம். அப்படி செய்தால் வளர்ப்பு பிராணிகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அவை புரிந்துகொள்ளும். குழந்தைக்கும்-வளர்ப்பு பிராணிக்கும் இடையே நல்ல புரிதலும் உருவாகும்.

    * குழந்தைக்கு உணவூட்டும்போது வளர்ப்பு பிராணிகளை அருகில் சேர்க்கவேண்டாம். அதன் உரோமம் உணவுப் பொருளில் உதிரக்கூடும். குழந்தைகள் வீறிட்டு அழுவதும், கத்துவதும் பிராணிகளுக்கு திகிலை ஏற்படுத்தும். அப்போது அவைகளின் அச்சத்தை போக்கவேண்டும். நாளடைவில் பழகிவிடும். குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்துவதை பார்த்து சில நேரங்களில் நாய்கள் பொறாமைப்படுவதுமுண்டு.

    குழந்தைகளோடு நாய்களை விளையாட அனுமதிக்கலாம். ஆனால் அப்போது பெற்றோர் அருகில் இருக்கவேண்டும். செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். படிப்படியாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள். பிராணிகள், குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க நீங்கள் செயல்கள் மூலம் சொல்லிக் கொடுங்கள். அவைகளும் புரிந்துகொள்ளும்.

    • குழந்தைக்கு பால் ஊட்டும் போதெல்லாம், தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.
    • ஒரே நேரத்தில் குழந்தைக்கு அதிக பால் கொடுக்க வேண்டாம்.

    குழந்தைக்கு சில நேரங்களில் திடீரென குடித்த பால் அவர்களின் மூக்கு மற்றும் வாய் வழியாக மீண்டும் வரக்கூடும். சிலர் இதை எதுக்களித்தல், ஓங்கரித்தல் என குறிப்பிடுவதுண்டு. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.

    கர்ப்ப காலம் மட்டுமின்றி ஒரு குழந்தை குறிப்பிட்ட வயது வரை பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் வரை பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். காரணம், குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என அவர்களால் சொல்ல முடியாது, அதை பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.


    தாயின் பால் குடித்த பிறகு குழந்தைகள் வாந்தி எடுப்பதை அடிக்கடி கவனித்திருப்போம். இது பலவீனமான செரிமான செயல்முறையின் அறிகுறியாகும்.

    பல சமயங்களில் குழந்தைகள் அளவு தெரியாமல் தேவைக்கு அதிகமாக பால் குடித்துவிடுகிறது. அந்த குழந்தையின் சிறிய வயிற்றில் அதிகமான பாலை கையாள முடியாததால் கூடுதலான பால் தானாகவே வெளியேறிவிடுகிறது.


    GERD எனப்படும் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் என்பது உணவுக் குழாயில் மீண்டும் குடித்த பால் வெளியேறும் நிலையாகும். இதன் காரணமாகவே மூக்கு மற்றும் வாய் வழியாக பால் வெளியேறுகிறது.

    குழந்தைக்கு பால் குடிக்கும் போது அவர்களின் தலை கீழ்நோக்கி இருந்தாலோ அல்லது சரியாக பிடிக்கப்படாமல் இருந்தாலோ பால் தொண்டையிலேயே சிக்கி நிற்கிறது. இது சமயங்களில் மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறுகிறது.

    குழந்தையின் செரிமான அமைப்பு என்பது சரியாக வளர்ச்சியடையவில்லை என்றாலும் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. குழந்தைகள் குடித்த பால் தானாகவே மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறுகிறது.


    * குழந்தைக்கு சரியான நிலையில் உணவளிக்க வேண்டும்.

    * குழந்தைக்கு பால் ஊட்டும் போதெல்லாம், தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.

    * கொஞ்சம் கொஞ்சமாக பால் கொடுங்கள். ஒரே நேரத்தில் குழந்தைக்கு அதிக பால் கொடுக்க வேண்டாம்.

    * ஒவ்வொரு முறையும் உணவளித்த பிறகு குழந்தையுடன் சற்று விளையாடுங்கள், அதேபோல் நன்றாக தூங்குகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • தினசரி குழந்தை தூங்கப் போகும் முன் ஒர் புத்தகத்தை படித்து காட்ட வேண்டும்.
    • குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதை சொல்ல வேண்டும்.

