search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி செல்வம்"

    • அஞ்சுகிராமம் பகுதியில் பணம் பறிப்பு சம்பவத்தில் செல்வம் ஈடுபட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் செல்வம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக ஏ1 என்பது உள்பட 4 வகைகளில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி குமரி மாவட்டம் தென் தாமரை குளம் அருகே உள்ள கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் என்பவரையும் போலீசார் தேடி வந்தனர். அவன் மீது 6 கொலை உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலிலும் அவன் உள்ளான். இதனால் அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அஞ்சுகிராமம் பகுதியில் பணம் பறிப்பு சம்பவத்தில் செல்வம் ஈடுபட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர் ஆனால் அதற்குள் செல்வம் தப்பிச் சென்று விட்டார்.

    தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பகுதியில் செல்வம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.

    போலீசாரை கண்டதும் செல்வம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். அதற்கு பலன் கிடைக்காததால் அவன் கத்தியால் போலீசாரை தாக்க முயன்றான். இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜூக்கு கத்திக்குத்து விழுந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் ஆதம்அலி பாதுகாப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ரவுடி செல்வத்துக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவனை பிடித்த போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜூம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி செல்வம், குமரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்றாலும் தற்போது நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் வசித்து வந்துள்ளான்.

    இவன் தூத்துக்குடியில் தான் பெரும்பாலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். இதனால் அவனை தூத்துக்குடி செல்வம் என்றே அழைத்து வந்துள்ளனர்.

    ×