search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாலட்சுமி வழிபாடு"

    • தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

    வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதேபோல், இந்த பூஜையில் பங்கேற்கும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வரலட்சுமியை வழிபடலாம். அந்த வழிபாட்டால் மனதில் எண்ணிய கணவர் வாய்ப்பார் என்பது நம்பிக்கை.

    வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

    இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட (எட்டு) லட்சுமிகளாக வழிபடுகிறோம்.

    வரலட்சுமி விரதம் அன்று இந்த அஷ்ட லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

    விரதம் கடைபிடிக்கும் முறை!

    இந்த விரதத்தை மேற் கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

    அங்கு சுவற்றில் படமாகவோ அல்லது வெள்ளியில் கிடைக்கும் வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்க வேண்டும். வர லட்சுமிக்கு ஆடை, ஆபரணங்கள் அணிவிக்க வேண்டும்.

    மண்டபத்தில் வாழை இலையின் மீது ஒரு படி அரிசியை பரப்பி, அம்மன் கலசத்தை தாமிர செம்பிலோ அல்லது வெள்ளியால் ஆன செம்பிலோ வைக்க வேண்டும். அந்த செம்பின் மீது சந்தனத்தை பூசி, அதன் மீது வரலட்சுமி அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் அம்மன் முகத்தை வாங்கி வந்து பதியலாம்.

    கலசத்தின் உள்ளே தேவையான அளவு அரிசியைக் போட்டு அதன் வாய்ப்பகுதியில் மாவிலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு தேங்காயை வைக்கவேண்டும்.

    அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு இட்டு பூ சூட்ட வேண் டும். இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலை யிலேயே செய்து விட வேண்டும்.

    மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும். பூஜை செய்பவர் வலதுபுற மாக இருந்து பூஜை செய்யவேண்டும்.

    சாதம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதே னும் ஒன்றை வைத்து நிவேத னம் செய்யவேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்கவேண்டும்.

    எங்கள் வீட்டில் எழுந்த ருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

    அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்து விட்டு அலங்கா ரத்தை அகற்றிக் கொள்ளலாம்.

    பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

    இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.

    • மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை.
    • சுமங்கலிப் பெண் வேடத்தில் வீடு வீடாக வருவாள்.

    ஒரு சமயம் மகாலட்சுமி எங்கு வாசம் செய்யலாம் என்பதை தேர்வு செய்வதற்காக வயதான சுமங்கலிப் பெண் வேடத்தில் வீடு வீடாக வந்தாள்.

    முதலில் அவள் சென்ற வீட்டில் பொழுது விடிந்த பிறகும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அதனால், அடுத்த வீட்டிற்கு சென்றாள். அந்த வீட்டில் சுத்தமே இல்லாமல் எங்கும் குப்பையாக இருந்தது. அதனால் மூன்றாவது வீட்டை தேடிச் சென்றாள் மகாலட்சுமி.

    அந்த வீட்டில் கணவனும், மனைவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மனைவி தலைவிரி கோலத்தில் இருந்தாள். அதனால் நான்காவது வீட்டைத்தேடி நகர்ந்தாள். அந்த வீட்டின் வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது. பூஜையறையில் இல்லத்தரசியானவள் பக்தியுடன் பாடிக்கொண்டிருந்தாள்.

    அந்த வீடு மங்களகரமாக காட்சியளித்தது. வாசலில் வயதான பெண் வேடத்தில் தேவி நிற்பதை கண்ட அந்த இல்லத்தரசி அங்கு வேகமாக வந்தாள். தேவியை வரவேற்று உபசரித்தாள். தேவிக்கு உண்பதற்கு பால் எடுத்து வர சமையலறைக்குள் சென்றாள். பாலுடன் திரும்பி வந்து பார்த்தபோது தேவி இல்லை. வீட்டிற்கு வந்த அம்மா எங்கே என்று அந்த இல்லத்தரசி தேடினாள். ஆனால் காணவில்லை.