    குழந்தைகளிடம் சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் அறிவை விரிவாக்கும், உலகம் பற்றிய தெளிவான பார்வையை ஏற்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஊடக பிடியில் இருந்து அவர்களை விடுவிக்கும். சரி பெற்றோர்கள் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

    குழந்தைகளின் மழலைப் பருவத்தில் இருந்தே அவர்களை புத்தக வாசகராக பெற்றோர் வளர்க்க முடியம். தினசரி குழந்தை தூங்கப் போகும் முன் ஒரு சிறுவர் கதை புத்தகத்தை அவர்களுக்கு படித்துக்காட்ட வேண்டும். அல்லது பெற்றோர் தாம் படித்த கதையை கூற வேண்டும்.


    குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வகையிலும் கதை சொல்ல முயல வேண்டும். இப்படிச் செய்யும் போது, குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்தகங்கள் மீது ஆர்வம் பிறக்கும்.

    குழந்தைகளை என்னதான் சொல்லி வளர்த்தாலும், பெற்றோர்கள் செய்யும் செயலைப் பார்த்துதான் அவர்கள் வளர்கின்றனர். அதைத்தான் மீண்டும் செய்கின்றனர். அந்த வகையில் பெற்றோர், புத்தகம், நாளிதழ் படிப்பதாக இருந்தால் குழந்தைகளின் கண் முன் வாசிக்க வேண்டும்.

    தினமும் பெற்றோர்களின் வாசிப்பு பழக்கத்தை பார்க்கும் குழந்தைகள், தாமாகவே புத்தகத்தை எடுத்து புரட்டத் தொடங்குவார்கள்.

    குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்துச் சென்றால், நிறைய புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது அவர்களுக்கு ஆச்சரியமாகவும், ஆசையாகவும் இருக்கும். வீட்டுக்கு அருகே உள்ள நூலகத்துக்கு பெற்றோர் தமது குழந்தையை வாரத்துக்கு ஒருமுறையாவது கூட்டிச் சென்றால், நூலகத்தில் அமர்ந்து படிப்பவர்களை பார்த்தும் புத்தகங்களை பார்த்தும் வாசிப்பு பழக்கம் வரத் தொடங்கும்.


    புத்தகத்தில் ஒரே கதையை மீண்டும் மீண்டும் படித்து காட்டுவது பெற்றோருக்கு அயர்வை ஏற்ப ஏற்படுத்தலாம். ஆனால் குழந்தை அதை விரும்பிக் கேட்க வாய்ப்பு உள்ளது. எப்படி ஒரு பாடலை திரும்பத் திரும்ப கேட்டு குழந்தைகள் உற்சாகம் அடைகிறார்களோ அதைப் போலத்தான் இதுவும் குழந்தைகள் கதையிலோ, படங்களிலோ முதன்முதலில் தவறவிட்ட விஷயங்களை கண்டுபிடிக்க விரும்புவார்கள்.

    அதனால், அவர்களின் கவனத்தை பெறவும், புத்தக வாசிப்பில் சலிப்பு தட்டாமல் இருக்கவும், அவர்களுக்கு பிடித்த கதைகளை மீண்டும் சொல்லிக் காட்ட அல்லது வாசிக்க வைக்க வேண்டும்.


    குழந்தைகளுக்கு எந்த மாதிரியான புத்தகங்களை கொடுக்கிறோம் என்பதை போல, எந்த இடத்தில் புத்தகம் படிக்கிறோம் என்பதும் முக்கியம். புத்தகம் வாசிக்கும்போதோ அல்லது குழந்தைக்கு கதை சொல்லும்போதோ, அறையில் விளையாட்டுப் பொருட்கள், இரைச்சல் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கவனம் முழுவதும் புத்தகத்தின் மேல் இருப்பது போன்ற சூழலை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்.

    குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற எளிய, பெரிய எழுத்தில், படங்கள் அதிகம் கொண்ட புத்தகங்களை ஆரம்பத்தில் அவர்களுக்கு பெற்றோர் படிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தால் அதை பாராட்டி, பரிசு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

    • அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அறிவுத்திறனை மேம்படுத்துவதாக அமைந்தால் பாதகமில்லை.
    • டி.வி. முன்பு அமர்ந்து நேரத்தை செலவிடும்போது குழந்தைகளின் கவனம் ஓரிடத்தில் குவிக்கப்படும்.

