search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை மழை"

    • மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • தலைமைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக வணிக வரித்துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.


    மேலும், மதுரை மாவட்ட கலெக்டரையும் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.

    குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


    மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.


    தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • குளிர்ந்த காற்று வீச அதனை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது.
    • கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் மதுரையில் பலத்த மழை கொட்டியது.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றின் மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் மதுரை மாநகரை கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர்ந்த காற்று வீச அதனை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது.

    மாலை 3 மணி முதல் 3.15 மணி வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. திடீரென பெய்த பேய் மழையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி, கீழவாசல், காமராஜர் சாலை, டவுன்ஹால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் தீபாவளி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் சிரமம் அடைந்தனர். அடை மழை காரணமாக மதுரை நகரில் உள்ள ஆத்திக்குளம் கண்மாயில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. கரை பலவீனமாக இருந்தால் சிறிது நேரத்தில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதேபோல் புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    இதனால் செல்லூர், அய்யர் பங்களா, ஆத்திக்குளம், நரிமேடு, கோசாகுளம், சர்வேயர் காலனி, ஆனையூர், பொதும்பு, குலமங்கலம், மகாத்மா காந்தி நகர், விஸ்வநாதபுரம், இன்கம்டாக்ஸ் காலனி ரோடு, முல்லை நகர், கூடல் நகர் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் சென்றது. பல தெருக்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொதுமக்கள் முக்கிய ஆவணங்களை எடுத்து கொண்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினார். வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தால் குழந்தைகள், வயதானவர்கள் கடும் அவதி அடைந்தனர்.


    இதேபோல் மதுரை புறநகர் பகுதிகளான ஒத்தக்கடை, நரசிங்கம், ராஜகம்பீரம், கொடிக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. கண்மாயிலுக்கு செல்லும் ஓடைகளில் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. பல பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது.

    மாலையில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை பரவலாக பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கின. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    பல மணி நேரம் ஆகியும் மாநகராட்சி மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் புகுந்ததால் வீட்டுக்குள் செல்ல முடியாமல் அவர்கள் வெளியிலேயே பல மணி நேரம் காத்திருந்தனர்.

    இரவு 8 மணி வரை அருகில் உள்ள ஆத்திகுளம் கண்மாயிலிருந்து தொடர்ந்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கடேசன் எம்.பி., கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள 4 அரசு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அங்கு அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

    மதுரை மாநகரில் நேற்று வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. 1955-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஒரே நாளில் மட்டும் 11 சென்டிமீட்டர் மழை மதுரை மாநகரில் பதிவாகி உள்ளது. குறிப்பாக நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் மதுரை மாநகரில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் அதிகனமழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் மதுரையில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக செல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. அந்த தண்ணீரே வடியாத நிலையில் நேற்று பெய்த மழையால் மீண்டும் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை செல்லூர், அய்யர்பங்களா, நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தண்ணீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    மாவட்ட நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டுள்ளது. நவீன மின் மோட்டார்கள் மூலம் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுரை மாநகர மக்களுக்கு இந்த பருவ

    மழையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

    இதனிடையே இன்று காலை பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. இதன் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு வருவாய் வட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    ×