    இதையடுத்து தனது பூஜையை தொடர பூஜையறைக்குள் சென்றாள். அங்கு அறை முழுவதும் செல்வம் கொட்டிக்கிடந்தது. வயதான சுமங்கலிப் பெண் உருவில் தன் வீட்டுக்கு வந்தது செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமிதான் என்பதை அறிந்த இல்லத்தரசி மகிழ்ந்தாள். எனவே வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை.

    • செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாளாகும்.
    • சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் விரதம் இருக்கலாம்.

    மகா விஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அள்ளித் தருவதால் 'வரலட்சுமி' என அழைக்கப்படுகிறார். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாளாகும்.

    மகாலட்சுமி தேவியை வழிபட்டு வேண்டிய வரம் பெறும் சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும்.

    இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் கடைபிடிக்கலாம்.

    வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைபிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை இருக்காது. திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும். சில குடும்பத்தில் வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கம் கிடையாது. அவர்கள் பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று பூஜை செய்யலாம்.

    விரதத்துக்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து பசு மாட்டின் கோமியம் தெளித்து மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில், பலகையை போட்டு, அதன் மீது மாக்கோலம் போட வேண்டும்.

    மகாலட்சுமியின் படம் வைத்து கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பி தட்டு வைத்து அதன் மீது கலசம் வைத்து, பட்டுப்பாவாடை , நகைகள் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து, பூச்சூட்டி, கும்பத்தை அலங்காரம் செய்து கட்டி, கோலமிட்டு மகாலட்சுமிக்கு வரவேற்பு கொடுத்து வீட்டிற்கு அழைத்து கலசத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும்.

    மறுநாள் வெள்ளிக்கிழமை நோன்பு நாளில் நோன்பு சரடை கும்பத்தோடு வைத்து, பஞ்சமுக நெய் விளக்கு ஏற்றி கும்பத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம், அன்னம் நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல் , சுண்டல் போன்ற உணவுப்பொருட்கள் படைக்க வேண்டும்.

    வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்பு சரடை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமியிடம் வேண்டிய வரத்தை கேட்டு வரலட்சுமியின் ஸ்தோத்திரங்களை கூறி, தூப தீப ஆராதனைகளை செய்து வர லட்சுமி தாயை வழிபாடு செய்ய வேண்டும்.

    பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும்.

    பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வர். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமண தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    வயது முதிர்ந்த சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் அதிகம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் இடமும், 8-ம் அதிபதியும் 8-ல் நின்ற கிரகமுமே ஆயுள், மாங்கல்ய பலத்தை தீர்மானிக்கும். 8-ம் அதிபதி சுப கிரக சம்பந்தத்துடன் வலுப்பெற்று விட்டால் அந்த பெண் தன் கணவனுடன் தீர்க்க சுமங்கலியாக தனது சொந்த பந்தங்களுடன் நீண்ட நெடுங்காலம் வாழ்வார். அத்துடன் செவ்வாயும்,சுக்கிரனும் பலம் பெற்றால் லட்சுமி கடாட்சம் நிறைந்த தீர்க்கசுமங்கலியாவார்.


    இத்தகைய அம்சம் நிறைந்த சுமங்கலிகளிடம் வரலட்சுமி நோன்பு அன்று ஆசி பெற்றால் எத்தகைய திருமணத்தடையும் அகலும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும். அதனால் பூஜைக்கு வயதான சுமங்கலிப் பெண்களை அழைத்து உணவு கொடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசி பெறுவது மிகச் சிறப்பு. மறுநாள் புனர் பூஜை செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

    இந்த பூஜையை தொடர்ந்து ஆண்டு தோறும் செய்து வந்தால் லட்சுமி இல்லம் தேடி வருவாள். ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும். வருடம் முழுவதும் வசந்த காலமாகும். லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி ஆகும்.

