search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்யாட்சன்"

    • நரசிம்ம ஜெயந்தி விரதம் இருப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும்.
    • இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.

    பிரம்மா தன் படைப்புக்கு உதவிபுரிய, சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு புத்திரர்களை படைத்தார். அவர்கள் பிறவியிலேயே பிரம்ம ஞானியாக இருந்ததால், இல்லறத்தில் ஈடுபடாமல் தவயோகியாக எல்லா உலகங்களும் சுற்றி வந்தனர்.

    அதன்படி வைகுண்டத்திற்கும் சென்றனர். அப்பொழுது மகாவிஷ்ணுவின் பாதுகாவலர்களாக இருக்கக்கூடிய ஜெய மற்றும் விஜய என்ற இரு துவார பாலகர்களும், பிரம்மஞானிகள் நால்வரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் வருத்தம் அடைந்த பிரம்ம குமாரர்கள், துவார பாலகர்கள் இருவரையும் சபித்தனர்.

    வைகுண்டத்தின் உள்ளே இருந்த மகாவிஷ்ணு நடந்ததை அறிந்து பிரம்ம குமாரர்களுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரம்ம குமாரர்கள், ஜெய, விஜயர்களின் சாபத்தை போக்க எண்ணினர். மகாவிஷ்ணுவும் அதையே நினைத்தார். அவர் ஜெய, விஜயர்களை நோக்கி, "நீங்கள் பிரம்ம குமாரர்கள் சாபத்தின்படி பூலோகத்தில் பிறந்துதான் ஆக வேண்டும்.

    அதே நேரத்தில் என்னிடம் பக்தி செய்து என்னை மறுபடியும் அடைய விரும்பினால், நீங்கள் ஏழு பிறவி எடுக்க வேண்டும். எனக்கு விரோதியாக பிறந்தால் மூன்று பிறவி எடுத்தால் போதும்" என்றார். ஜெய, விஜயர்கள் "நாங்கள் ஏழு பிறவி வரை காத்திருக்க விரும்பவில்லை. உங்களுக்கு விரோதியாகவே பிறந்து மூன்று பிறவிகளில் உங்களை அடைகிறோம்" என்றனர். (அவர்கள் முதலில் இரண்யாட்சன்- இரண்யகசிபு, பின்னர் ராவணன்- கும்பகர்ணன், இறுதியாக சிசுபாலன்- தந்துவர்த்தன் ஆகிய மூன்று பிறவிகளை எடுத்து இறைவனை அடைந்தனர்.)

    அதே நேரத்தில் காசியப முனிவரின் மனைவியரில் ஒருவரான திதி, 'தங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லையே' என்று வருந்தினாள். ஒரு முறை ஆசிரமத்தில் காசியப முனிவர் இருந்த தருணத்தில் தனது ஆசையை அவள் வெளிப்படுத்தினாள். அப்போது காசியபர், "பெண்ணே.. இது சந்தியா காலம். இந்த நேரத்தில் புத்திர உற்பத்தி நல்லது இல்லை. இரவும் பகலும் சேரக்கூடிய இந்த பிரதோஷ வேளை, பூதங்களும், பிசாசுகளும் விரும்புகின்ற நேரம். இவ்வேளையில் சிவதரிசனம் மட்டுமே சிறந்தது. வேறு சிந்தனை கூடாது. இன்னும் ஒரு முகூர்த்தம் பொறுத்துக்கொள்" என்றார்.

    ஆனால் திதி கேட்பதாக இல்லை. "இவ்வளவு காலம் பொறுத்தாகி விட்டது. புத்திர பாக்கியத்திற்காக இன்னும் தாமதிக்க எனக்கு விருப்பமில்லை" என்று கூறிவிட்டாள். 'இது விதியின் சதியே' என்ற முடிவுக்கு வந்தார், காசியப முனிவர்.

    திதியை நோக்கி, "உனக்கு இரண்டு புதல்வர்கள் பிறப்பார்கள். பிரதோஷ நேரத்தில் நாம் சேர்ந்ததால், அவர்கள் ராட்சச தன்மையுடன் இருப்பார்கள். அவர்கள் இருவரும் சக்கரத்தை கையில் ஏந்திய திருமாலால் அழிவார்கள்" என்றார்.