    செல்போன், வீடியோ கேமுக்கு அடுத்தபடியாக குழந்தைகளின் விருப்பமான பொழுதுபோக்காக தொலைக்காட்சிதான் விளங்குகிறது. அதிலும் விடுமுறை நாட்களில் மணிக்கணக்கில் டி.வி.யில் மூழ்கிவிடும் குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். கார்ட்டூன், விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகள்தான் அவர்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது.

    குழந்தைகள் டி.வி. பார்ப்பது தவறல்ல. ஆனால் அதிலேயே மூழ்கி விடுவதுதான் நல்லதல்ல. அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அறிவுத்திறனை மேம்படுத்துவதாக அமைந்தால் பாதகமில்லை. வெவ்வேறு கலாசாரங்கள், பாரம்பரிய இடங்கள், உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், அங்குள்ள புகழ்பெற்ற இடங்கள் என பொது அறிவையும், சிந்தனை திறனையும் விசாலப்படுத்த வித்திடும் நிகழ்ச்சிகளை பார்ப்பது நல்லது.



    குழந்தைகள் வாசிப்பதிலோ, எழுதுவதிலோ தடுமாற்றத்தையோ, சிரமங்களையோ எதிர்கொண்டால் அவர்களை டி.வி., செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் திரைகளின் முன்பு சிறிது நேரம் செலவிட வைக்கலாம். அப்படி டி.வி. முன்பு அமர்ந்து நேரத்தை செலவிடும்போது குழந்தைகளின் கவனம் ஓரிடத்தில் குவிக்கப்படும்.

    வாசிப்பதில் தடுமாற்றம், எழுதுவதில் சிரமம் கொண்ட குழந்தைகளை பள்ளிக்கூடத்திலோ, வீட்டிலோ டி.வி. திரைகள் முன்பு சிறிது நேரம் அமர வைக்கலாம். அதில் தென்படும் காட்சியும், ஒலியும் அதன் மீது கவனம் செலுத்த வைக்கும். அந்த காட்சிகள் குழந்தைகள் விரும்பும் விளையாட்டு, கார்டூன் சார்ந்த காட்சிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் அம்சங்களை கொண்டதாக அவை அமைந்திருக்க வேண்டும். வெஸ்டர்ன் நார்வே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் வாசிப்பதிலோ, எழுதுவதிலோ சிரமங்களை எதிர்கொண்டால் ஒளிரும் திரைகள் முன்பு சிறிது நேரத்தை செலவிட வைக்கலாம் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
    • தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

    குழந்தைகள் காலைப்பொழுதை எப்படி தொடங்கினால், அன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும் என்பதை இந்த தொகுப்பு விளக்குகிறது.

    காலையில் புன்னகையோடு, நம்பிக்கை எண்ணத்துடன் எழுந்திருங்கள். காலைச் சூரியனுக்கு, 'குட் மார்னிங்' வைக்கலாம். கண்களுக்கு நல்லது. வைட்டமின்-டி சத்தும் கிடைக்கும்.

    மிதமான இளஞ்சூடான நீரை அருந்துங்கள்.

    காலையில் வீசும் இளங்காற்றை ஐந்து நிமிடங்களாவது மொட்டை மாடியிலோ அல்லது வெளி இடங்களுக்குச் சென்றோ சுவாசிக்கலாம். நடைப்பயிற்சி செய்வது நல்லது.



    வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பழ ரசம், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.

    பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கண்களை மூடி வெறும் சுவாசத்தை மட்டும்கூட கவனிக்கலாம்.

    கோடை காலத்தில் குளிர்ந்த நீரிலும், மழை மற்றும் பனிக்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. இதனால் உடல் புத்துணர்வாக, சுறுசுறுப்பாக இருக்கும்.

    ஒரு காகிதத்தில், இன்று நாம் செய்யவேண்டியவை என்னென்ன என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

    அன்றைய வேலையைத் தொடங்கும்போது 'இன்று நான் சிறப்பாகச் செயல்படுவேன்' என்ற உத்வேகத்தோடு தொடங்குங்கள். அந்த நாள் சிறப்பானதாக, உங்களுக்கானதாக அமையும்.

    • ஹெபடைடிஸ் பி என்பது கல்லீரலை பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்று ஆகும்.
    • நோய் தொற்றுகளை தடுப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற, ஏராளமான தொற்று நோய்களைத் தடுப்பதில் தடுப்பூசிகள் கருவியாக உள்ளன. நமது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது அவசியம்.

    கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு, சில தடுப்பூசிகள் உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதில் முக்கியமானவை.


    குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

    MMR தடுப்பூசி

    எம்எம்ஆர் தடுப்பூசி என்பது, அம்மை, சளி மற்றும் ஜெர்மன் தட்டம்மை ஆகிய மூன்று அதிக தொற்று நோய்களுக்கு எதிராக பாதுகாக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசி ஆகும்.

    தட்டம்மை, குறிப்பாக, நிமோனியா மற்றும் மூளையழற்சி போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதே நேரத்தில் சளி, காது கேளாமை மற்றும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் ஜெர்மன் தட்டம்மை நோய்த்தொற்று பிறவி ரூபெல்லா நோய்க்குறியை ஏற்படுத்தும்.

    போலியோ தடுப்பூசி

    போலியோ வைரஸ், பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். போலியோ உலகளவில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடுப்பூசி போதுமானதாக இல்லாத பகுதிகளில் இந்த நோய் இன்னும் அச்சுறுத்தலாக உள்ளது.

    வாய்வழி போலியோ தடுப்பூசி (OPV) மற்றும் செயலிழக்கச் செய்யப்பட்ட போலியோ தடுப்பூசி (IPV) இரண்டும் போலியோ நோய்த்தொற்றைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த பலவீனப்படுத்தும் நோய்க்கு எதிராக வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்வதில் போலியோ தடுப்பூசியை சரியான நேரத்தில் வழங்குவது மிகவும் முக்கியமானது.


    DTAP தடுப்பூசி

    டிடிஏபி தடுப்பூசி மூன்று பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. DTAP என்றால் டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் ஆகும்.

    டிப்தீரியா கடுமையான சுவாச பிரச்னைகள் மற்றும் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும், அதேநேரத்தில் டெட்டனஸ் தசை விறைப்பு மற்றும் பிடிப்புகளை ஏற்படுத்துகிறது. பெர்டுசிஸ், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தானது, நீடித்த இருமல் மற்றும் சுவாச சிக்கல்களை ஏற்படுத்தும்.

    DTAP தடுப்பூசி பொதுவாக குழந்தை பருவத்தில் தொடர்ச்சியான அளவுகளில் கொடுக்கப்படுகிறது. இது இந்த தொற்று நோய்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குகிறது.

    Hib தடுப்பூசி

    ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை b (Hib) என்பது நிமோனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் எபிக்ளோட்டிடிஸ் உள்ளிட்ட பல்வேறு கடுமையான தொற்றுகளுக்கு காரணமான ஒரு பாக்டீரியமாகும்.

    சிறு குழந்தைகளில் இடுப்பு நோய்த்தொற்றுகள் குறிப்பாக ஆபத்தானவை. இது பெரும்பாலும் கடுமையான சிக்கல்கள் அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும். பாக்டீரியாவுக்கு எதிரான ஆன்டிபாயாடிக்குகளை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் ஹிப் தடுப்பூசி நோய்த்தொற்றுகளைத் திறம்பட தடுக்கிறது.

    வழக்கமான நோய்த்தடுப்பு அட்டவணையில் Hib தடுப்பூசியை சேர்த்துக்கொள்வது உலகளவில் Hib தொடர்பான நோய்களின் நிகழ்வைக் கணிசமாகக் குறைத்துள்ளது.


    ஹெபடைடிஸ் பி தடுப்பூசி

    ஹெபடைடிஸ் பி என்பது கல்லீரலை பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது நாள்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள் குறிப்பாக ஹெபடைடிஸ் பி தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

    ஹெபடைடிஸ் பி தடுப்பூசியானது, பிறந்த சிறிது நேரத்திலும், குழந்தைப் பருவத்திலும், வைரஸுக்கு எதிராக நீண்ட கால நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதன் மூலம், தொடர்ச்சியான அளவுகளில் கொடுக்கப்படுகிறது.

    ஹெபடைடிஸ் பி-க்கு எதிரான தடுப்பூசி தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதைத் தடுப்பதிலும், இந்த தொற்று நோயின் ஒட்டுமொத்த சுமையைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    • மருந்து மாத்திரைகள் கூட உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.
    • கல்லீரலில் கொழுப்பு படிய வாய்ப்புண்டு.