    • சப்த ரிஷிகளில் முக்கியமானவர் பிருகு முனிவர்.
    • மகாலட்சுமியை பூஜிப்பவர்களுக்கு தரித்திரம் விலகும்.

    சப்த ரிஷிகளில் முக்கியமானவர், பிருகு முனிவர். ஒரு முறை 'மும்மூர்த்திகளில் யார் மிகச் சிறந்தவர்?' என்ற விவாதம் தேவர்களுக்கு இடையே ஏற்பட்டது. அப்போது தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிருகு முனிவரிடம் கேட்டனர். அவரோ நேராக பிரம்மலோகம் சென்றார்.

    அங்கிருந்து பிரம்மனை நோக்கி, "நீர் ஒரு பொய்யர். ஈசனின் திருமுடியை கண்டதாக பொய் கூறினீரே" என்று பலவிதமாக கேலி பேசினார். அதைக் கேட்டு பிரம்மன் வெகுண்டு எழ, அவரது கோபத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து கயிலாயம் சென்றார், பிருகு முனிவர்.

    கயிலாயத்தில் சிவபெருமானை சந்தித்த அவர், "உன்னை எல்லோரும் உலகிற்கெல்லாம் படியளக்கும் ஈசன் என்கிறார்கள். ஆனால் நீயோ பார்வதி தேவியின் சக்திக்கு உட்பட்டவர்" என்றார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தன்னுடைய நெற்றிக் கண்ணை திறக்க, அங்கிருந்தும் தப்பித்து வைகுண்டம் வந்தடைந்தார், பிருகு முனிவர். அங்கு விஷ்ணு யோக நித்திரையில் இருந்தார்.

    அதைக் கண்ட பிருகு முனிவர், "உன் இல்லத்திற்கு வந்த (வைகுண்டத்திற்கு) விருந்தினரை கவனிக்காமல் இப்படி தூங்குவது சரியா? நீ இப்படி தூங்கிக் கொண்டிருந்தால் உலகத்தை எப்படி பரிபாலனம் செய்ய முடியும்?" எனக் கூறி மகாவிஷ்ணுவின் மார்பில் உதைத்தார்.

    இதைக் கண்டு எழுந்த மகாவிஷ்ணு, "நீங்கள் பெரிய முனிவர். நான் உங்களுக்கு தகுந்த மரியாதை அளிக்க தவறிவிட்டேன். என் மார்பில் உதைத்ததால், உங்கள் கால் வலிக்குமே" என்று கூறி, பிருகு முனிவரின் காலை பிடித்துவிட்டார்.

    இந்த சம்பவத்திற்கு பின்னர் தேவலோகம் சென்ற பிருகு முனிவர், அங்கிருந்த தேவர்களிடம், "மும்மூர்த்திகளில் மகாவிஷ்ணுவே உயர்ந்தவர். நான் காலால் உதைத்த போதிலும், மிகப் பொறுமையாக அந்த பிரச்சினையை கையாண்டதால் அவரே உயர்ந்தவர்" எனக் கூறினார். (இதில் பிருகு முனிவரின் காலில் ஒரு கண் இருந்ததாகவும், அந்தக் காலை பிடித்து விடுவதுபோல், அந்தக் கண்ணை மகாவிஷ்ணு பிடுங்கி விட்டதாகவும் ஒரு சிலர் சொல்வர்).

    அதே நேரத்தில் மகாவிஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி வசிப்பதால், மகாலட்சுமி உதைத்த தோஷம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து பிருகு முனிவர், மகாலட்சுமி தாயாரிடம் "நான் செய்த இந்த பெரும் பாவத்தை பொறுத்து, என்னை மன்னித்து அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டினார். அதற்கு மகாலட்சுமி, "நான் உனக்கு குழந்தையாகப் பிறந்து, என் கால்களால் உன்னை உதைப்பேன். அப்போது உன் பாவம் நீங்கும், கவலைப்படாதே" என்று கூறினார்.

