என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்"
- சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு திருமண விருந்து.
- கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் மொய் எழுதி விட்டு சென்றனர்.
சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வழங்குவதற்காக சேதுபதி பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் உணவு சமைக்கப்பட்டது.நேற்று இரவு மாப்பிள்ளை விருந்து நடந்தது.
திருக்கல்யாணம் முடிந்ததும் இன்று காலை மற்றும் மதியம் கல்யாண விருந்து நடந்தது. இந்த விருந்தில் கல்கண்டு சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெண்பொங்கல், தயிர் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், பச்சடி, வடை ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டனர். திருக்கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் திருமண மொய் எழுதி விட்டு சென்றனர்.
10 டன் எடையில் வண்ண மலர்கள்
மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக திருமணம் நடைபெற்ற திருக்கல்யாண மண்டபம் மற்றும் சுவாமிகள் எழுந்தருளும் பழைய திருமண மண்டபம் நறுமண மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரூ.30 லட்சம் செலவில் மொத்தம் 10 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊட்டி மற்றும் பெங்களூருரில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருக்கல்யாணத்திற்காக பிரத்யேகமாக வரழைக்கப்பட்டிருந்த அரியவகை மலர்களும் இடம் பெற்றிருந்தன.
ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம்
சுவாமி திருக்கல்யாணத்தை காண சித்திரை வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அங்கேயே அமர்ந்து எல்.இ.டி. திரையில் ஒளி பரபரப்பப்பட்ட திருக்கல்யாணத்தை பார்த்தனர். திருக்கல்யா ணத்தை காண வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத பை மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது.
5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. 11 சூப்பிரண்டுகள், 17 கூடுதல் சூப்பிரண்டுகள், 35 டி.எஸ்.பி.க்கள், 96 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுரை மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்த சித்திரை வீதிகளில் 30 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் அசம்பாவி தங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.
மேலும் மதுரை மாநகரில் பல இடங்களில் தயார் நிலையில் ஆம்புலன்சு வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. இவை தவிர சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. அதற்காக ஏராளமான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருக்கல் யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு வசதியாக 70 குடி நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.
சுகாதாரத்துறை சார்பில் 22 துப்புரவு மேற்பார்வையாளர்கள் தலைமையில் 2 ஆயிரம் பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
- சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இன்றைய தினம் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரையில் அரசாளும் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் கற்பக விருட்சம், சிம்மம், பூத, அன்ன, கைலாச பர்வதம், காமதேனு, தங்கப் பல்லக்கு, தங்கக்குதிரை, ரிஷப, நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன் றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர்புரியும் திக்கு விஜயம் நேற்று இரவு விமரிசையாக நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.
கோவிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை ரூ.30 லட்சம் செலவில், 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலை 7.45 மணி அளவில் முதலாவதாக திருக்கல் யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனி வாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார்கள்.
அதன் பின்னர் திருக்கல் யாண வைபவங்கள் வேத மந்திர முழக்கங்களுடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடதுபுறம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையும் எழுந்தருளினர்.
மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி மற்றும் தங்க காசு மாலை, பச்சைக் கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபர ணங்கள் அணிந்திருந்தார். சுவாமி சுந்தரேசுவரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். பிரியாவிடை சிவப்பு பட்டு அணிந்திருந்தார்.
திருக்கல்யாண நிகழ்வு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டது. மேலும் சங்கல்பம், கணபதி ஹோமம், புண்ணியாக வாசனம், பஞ்சகாவியம் நவதானியமிடும் பாலிகா பூஜை நடந்தது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடத்தப்பட்டது. திருக்கல் யாண நிகழ்ச்சியில் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், மீனாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து பவளக்கனிவாய் பெருமாள், தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக் குள் ரிஷப லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் விண்ணதிர மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மீனாட்சி அம்மனாக ஹாலாஸ்யநாதன் பட்டரும், சுந்தரேசுவரராக செந்தில் நாதன் பட்டரும் வேடம் தரித்திருந்தனர். அவர்கள் இருவரும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் சுந்தரேசுவரராக வேடமணிந்திருந்த செந்தில் நாதன் பட்டர், வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார்.
அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர். திருமண நிகழ்ச்சியை கோவிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும் மற்றும் சித் திரை வீதி, மாசி வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டுகளித்தனர்.
சுவாமிகள் திருக்கல்யாணம் நடந்தபோது, கோவிலின் உள்ளேயும், வெளிபுறத்திலும் திரண்டிருந்த பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர். திருக்கல் யாணம் முடிந்த பின்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். திருக்கல்யாணத்தை பார்த்தால் வீட்டில் திருமணமாகாத கன்னிகைகள், இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இதனால் சுவாமி திருக்கல்யாணத்தை காண இந்த ஆண்டும் பல்லாயிரக்கானோர் திரண்டிருந்தனர். பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக சுவாமியும், அம்மனும் பழைய கல்யாண மண்டபத்தில் இன்று முழுவதும் எழுந்தருளி இருப்பார்கள்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கூட்டமாகவே காட்சி அளித்தது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு சேதுபதி பள்ளியில் கல்யாண விருந்து அளிக்கப் பட்டது. பின்னர் விருந்தில் பங்கேற்றவர்கள் மொய் எழுதி சென்றனர். திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரி, தெப்பக் குளம் மாரியம்மன் கோவில், காமராஜர் சாலை சவுராஷ் டிரா பள்ளி, பழைய குயவர்பாளையம் செயின்ட் மேரீஸ் பள்ளி, மதுரை கல்லூரி, எல்லீஸ் நகர் 70 அடி சாலை, அரசரடி இறையியற் கல்லூரி வளாகம் ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள். அதனை காண ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள். நாளை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்