என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பெற்றோரிடம் குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கும் பழக்கங்கள்...
    X

    பெற்றோரிடம் குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கும் பழக்கங்கள்...

    • நீங்கள் எத்தகைய குணம் படைத்தவர் என்பது பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது.
    • ஊட்டச்சத்துமிக்க, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.

    பெற்றோர் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், குணாதிசயங்கள், அன்றாட செயல்பாடுகள், பிறரிடம் பழகும் விதம், நட்பு-உறவுகளுடன் பேணும் நெருக்கம் உள்ளிட்ட வாழ்வியல் விஷயங்களை குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதன்படியே செயல்படவும் தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

    பெற்றோர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள், பேசும் தொனி போன்றவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அத்தகைய வார்த்தைகளை கேட்பதோடு மட்டுமல்லாமல் பெற்றோரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, ரகசியமாக பின்பற்றவும் செய்கிறார்கள். அப்படி கவனிக்கும் விஷயங்கள் பற்றியும், பெற்றோரின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.

    மன அழுத்தத்தை கையாளும் விதம்

    மன அழுத்தத்தில் இருக்கும்போது பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அந்த சமயத்தில் மற்றவர்களுடன் எப்படி பேசுகிறார்கள்? எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதையும் கவனத்தில் கொள்கிறார்கள். அந்த கடினமாக சூழலில் கத்துவது, பீதி அடைவது, மற்றவர்களை பற்றி புகார் செய்வது, மனக்குழப்பத்தில் இருப்பது என பெற்றோரின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்காணிக்கிறார்கள்.

    அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சமயத்தில் பெற்றோர் பின்பற்றிய அணுகுமுறையை செயல்படுத்தி பார்க்கவும் முன் வருவார்கள். அதனால் பெற்றோர் மன அழுத்தத்தில் இருக்கும் சமயத்தில் குழந்தைகளிடத்தில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். மன இறுக்கத்துடன் இருப்பது, சத்தமாக பேசுவது உள்ளிட்ட செயல்களை செய்யக்கூடாது. மன அமைதியை தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    உங்கள் உணர்ச்சிகளை குழந்தைகளிடத்தில் வெளிப்படுத்தி, ''நான் இப்போது மன அழுத்தத்தில் இருக்கிறேன். ரொம்பவே விரக்தி அடைந்துவிட்டேன். அதனால் மூச்சை ஆழமாக உள் இழுத்து வெளியிட்டு மனதை அமைதிப்படுத்த முயற்சிக்கப்போகிறேன்'' என்று கூறி அதனை குழந்தைகள் முன்னிலையில் செயல்படுத்தியும் காண்பிக்க வேண்டும். குழந்தைகள் அத்தகைய சூழலுக்கு ஆளாகும்போது மூச்சு பயிற்சியை பின்பற்ற வழிகாட்ட வேண்டும்.

    மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் சுபாவம்

    நீங்கள் எத்தகைய குணம் படைத்தவர் என்பது பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் குணத்தை நீங்கள் உச்சரிக்கும் வார்த்தையும் பிரதிபலித்துவிடும். வீட்டு பணியாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், உங்களை விட வயது குறைந்தவர்கள் என உங்கள் கட்டளைப்படி நடப்பவர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொண்டாலோ, கடுஞ்சொற்களை உச்சரித்து பேசினாலோ அதை பார்த்து குழந்தைகளும் தாமும் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.



    வேலை, சமூக அந்தஸ்து, பொருளாதார பின்னணியை பொருட்படுத்தாமல் அனைவரையும் மரியாதையுடன் நடத்துவது அவசியம் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய சமூக கடமை பெற்றோருக்கு இருக்கிறது. குழந்தைகள் அதன்படி நடக்க பெற்றோர் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

    மற்றவர்களிடம் அன்பாக பழக வேண்டும். பிறரை பார்த்ததும் புன்னகைப்பது, கண்களை பார்த்து பேசுவது, பணிவாக நடந்து கொள்வது போன்ற செயல்களை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதனை பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் வேண்டும்.

    உணவு - உடல் தோற்றம்

    நேர்த்தியாக உடை அணிவதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதை விட உடல் தோற்றத்தை பராமரிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் உடனே களமிறங்கி விட வேண்டும். முதலில் உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.

    ஊட்டச்சத்துமிக்க, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் அதனை பழக்கப்படுத்த வேண்டும். விரும்பிய எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற மனோபாவம் கொண்டிருந்தால் அதை பார்த்து குழந்தைகளும் பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். உண்ணும் உணவுகளில் எது நல்லது? எது கெட்டது? என்று முத்திரை குத்தினால் குழந்தைகளும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட பழகிவிடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் உடல் தோற்றம் பற்றி எதிர்மறையாக பேசுவதை தவிர்க்க வேண்டும். உடல் தோற்றத்தை பார்த்து மற்றவர்கள் விமர்சித்தாலும் அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலம் உடல் நலனை பராமரிக்க ஊக்குவிக்க வேண்டும்.

    குடும்ப நேரம்

    அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் நேரங்களிலும் செல்போனை உபயோகிப்பது குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை பாழ்படுத்திவிடும். அவர்களும் பெற்றோர் தங்களிடம் அன்பாக, அக்கறையாக நடந்துகொள்வதில்லை என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். பெற்றோர் வீட்டுக்குள் நுழைந்ததும் உற்சாகமாக ஓடோடி வரும் குழந்தைகளாக அவர்கள் வளர வேண்டும்.அதை விடுத்து செல்போனிலோ, டி.வி.யிலோ நேரத்தை செலவிட்டால் அவர்களும் அதே பழக்கத்தைத்தான் பின்பற்றுவார்கள். தினமும் இரவில் 'குடும்ப நேரம்' என்ற ஒன்றை நிர்வகிக்க வேண்டும். அந்த நேரத்தில் செல்போன் உள்ளிட்ட எதிலும் கவனம் செலுத்தாமல் குடும்ப விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்கள் கடந்த கால வாழ்க்கையை பற்றி பேசலாம். பள்ளியில் நடந்த விஷயங்களை குழந்தைகளிடம் கேட்டறியலாம்.

    குடும்ப நிர்வாகம்

    குடும்ப பொறுப்புகளை பெற்றோர் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதையும் குழந்தைகள் கவனித்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் முன்னிலையில் எந்த வேலையையும் அசட்டையாக செய்தாலோ, 'அந்த வேலையை பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று அலட்சியமாக பதில் அளித்தாலோ குழந்தைகளும் அதனை கருத்தில் கொள்வார்கள். அந்த வேலையை சுமையாக கருதினால் குழந்தைகளும் அவ்வாறே எண்ணுவார்கள்.

    அவர்களிடம் ஏதேனும் வேலை கொடுத்தால், அந்த வேலையை செய்ய விரும்பாதபட்சத்தில் பெற்றோரை போன்றே அலட்சியமாக நடந்து கொள்வார்கள். ஒரு வேலையை செய்ய முடியாவிட்டால், 'இன்று நான் பிஸியாக இருக்கிறேன். எப்படியாவது குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடித்துக்கொடுத்து விடுவேன்' என்று கூறுங்கள். அதன்படியே செயல்படவும் செய்யுங்கள். அதை பார்த்து குழந்தைகளும் அவ்வாறே செயல்பட பழகிவிடுவார்கள்.

    Next Story
    ×