    உடனே திதி, "இத்தனை காலம் ஆன பிறகு பிறக்கும் பிள்ளைகள், அசுரர்களாகவா பிறக்க வேண்டும். நம் வம்சம் சிறக்க ஹரி பக்தியுடன் குழந்தைகள் இருக்க வேண்டாமா?" என்று கேட்டாள். அதற்கு காசியபர், "கவலைப்படாதே. உனக்கு பிறக்கும் இரு பிள்ளைகளில் ஒருவனுக்கு பிறக்கும் குழந்தை, விஷ்ணு பக்தியுடன் விளங்குவான். சிறந்த பக்தனாகவும், நாராயண மந்திரத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்லக் கூடியவனாகவும் இருப்பான்" என்றார்.

    தொடர்ந்து காசியபர்- திதி தம்பதியருக்கு, இரண்யாட்சன், இரணியகசிபு ஆகிய இருவரும் பிறந்தனர். இரண்யாட்சனை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து கொன்றார். இதை அறிந்த இரண்யகசிபு, மகாவிஷ்ணுவை வெற்றிகொள்ள கடும் தவம் செய்யத் தொடங்கினான்.

    இரண்யகசிபு மந்தார மலையில் தவம் செய்த நேரத்தில், அவன் அரண்மனையில் புகுந்த இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை தூக்கிச் சென்றான். அப்போது நாரதர், "இந்திரா.. நீ இவ்வாறு செய்யக்கூடாது. இந்த பெண் கர்ப்பவதியாக இருக்கிறாள்" என்று கூறினார். அதற்கு இந்திரன், "நாரதரே.. இரணியன் எங்களுக்கு மிகுந்த தொல்லையை கொடுக்கிறான். இவனுக்கு குழந்தை பிறந்தால், இதைவிட எங்களுக்கு வேறு என்ன அபாயம் வேண்டும்" என்றான்.

    அதற்கு நாரதர் "இப்பொழுது பிறக்கப் போகும் குழந்தை, சிறந்த ஹரி பக்தன். நீ அவனை அழிக்க முடியாது" என்றார். அதைக் கேட்ட இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை விட்டு விட்டுச் சென்று விட்டான். நாரதர், அந்த பெண்ணை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அந்த பெண்ணுக்கு நாராயண மந்திரத்தை தொடர்ந்து கூறும்படி அறிவுறுத்தினார். அந்த பெண் சொல்வதை, கருவில் இருந்த குழந்தையும் மந்திர உபதேசமாக எடுத்துக் கொண்டது. அப்படி இறைவனின் நாமத்தைக் கேட்டு பிறந்தவர்தான், பிரகலாதன்.

    இந்த நிலையில் இரண்யகசிபு செய்த கடும் தவந்தால், மூன்று உலகங்களும் தகித்தன. பூகம்பம் ஏற்பட்டது. காடுகள் தீப்பற்றி எறிந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனை சரணடைந்தனர்.

    பிரம்மதேவர் உடனடியாக இரண்யகசிபு முன்பாக தோன்றினார். "உன் தவத்தை இத்துடன் நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டும்" என்றார். அதற்கு இரண்யகசிபு, "எனக்கு மரணம் இல்லாத வரத்தை அருளுங்கள்" என்றான். "மரணமே இல்லாத வரத்தை யாருக்கும் அருள முடியாது. ஆனால் நீ வேறு விதமாக வரம் கேள், தருகிறோம்" என்றார், பிரம்மன்.

    உடனே இரண்யகசிபு, "ஆணாலோ, பெண்ணாலோ, தேவர்களாலோ, அசுரர்களாலோ, உங்களால் படைக்கப்பட்ட எந்த ஒரு ஜீவராசிகளாலும் என் உயிர் போகக்கூடாது. மேலும் பூமியிலும், ஆகாயத்திலும், வீட்டின் உட்புறத்திலும், வீட்டின் வெளிப்புறத்திலும் என் உயிர் பிரியக் கூடாது.

    ஆயுதங்களாலோ அல்லது விஷங்களாலோ என் உயிர் பிரியக்கூடாது" என்று பல விதமான வரங்களைக் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்டபடி வரம் அருளினார். இதையடுத்து இரணியகசிபு மூன்று உலகத்தையும் வென்றான். மண்ணுலகும் விண்ணுலகும் அவன் வசமாகியது.

    இரண்யகசிபு தனது குருவான சுக்ராச்சாரியாரின் புதல்வர்களாகிய சண்டன் மற்றும் அமர்க்கன் ஆகியோரிடம், பிரகலாதனுக்கு கல்வி கற்றுக் கொடுக்க உத்தரவிட்டான். பிரகலாதனுக்கு பல வித்தைகளை அவர்கள் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். பிரகலாதனுக்கு குருகுல வாசம் ஆரம்பமாகியது. சில காலம் சென்ற பிறகு இரண்ய கசிபு, குருகுலத்திற்கு வந்து பிரகலாதனிடம் "என்ன கற்றாய்?" என கேட்டான். தன் பிள்ளை 'தன்னைவிட மேலான சக்தி உலகத்தில் எதுவும் இல்லை. தானே மிகப் பெரிய சக்தி, பிரம்மம்' என்று கூறி புகழ்வான் என்று நினைத்தான்.

