search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டீடோஹெபடைடிஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்லீரலில் கொழுப்பு படிவதால் வருகிறது.
    • ஆல்கஹால் அல்லாத கொழுப்பு நோய் என்றழைக்கப்படும்.

    கல்லீரலில் கொழுப்பு படிவதால் இந்நோய் வருகிறது. இது மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் வருகின்ற சாதாரண கல்லீரல் நோய் ஆகும். ஆகவே இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு நோய் என்றழைக்கப்படும்.

    இது ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வருகிறது, உடல் பருமனாக இருப்பவர்களிடம் அதிகமாக இது காணப்படுகிறது.

    கல்லீரலில் கொழுப்பு உடைய சிலருக்கு, 'ஆல்கஹால் அல்லாத ஸ்டீடோஹெபடைடிஸ்' என்ற நோய் நிலை ஏற்படுகிறது. இது கொழுப்பு கல்லீரல் நோயின் தீவிர நிலையாகும்.

    இந்நிலையில், கொழுப்பு படிவுகளால் கல்லீரல் வீங்கி சேதமடைகிறது. இதை கவனிக்காமல் விட்டால் நிலைமை மோசமடைந்து, சிரோசிஸ் எனப்படும் கடுமையான கல்லீரல் வடு மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு கூட ஒரு சிலருக்கு வழிவகுத்து விடும்.

    கல்லீரல் கொழுப்பு நோயின் பொதுவான அறிகுறிகள்:-

    உடல் சோர்வு, சுறுசுறுப்பில்லாமல் சோம்பலாக இருப்பது, சிறு வேலை செய்தாலும் படுக்க வேண்டும் என்று நினைப்பது, உடல்நலக்குறைவு, வயிற்றின் வலது மேல் பகுதியில் வலி அல்லது அசவுகரியம், சிறிதளவு உணவு சாப்பிட்டாலும் வயிற்றுப் பொருமலுடன் காணப்படுவது.

    நோய்க்கான காரணம்:

    1. மரபியல்

    2. அதிக எடை அல்லது உடல் பருமன்

    3. இன்சுலின் எதிர்ப்பு, இது உடல் செல்கள் இன்சுலின் ஹார்மோனுக்கு பதில் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாதபோது நிகழ்கிறது

    4. டைப் 2 வகை நீரிழிவு

    5. உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை

     கல்லீரல் கொழுப்பு நோயாளிகளுக்கான உணவு பழக்க வழக்கங்கள்:-

    கல்லீரலின் ஆரோக்கியம் நல்ல உணவில் இருந்து ஆரம்பிக்கிறது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், இவைகளை சாப்பிட வேண்டும். மது குடிப்பது கல்லீரலை சேதப்படுத்துவதால் அதை தவிர்க்க வேண்டும்.

    ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும், அதிக கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    உணவில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், சீரகம், கருஞ்சீரகம், சுரைக்காய், முள்ளங்கிக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய், பச்சைக் காய்கறிகள், கீரைகள், முழுத்தானியங்கள், பாதாம், வால்நட், ப்ளாக் சீட்ஸ் (அலிசி விதை) ஆளி விதை, பூசணி விதை இவைகளை எடுக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1. கீழாநெல்லிச் சூரணம் 1 கிராம், குங்கிலிய பற்பம் 200 மி.கி. மூன்று வேளை வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    2. சாந்த சந்திரோய மாத்திரை 1-2 வீதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    3. கரிசாலை, மூக்கிரட்டை, பிடங்குநாறி இவைகளின் பொடியை தலா 1 கிராம் எடுத்து, தண்ணீரில் காய்ச்சி 60 மி.லி. குடிநீராக அருந்த வேண்டும்.

    ×