search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழும்பு அரசு மருத்துவமனை"

    • வெளிநாடுகளில் இருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு, இந்த கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஒரு குழந்தை பிறக்க ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.

    நாட்டிலேயே முதல்முறையாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.97கோடியில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் - பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையிலான இந்த வளாகத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

    அப்போது அவர்கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு, இந்த கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் மகப்பேறுகளில் தாய்மார்களின் இறப்பு 70-க்கும் மேல் இருந்தது. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து, அதில்வெற்றியும் கண்டுள்ளது. இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 2 ஆண்டுக்கு முன்பு 54, கடந்த ஆண்டு 52, இந்த ஆண்டு 45 எனபடிப்படியாக குறைந்துள்ளது.

    இந்தியாவில் 25-45 வயது பெண்களிடம் கருத்தரிப்பின்மை பாதிப்பு 3.9 சதவீதம் இருப்பதை உலக சுகாதார மையம்உறுதிப்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைதான் இதற்கான காரணங்களாக உள்ளன.

    அரசு சார்பில் எழும்பூர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை தொடங்கி வைத்துள்ளோம். 8 படுக்கைகள் கொண்ட அதிநவீன பிரசவ அறை திறந்து வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத அளவுக்கு தரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.


    அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டிருப்பது நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். சண்டிகர், டெல்லி, மகாராஷ்டிரா அரசுமருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏற்கெனவே இருந்தாலும், அங்கு ஒரு கருத்தரிப்பு சுழற்சிக்கு ரூ.2.5 லட்சம் வரை செலவாகும். ஒரு குழந்தை பிறக்க ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.

    ஆனால், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் முழுமையாக இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அதிநவீன பிரசவஅறை ரூ.89.96 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2-வது செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்குவதற்கான பணி நடந்துவருகிறது. அந்த மையமும் விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

    ×