    அதன்படியே மகாலட்சுமி தாயார், பிருகு முனிவருக்கு மகளாக பிறந்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன.

    மகாலட்சுமி அவதாரம்

    மகாலட்சுமி, பாற்கடலில் இருந்து தோன்றியவர். அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைவது என்று முடிவெடுத்தனர். கிடைக்கும் அமிர்தத்தை இருவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வது என்றும் தீர்மானித்தனர்.

    பாற்கடலை கடைவதற்கு மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர். வாசுகி பாம்பின் தலை பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர்.

    ஆனால் மந்தார மலை, பாற்கடலில் நிற்காமல் சரியத் தொடங்கியது. அப்போது மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மலையை தன்னுடைய முதுகில் தாங்கினார்.

    அப்படி மந்தார மலையை கடையும் போது முதலில் வெளிவந்தது, ஆலகாலம் என்னும் விஷம். இந்த விஷத்தின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் அனைத்து ஜீவராசிகளும் தவித்தன. அந்த விஷத்தை, சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது கழுத்தில் நின்றதால், அவர் 'நீலகண்டர்' ஆனார்.

    இதற்கு பின் ஐராவதம் என்ற வெள்ளை யானை வெளிவந்தது. அதை இந்திரன் எடுத்துக் கொண்டான். ஐராவதத்திற்கு பின்னர் சந்திரன், காமதேனு, கற்பகத் தரு, மகாலட்சுமி, அமிர்த கலசத்துடன் தன்வந்திரி இப்படி ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தது.

    அப்படி வெளிவந்த மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் சரணடைந்தாள். இந்த மகாலட்சுமி சகலவிதமான செல்வத்திற்கும் அதிதேவதையாக விளங்கினாள்.

    இந்த மகாலட்சுமியை யார் பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு தரித்திரங்கள் விலகும். ஆதிசங்கரர், ஒரு ஏழையின் வறுமையைப் போக்குவதற்காக மகாலட்சுமியின் மீது கனகதாரா துதியை பாடியதன் காரணமாக, அந்த வீட்டின் மீது நெல்லிக்கனி வடிவில் தங்க மழை பொழிந்தது.

    மகாலட்சுமியை வழிபட பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் உகந்தது. இந்த நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வதால், மகாலட்சுமியின் அருளைப் பெறலாம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை வந்தாலும், ஆடி வெள்ளிக்கிழமைகளும், தை வெள்ளிக்கிழமைகளும் சிறப்புக்குரியவையாக பார்க்கப்படுகிறது.

    இந்த நாட்களில் திருவிளக்குப் பூஜை செய்து மகாலட்சுமியை வணங்கினால், நிறைந்த செல்வமும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும். மேலும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மகாலட்சுமியை, 'ஷோடச லட்சுமி' என்று 16 வகையான லட்சுமிகளாக வழிபடும் வழக்கமும் உள்ளது.

    தீபம், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், ஸ்ரீ சூரணம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, கோலம், ஸ்வஸ்திகா சின்னம், யானை, கண்ணாடி ஆகியவற்றில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது.

    திருவிளக்குப் பூஜை செய்வதற்கு வாழை இலை, வெற்றிலை, பாக்கு, பழம், அவல், பொரி, கற்கண்டு, திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரிப்பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், கலச நீர், அரிசி, மஞ்சள், எண்ணெய், திரி, விளக்கு போன்ற பொருட்கள் தேவைப்படும்.

    மகாலட்சுமியை வழிபாடு செய்வதால், ராஜ பதவி, மக்கட்செல்வம், சுற்றம், பொன், நவரத்தினங்கள், நெல் முதலான தானியங்கள், பல்லக்கு, பணியாட்கள் ஆகிய அஷ்ட ஐஸ்வரியங்கள் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

    • வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
    • செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

    குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

    வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள். லட்சுமி, வழிபாட்டின்போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

    மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

    லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

    மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

    வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

    தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

    ×