    சமீப காலங்களில் நிறைய குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றனர் என்பது சரிதான். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உடலிலுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம், ஆரோக்கியமற்ற உணவுத்தேர்வு, குறைவான உடலுழைப்பு, குடும்ப உணவுப் பழக்க வழக்கங்கள் இவைகளெல்லாம் குழந்தைகள் சிறுவயதிலேயே அதிக உடல் எடையுடன் குண்டாக வளர முக்கிய காரணங்கள் ஆகும். இதற்கான காரணங்கள் மற்றும் பாதிப்புகள் வருமாறு:-


    ஒரு குழந்தைக்கு வயதுக்கேற்ற, உயரத்துக்கேற்ற உடல் எடை இல்லாமல் இருக்கிறதென்றால் அதிகமாக இருக்கின்ற ஒவ்வொரு கிராம் எடையும் கூட பின்னாளில் அந்த குழந்தையை ஆரோக்கியமற்ற பாதைக்கு கொண்டு செல்லும். அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்த அளவு முதலியவைகளை உண்டுபண்ணும்.

    உங்கள் குழந்தை உடல் பருமன் உள்ள பரம்பரையை சேர்ந்திருந்தால் அந்த குழந்தையும் குண்டாகவும், அதிக எடையுடனும் இருக்க வாய்ப்பு அதிகம்.

    தன்னால், பெற்றோர்களால், குடும்பத்தால், சுற்றுப்புறத்தால் அன்றாடம் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தமாக மாறி, அதுகூட உடல் பருமனை ஏற்படுத்தச் செய்யும். சில மருந்து மாத்திரைகள் கூட உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.

    வாரக்கணக்கில் வீட்டுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடாது. மிக நெரிசலான பகுதிகளில் வாழ்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான இடம் கிடைக்காது. மாற்று இடத்தை தேடவும்.

    சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, அதனால் அதிக ரத்த அழுத்தம் பின்னாளில் வரலாம். அதிக எடையினால் மூட்டுவலி, இடுப்புவலி, முதுகு வலி வர வாய்ப்புண்டு. மூச்சுத் திணறல் ஆஸ்துமா, குறட்டை போன்றவை வர வாய்ப்புண்டு. கல்லீரலில் கொழுப்பு படிய வாய்ப்புண்டு.


    ஆரோக்கியமான, சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது என்று முடிவு பண்ண வேண்டும். கண்ட கண்ட இடத்தில் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று முடிவு எடுக்க வேண்டும். குழந்தைகள் மட்டும் அல்ல அவர்களது குடும்பமும் அதை கடைப்பிடிக்க வேண்டும். நொறுக்குத் தீனிகள் அறவே கூடாது என்று முடிவு செய்ய வேண்டும்.

    குழந்தைகள் போதுமான நேரம் நன்றாகத் தூங்குகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். தூக்கம் சரியாக இல்லை என்றால் ஹார்மோன்கள் தொந்தரவு ஏற்பட்டு உடல் எடை கூட வாய்ப்புண்டு. ஆண்டுக்கு ஒருமுறை உடல் பருமனான குழந்தைகளை உங்கள் குடும்ப டாக்டரிடம் காண்பியுங்கள்.

    சிறுவயதில் உடல் பருமனுக்கு சிகிச்சை அளித்து குணமாக்குவதும், வரவிடாமல் முன்னரே தடுப்பதும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் இப்பொழுதும் எப்பொழுதும் நன்றாக இருக்க உபயோகமாக இருக்கும்.

    • வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஏராளமான நன்மைகளை உடலுக்கு அளிக்கும்.
    • சளி கட்டிகளால் ஏற்படும் தொண்டை புண்ணை ஆற்றவும் உதவும்.

    மழைக்காலம் தொடங்கியதும் குழந்தைகள் சாதாரண குடிநீருக்கு விடை கொடுத்துவிட்டு வெந்நீர் குடிப்பது நல்லது. ஏனெனில் வெந்நீர் மழைக்கால நோய்களான சளி, இருமல் பிரச்சனை வராமல் தடுக்கும். இயல்பாகவே வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஏராளமான நன்மைகளை உடலுக்கு அளிக்கும். அவற்றுள் 7 பலன்கள் பற்றி பார்ப்போம்.


