என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல் பாதுகாப்பு"
- தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
- துணை ராணுவ படையினர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (19-ந்தேதி) நடைபெறுகிறது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை முழுவீச்சில் செய்துள்ள நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதை தொடர்ந்து தொகுதிகளில் தங்கியுள்ள வெளி மாவட்டத்தினர் அனைவரும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் மீறி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்பில்லாத தொகுதிகளில் தங்கியிருந்தால் அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு பிறகு லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை போலீசார் மேற்கொள்கிறார்கள்.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 1½ லட்சம் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இருந்தும் 10 ஆயிரம் போலீசார் இன்று வருகை தருகிறார்கள். இவர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களை தவிர துணை ராணுவ படையினர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாகவே 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவ படையினரை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. இதில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் ஏற்கனவே வந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவ படையினரையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில போலீஸ் சார்பில் 2 நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களும் இன்று வருகை தருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது தெரிய வந்துள்ளது.
மதுரையில் 511 சாவடிகளும், இதற்கு அடுத்தபடியாக தேனியில் 381 வாக்கு சாவடிகளும் பதற்றமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சாவடிகள் அனைத்திலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன் கூடுதல் போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள்.
பதற்றமான சாவடிகள் மற்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் இன்று மாலையில் துணை ராணுவ படையினர் மற்றும் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
இன்று மாலையுடன் பிரசாரம் ஓயும் நிலையில் நாளை யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்பதால் அதனை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் சந்தேக நபர்கள் மற்றும் ரவுடிகளை பிடிக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்காக வாகன சோதனை மற்றும் லாட்ஜூகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முன்எச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நாளில் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
- மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
- தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றும், எந்த சூழலிலும் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அதே நேரத்தில் தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக வெளிமாநில போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர ஊர்க்காவல் படையினர், சிறப்பு தமிழ்நாடு சிறப்பு போலீசார், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோரும் தேர்தல் பாதுகாப்புக்காக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகளில் இவர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தந்துள்ளனர். பிரதமர் மோடி 7 முறை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். வருகிற 14-ந்தேதி 8-வது முறையாக மீண்டும் பிரசாரத்துக்காக வருகை தருகிறார்.
ராகுல்காந்தி இன்று மாலை பிரசாரம் செய்ய உள்ள நிலையில் பிரியங்காவும் பிரசாரம் செய்ய உள்ளார். இவர்களை தவிர தமிழக தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்று முக்கிய பிரமுகர்கள் 240 பேர் போலீசாரின் வி.ஐ.பி. பட்டியலில் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணத்தோடு ரவுடிகள் செயல்பட்டு வருகிறார்களா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அவர்களை வேட்டையாட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 20 ஆயிரம் ரவுடிகளை போலீசார் பட்டியல் போட்டு கண்காணித்து வரும் நிலையில் 4 ஆயிரம் பேரிடம் எழுதி வாங்கி உள்ளனர். தேர்தல் நேரத்தில் தொடங்கி ஓராண்டு காலம் வரையில் எந்தவித தவறும் செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கியுள்ள போலீசார் ரவுடிகள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சிறையில் இருந்து வெளிவந்த ரவுடிகள் எத்தனை பேர்? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது பற்றி சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆய்வு செய்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிமம் பெற்று துப்பாக்கியை பயன்படுத்தும் அனைவரும் தேர்தல் நேரத்தில் அவைகளை ஒப்படைத்து விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 17 ஆயிரத்து 583 துப்பாக்கிகள் மாநிலம் முழுவதும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வங்கி பணிகள் மற்றும் முக்கியமான அலுவலகங்களில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், விளையாட்டு போட்டிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு மட்டும் ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் இரவு-பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய எல்லையோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- புதுவையில் 30 மாதிரி ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
- வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 4 பிராந்தியங்களிலும் தயார் செய்யப்படும்.
புதுச்சேரி:
புதுவை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் 26 பேர் போட்டியிடுகின்றனர். அதனால் தேர்தலில் 2 ஓட்டுப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும். புதுவையில் 967 ஓட்டுச்சாவடிகளில் ஆயிரத்து 934 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 967 கட்டுப்பாட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
கூடுதல் எந்திரங்களும் கைவசம் உள்ளன. மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் வருகிற 9-ந்தேதி அனுப்பப்படும். எந்திரம் செல்லும் வழியிலுள்ள மாநிலங்களையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளோம்.
பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து 60 சர்வீஸ் பொறியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 4 பிராந்தியங்களிலும் தயார் செய்யப்படும்.
புதுவையில் 30 மாதிரி ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மாகியில் 31 ஓட்டுப்பதிவு மையங்களை பெண்கள் நிர்வகிக்கின்றனர். தற்போது தபால் ஓட்டுகள் பெறும் பணியிலும் பெண்கள் மட்டும் இப்பிராந்தியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுவையில் குறைவாக ஓட்டுப்பதிவு உள்ள 77 வாக்குசாவடி மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று ஓட்டுப்பதிவு செய்ய விழிப்புணர்வு நடவடிக்கை எடுப்போம். புதுவையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் புகார்கள் தொடர்பாக 1950 எண்ணின் வழியாக 417 புகார்களும், சிவிஜில் செயலி மூலம் 16 புகார்களும் வந்தன.
பதட்டமான 237 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக புதுவைக்கு 10 கம்பெனி ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 கம்பெனி ராணுவம் வந்துள்ளன.
மீதமுள்ள ராணுவ கம்பெனிகள் விரைவில் வர உள்ளன. வாக்காளர்களுக்கு தர பணம் வந்துள்ளதாக புகார்கள் ஏதும் வரவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
- தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னையில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஓட்டு போடுவதற்கு 3,719 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 579 வாக்குச்சாவடிகள் பதட்டமான சாவடிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சாவடிகள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் 16 கம்பெனியை சேர்ந்தவர்கள் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் சென்னைக்கு இதுவரை 2 கம்பெனி துணை ராணுவ படையினர் மட்டுமே வந்து உள்ள நிலையில் மீதமுள்ள 14 கம்பெனி படையினரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வர உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி 200 கம்பெனி துணை ராணுவ படையினர் அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் வந்து விடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக பிரிந்து பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களிலும் கடந்த 16-ந்தேதி முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.43 கோடியே 6 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மதுபான வகைகள் மற்றும் 60 லட்சத்துக்கும் அதிகமான போதை பொருட்கள் ஆகியவையும், 54 கோடிக்கும் அதிகமான பரிசு பொருட்களும் சிக்கியுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பறக்கும் படை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன்மூலம் தேர்தலுக்கு முன்னர் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக பறக்கும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகளை கண்காணித்து வரும் போலீசார் அவர்களின் செல்போன்களையும் கண்காணித்து வருகிறார்கள்.
இதன்மூலம் தலைமறைவாக உள்ள ரவுடிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படி தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநில தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.
- ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
- வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை சி விஜில் செயலி மூலம் 11,305 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 32 துப்பாக்கிகளை சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் சமர்ப்பித்துள்ளனர்.
இதுவரை 453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களிடம் இருந்து 17,800 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் இருந்து வீடு வீடாக இதை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்