search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரடி தாக்குதல்"

    • படுகாயம் அடைந்த சாவித்திரியை மீட்டு பலாசா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • 2 பேர் உயிரிழந்ததால் தொழிலாளர்கள் முந்திரி தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் வஜ்ரபு கொத்தூர் அருகே உள்ள அனக்காப்பள்ளியில் ஏராளமான முந்திரி தோட்டங்கள் உள்ளன.

    தற்போது முந்திரி பழ சீசன் என்பதால் முந்திரி தோட்டங்களில் தொழிலாளர்கள் பழங்களை பறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அனக்காப்பள்ளியை சேர்ந்த லோகநாதம் (வயது 47). கூர்மா ராவ் (49), லோகநாதம் மனைவி சாவித்திரி ஆகியோர் நேற்று காலை முந்திரி தோட்டத்தில் பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது முந்திரி தோட்டத்தில் வந்த கரடி திடீரென பாய்ந்து சாவித்திரையை தாக்கியது. கரடி தாக்குவதை கண்ட லோகநாதம் மனைவியை காப்பாற்ற முயன்றார்.

    அப்போது கரடி லோகநாதத்தையும் தாக்கியது. இதில் இருவரும் வலியால் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகே இருந்த கூர்மா ராவ் ஓடி வந்து தம்பதியை காப்பாற்ற முயன்றார். அவரையும் கரடி சரமாரியாக தாக்கியது. 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

    பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து கரடியை துரத்தினர். அப்போது கரடி முந்திரி தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவர்களை பரிசோதித்த போது லோகநாதம் மற்றும் கூர்மா ராவ் இறந்தது தெரிந்தது.

    இதையடுத்து படுகாயம் அடைந்த சாவித்திரியை மீட்டு பலாசா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கரடி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததால் தொழிலாளர்கள் முந்திரி தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.

    ×