என் மலர்
குழந்தை பராமரிப்பு

பள்ளி செல்லும் குழந்தைகளிடம் பெற்றோர் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள்

- குழந்தைகளின் கவலைகள், உணர்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.
- காலை உணவை தவிர்ப்பது அல்லது அவசரமாக உண்பது நல்லதல்ல.
காலை நேர பரபரப்புக்கு மத்தியில் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவது பெரும்பாலான பெற்றோருக்கு சவாலான விஷயமாகவே இருக்கிறது. அதிலும் வேலைக்குச்செல்லும் பெற்றோர் கடும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இது ஒருபுறமிருக்க காலை வேளையில் குழந்தைகளிடத்தில் கடுமையாக நடந்து கொள்வது மன ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகளை எப்படிக் கையாளுவது என்று பார்ப்போம்.
இன்முகத்துடன் வழி அனுப்புங்கள்
குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றடைவதற்கு ஆகும் நேரத்தை கணக்கிட்டு 5 நிமிடங்களுக்கு முன்பாகவே வீட்டில் இருந்து புறப்படும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லும் பெற்றோரும் தாமதம் செய்யக்கூடாது.
அவசர அவசரமாகப் புறப்பட்டுச் செல்வது, இன்று தாமதமாகி விடும் என்று குழந்தைகளிடம் கடிந்து கொள்வது இருவருக்கும் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தக்கூடும்.
5 நிமிடங்களுக்கு முன்பாக புறப்படும்போது நிதானமாக வழி அனுப்பி வைக்கலாம். அரவணைப்பு, புன்னகையை வெளிப்படுத்தலாம். குழந்தைகளும் ரிலாக்ஸாக, இன்முகத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள்.
சத்தமிடாதீர்கள்
குழந்தைகள் சிலர் காலையில் தாமதமாகவே கண் விழிப்பார்கள். பள்ளிக்கூடம் செல்லும் நேரம் நெருங்குவதாக பெற்றோர் எச்சரித்த பிறகுதான் எழுந்திருப்பார்கள். அப்போது பெற்றோர் கடுமையான வார்த்தைகளால் வசை பாடி எழுப்புவது, தண்ணீர் ஊற்றுவது, சத்தமாக திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது குழந்தைகளிடத்தில் மன அழுத்தத்திற்கான சூழலை உருவாக்கும். கவலை, வருத்தத்தை ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக நேரமாகிவிட்டது என்பதை மென்மையான அணுகுமுறையால் சுட்டிக்காட்டுவது, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் எழும் வழக்கத்தை பின்பற்ற வைப்பது சரியான வழிமுறையாக அமையும். எந்த அழுத்தத்துக்கும் ஆளாகாமல் தாமாகவே விழித்தெழும் வழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.
நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறுங்கள்
குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு வீட்டை விட்டு வெளியேறும்போது திட்டியபடியோ, ஊக்கப்படுத்தாமலோ வழி அனுப்புவது அவர்களது தன்னம்பிக்கையைக் குறைக்கும்.
'இன்றைய நாள் சிறந்த நாளாக அமையட்டும்'. 'உன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்'. 'நீ பொறுப்புணர்வோடு நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன்' என்பன போன்ற வார்த்தைகள் அவர்களின் மன நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள்
குழந்தைகளின் கவலைகள், உணர்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. காலை வேளையில் கவலை தோய்ந்த முகத்துடனோ, ஏதேனும் மன குழப்பத்துடனோ இருந்தால் அது பற்றி குழந்தைகளிடம் விசாரித்து அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அதை விடுத்து அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அன்றைய நாள் முழுவதும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதோடு அல்லாமல் கற்றல் திறனையும் பாதிக்கும். காலையில் எழுந்ததும் குழந்தைகளின் மன நிலையைக் கணித்து அவர்களை வழிநடத்துவது நேர்மறை எண்ணங்களை பின் தொடர செய்யும். கவனமுடன் கற்றலைத் தொடரவும் வழிவகுக்கும்.
விமர்சனம் செய்யாதீர்கள்
காலை வேளையில் விமர்சனம் செய்வது, புகார் கூறுவது அவர்களை மன ரீதியாக பலவீனப்படுத்திவிடும். அதற்கு பதிலாக நேர்மறையான வார்த்தைகளைப் பேசுவது, நற்சிந்தனைகளைத் தூண்டும். சுயமரியாதை உணர்வுடன் செயல்பட வைக்கும்.
காலை உணவு அவசியம்
காலை உணவை தவிர்ப்பது அல்லது அவசரமாக உண்பது நல்லதல்ல. அந்த உணவுதான் நாள் முழுவதும் ஆற்றலையும், அறிவுத்திறனையும் தூண்டிவிடக்கூடும்.
வேலை செய்ய ஊக்கப்படுத்துங்கள்
ஒரே நேரத்தில் பல வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தாதீர்கள். ஷூ பாலீஷ் செய்வது, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது, மதிய உணவை பேக்கில் எடுத்து வைப்பது உள்ளிட்ட சின்ன சின்ன வேலைகளைக் குழந்தைகளே செய்து கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.
இந்த வேலைகளை செய்வதற்கு போதிய அவகாசமும் கொடுங்கள். அதனை தினமும் தவறாமல் பின்பற்ற வையுங்கள். நாளடைவில் அந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.
அத்தியாவசிய பொருட்களை ஞாபகப்படுத்துங்கள்
குழந்தைகள் பலர் பள்ளிக்கூடம் புறப்படுவதற்கு முன்புதான் அன்றைய நாளின் பாடவேளை அட்டவணைப்படி நோட்டு, புத்தகங்களை அவசர அவசரமாக எடுத்து பேக்கில் வைப்பார்கள்.
போதிய நேரமில்லாமலும், அவசரத்திலும் சில பொருட்களை மறந்து வீட்டிலேயே வைத்துவிடுவார்கள். அல்லது பள்ளிக்கூடம் செல்லும்போதுதான் அந்த பொருட்களை தேடிக்கொண்டிருப்பார்கள். அது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும். அதைப்பார்க்கும்போது பெற்றோர் டென்ஷனாகி குழந்தைகளைக் கடிந்து கொள்வார்கள்.
கடைசி நேரத்தில் ஏற்படும் இத்தகைய சச்சரவுகளைத் தவிர்க்க முந்தைய நாள் இரவே குழந்தைகளிடத்தில் ஞாபகப்படுத்துங்கள். என்னென்ன பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதை முந்தைய நாள் இரவே எடுத்து வைத்துவிட்டால் மறுநாள் டென்ஷன் இன்றி பள்ளிக்கூடம் புறப்பட்டு செல்லலாம்.