என் மலர்
குழந்தை பராமரிப்பு

இறுதி நேரத்தில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக சில ஆலோசனைகள்...
- பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது.
- குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும்.
ஓராண்டு பாடத்திட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்து, இப்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒருசில வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் பாடம் நடத்த நடத்த படித்து புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு மத்தியில், பாடங்களை இறுதியில் படித்து கொள்ளலாம் என நினைக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் சிலர், தாங்கள் நினைத்தபடியே இறுதியில் ஒட்டுமொத்தமாக படித்து 'பாஸ்' மார்க் வாங்குவதுடன், ஒருசிலர் கணிசமான மதிப்பெண்களை பெறுகிறார்கள். அத்தகைய மனபக்குவம் கொண்ட மாணவர்களாக நீங்கள் இருந்தால், இந்த செய்தி தொகுப்பு உதவியாக இருக்கும். தேர்வு நெருங்கிய இறுதி நேரத்தில், எப்படி பாடங்களை படிப்பது, எப்படி தேர்வுக்கு தயாராகுவது என்பதை அறிந்து கொள்வோம்.
1. கால அட்டவணை
பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது. என்ன தேர்வு முதலில் வர இருக்கிறது, அந்த தேர்வுக்கான பாடத்தின் முதல் பகுதி, கடைசி பகுதி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் பகுதி என பாடத்திட்டத்தை நீங்களே பிரித்தெடுத்து அதற்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, கால அட்டவணைக்கு ஏற்ப பாடங்களை படித்து, தேர்வுக்கு தயாராக வேண்டும்.
2. வினா வகை
குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும். என்ன வகையான வினாக்கள், எப்படிப்பட்ட அமைப்பை நமது பாடம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதில் அதிக மதிப்பெண் பெறும் முறையில் படிக்க வேண்டும்.
3. துறை ரீதியாக தயாராகுதல்
நீங்கள் படிக்கும் துறை சார்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். வரலாறு, உயிரியல், மொழி சார்ந்த பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அரசியல், விஞ்ஞானம், பொறியியல் போன்ற பாடங்களை நன்கு புரிந்து கொண்டு தயாராக வேண்டும். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களை தீர்வு காணும் வகையில் படிக்க வேண்டும்.
4. அதிக முக்கியத்துவத்தை உணருதல்
பாடத்திட்டத்தில் எந்த பகுதியை படித்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், எந்த பகுதியில் அதிக கேள்விகள் வரும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தேர்வுக்கு தயாராக வேண்டும்.
5. உணவும், உறக்கமும்...
உணவும் உறக்கமும் இரு கண்கள் என்று நினைத்துக் கொண்டு அளவோடு உண்டு உறங்குவது தேர்வு பயிற்சிக்கு மிகமிக முக்கியமானது. அதிகம் உண்டால் தேர்வின் போது தூக்கம் வரும். நீண்ட நேரம் விழித்திருந்தாலும் இதே பிரச்சினை தொடரும். எனவே அளவோடு உணவை உட்கொள்ள வேண்டும். எளிதில் செரிமானமாகும் உணவை தேர்வு செய்ய வேண்டும். கிரீன் டீ, சாக்லெட்டுக்கள் போன்றவற்றை அவ்வப்போது படிக்கும் நேரத்தில் சாப்பிட்டால் உற்சாகத்துடன் படிக்கலாம்.