    1. தொண்டைக்கு இதமளிக்கும்

    ஒரு கப் சூடான நீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து வெளிப்படும் நீராவியை மூக்கு துவாரங்கள் வழியாக ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். பின்பு அந்த நீரை பருக வேண்டும். அப்படி சூடான நீரை உள்ளிழுப்பதும், பருகுவதும் சைனஸ் மற்றும் தொண்டை பகுதிகளை சூழ்ந்திருக்கும் சளி சவ்வுகளுக்கு இதமளிக்கும். அந்த பகுதியை சூடேற்றுவதோடு சளி கட்டிகளால் ஏற்படும் தொண்டை புண்ணை ஆற்றவும் உதவும்.

    தேநீர், வெந்நீர் போன்ற சூடான பானம் மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, சோர்வு போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

    2. செரிமானத்திற்கு உதவும்

    வெந்நீர் குடிப்பது செரிமான மண்டல செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும். வயிறு மற்றும் குடல் வழியாக வெந்நீர் செல்லும்போது, உடல் கழிவுகளை அகற்றுவதற்கும் துணை புரியும். குறிப்பாக செரிமானமாவதில் சிக்கல் இருந்தால் சூடாக நீர் பருகுவது பலனளிக்கும்.

    அப்படி வெந்நீர் பருகுவது செரிமானத்திற்கு உதவுவதாக உணர்ந்தால் அதனை தொடர்வது எந்த தீங்கும் விளைவிக்காது என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியும் செய்யப்பட்டிருக்கிறது.


    3. நரம்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும்

    போதுமான அளவு தண்ணீரோ, வெந்நீரோ, குளிர்ந்த நீரோ பருகாவிட்டால் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இறுதியில் மன நிலை மற்றும் மூளை செயல்பாட்டில் பாதிப்பை உண்டாக்கலாம்.

    போதுமான அளவு தண்ணீரோ, வெந்நீரோ பருகுவது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும், மனநிலையையும் மேம்படுத்தும் என்பது ஆய்வுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

    4. மலச்சிக்கலை போக்கும்

    மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நீரிழப்பும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அதனால் மலச்சிக்கலை போக்குவதற்கு தண்ணீர் சிறந்த வழிமுறையாக இருக்கிறது. உடலில் நீரேற்றத்தை தக்கவைப்பது மலத்தை மென்மையாக்கும்.

    தொடர்ந்து வெந்நீர் பருகுவது குடல் இயக்கங்களை சீராக வைத்துக்கொள்ள உதவும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிவாரணம் தரும்.


    5. நீரேற்றமாக வைத்திருக்கும்

    வெந்நீரோ, தண்ணீரோ அதனை எந்த வெப்பநிலையில் பருகினாலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். பெண்கள் குறைந்தபட்சம் 2.3 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் குறைந்தபட்சம் 3.3 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும் என்று இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் அமைப்பு பரிந்துரைக்கிறது.

    எல்லா நேரமும் அருந்த முடியாவிட்டாலும் தினமும் காலை பொழுதில் வெந்நீர் அருந்தும் பழக்கத்தை தொடரலாம். உடலின் அனைத்து அத்தியாவசிய செயல்பாடுகளுக்கும் தண்ணீர் மிகவும் தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    6. குளிரில் நடுக்கம் குறையும்

    குளிர்ச்சியான சூழலின் போது சூடான திரவங்களை பருகுவது உடல் நடுக்கத்தை குறைக்க உதவும். அந்த சமயத்தில் சூடான நீரை பருகுவது உடல் வெப்பநிலையை பராமரிப்பதற்கும் உதவிடும்.

    குளிர்ச்சியான சூழலில் வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகளும் கூறுகின்றன.

    7. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

    வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவது தமனிகள், நரம்புகளை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ரத்த அழுத்தம், இதய நோய் அபாயம் ஏற்படுவதை தடுக்கும். வெந்நீர் குடிப்பதும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தும்.

    அதிலும் இரவில் சுடு நீரில் குளியல் போடுவதும், வெந்நீர் அருந்துவதும் உடலை ஆசுவாசப்படுத்தி நிம்மதியான உறக்கத்திற்கு தயார்படுத்த உதவும்.


    எப்படி பருகுவது?

    மிகவும் சூடாக இருக்கும் நீரை குடிப்பது உணவுக்குழாயில் உள்ள திசுக்களை சேதப்படுத்தலாம். நாக்கின் சுவை மொட்டுகளையும் பாதிக்கும். அதனால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.

    வெந்நீர் மற்றும் சூடான பானங்களை அருந்தும்போது, 130 முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வரையே வெப்பநிலை இருக்க வேண்டும்.

    ×