    ஆனால் பிரகலாதனோ "தந்தையே.. இந்த ஜென்மத்தில் மோட்சம் அடைய ஒரே வழி, ஹரி பக்தி மட்டுமே" எனக் கூறினான். இதைக்கேட்ட இரண்யகசிபு கடும் கோபம் கொண்டு ஆசிரியர்களை நோக்கி, "நீங்கள் என்ன சொல்லிக் கொடுத்தீர்கள். இவன் என்ன சொல்கிறான்" என்று கடுமையாக கேட்டான்.

    பின்னர் தன் மகனிடம் திரும்பி, 'என் விரோதியான விஷ்ணுவை புகழ்பவன், மகனாயினும் தண்டிக்கத்தக்கவன்' என கூறி, கடலில் தூக்கிப்போட்டான். ஆனால் அதில் இருந்து பிரகலாதன் மீண்டு வந்தான். பின்னர் ஆயுதங்களால் தாக்கச் சொன்னான். யானையை விட்டு மிதிக்கச் சொன்னான். விஷம் அருந்தக் கொடுத்தான். அனைத்திலும் இருந்து மீண்ட பிரகலாதன், 'எமன் அறியாமல் உயிர் போகாது. விஷ்ணுவே பரம்பொருள்' என்று நிரூபித்தான்.

    இனிமேலும் பிரகலாதனை தண்டிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட இரண்யகசிபு, நேரடியாக விஷ்ணுவுடன் மோத முடிவு செய்தான். தேவர்களால் மரணம் நேராது என்ற வரத்தை நினைத்துக் கொண்டான். பின்னர் பிரகலாதனை நோக்கி, "உன் விஷ்ணுவை எனக்கு காட்டு. அவனிடம் நான் யுத்தம் செய்கிறேன்" என்றான்.

    "மரியாதைக்குரிய எனது தெய்வமான விஷ்ணு பகவான், நீங்கள் நினைப்பது போல் ஓரிடத்தில் மட்டுமே இருப்பவர் அல்ல.. அவர் எங்கும் நிறைந்திருப்பவர்" என்றான், பிரகலாதன். அப்போது இரண்யகசிபு அங்கிருந்த ஒரு தூணைக் காட்டி "இந்த தூணில் உன் ஹரி இருக்கிறானா?" என்றான். அதற்கு பிரகலாதன் "நிச்சயம் இருப்பார்" என்று பதிலளித்தான். உடனே இரண்யகசிபு, தன் வலிமையான கதாயுதத்தைக் கொண்டு அந்தத் தூணை பிளந்தான். அப்போது அதன் உள்ளே இருந்து, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்மர் தோன்றினார்.

    நரசிம்மர் இரண்யகசிபுவுடன் கடுமையான யுத்தம் செய்தார். பின்னர் அவர் பெற்ற வரத்தின்படியே, இரவும் இல்லாமல், பகலும் இல்லாத பிரதோஷ வேளையில், வீட்டில் உள்ளேயும், வெளியேயும் இல்லாமல் வாசல் படியின் மேல், ஆகாயத்திலும் இல்லாமல், பூமியிலும் இல்லாமல் தன் மடியின் மேல் வைத்து, ஆயுதங்கள் இல்லாமல் தன் கை நகங்களால் அவனை வதம் செய்தார்.

    இரண்யகசிபு வதம் முடிந்த பிறகு லட்சுமி நரசிம்மராக காட்சி கொடுத்து, பிரகலாதனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார் நரசிம்மர். அதற்கு பிரகலாதன், "என் தந்தை தவம் செய்து பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களால் வதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மோட்சம் வழங்க வேண்டும்" என்றான்.

    அதற்கு நரசிம்மர், "நீ என் மீது பக்தி கொண்டு பிறந்த காரணத்தினால், உன் தந்தைக்கு மட்டுமல்ல.. உனக்குப் பின் வரக்கூடிய 21 தலைமுறையினர் உன்னால் மோட்சம் அடையப் போகிறார்கள்" என்றார்.

    நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும். செய்வினை, ஏவல் போன்ற பிரச்சினை அகலும். இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.

    ×