search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speaked dhanabal"

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜியும், உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு வழங்கியுள்ளதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #MLAsDisqualification
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு அளித்தனர். 

    இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும், அந்த நீதிபதியை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.



    சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில அம்சங்கள் பின்வருமாறு:-

    தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என கூற முடியாது. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் சபாநாயகரின் அதிகாரங்களில் நீதிபதிகள் குறைந்த அளவே தலையிட முடியும். சபாநாயகர் முடிவெடுக்க பயன்படுத்தும் சட்டங்களில் முரண்பாடு இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

    சபாநாயகர் உரிமையை மீறி முடிவு எடுத்தாலோ, சட்டம் மற்றும் இயற்கை நியதி மீறப்பட்டிருந்தாலோ மட்டும் நீதிமன்றம் தலையிட முடியும். தனிப்பட்ட விரோதம் காரணமாக சபாநாயகர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இந்த வழக்கில் இல்லை. 

    கட்சியிலிருந்து விலகுவது மட்டுமல்லாமல் அதுமாதிரியான நடவடிக்கைகள் கூட கட்சித்தாவல்தான் என்று கருத வேண்டும் என சுப்ரீம்  கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனடிப்படையில், சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இருப்பதாக தெரியவில்லை. முழுக்க முழுக்க சட்டவிதி மீறப்பட்டாலோ அல்லது சட்டவிதிகளை பின்பற்றாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ முடிவெடுத்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். 

    இவ்வாறு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலையில், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில் உள்ள அம்சங்கள் பின்வருமாறு:-

    சபாநாயகரின் இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. தகுதி நீக்க உத்தரவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதனடிப்படையில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியம். ஆளுநரை சந்தித்து மனு கொடுத்ததை ஏற்றுக்கொண்டு கட்சித்தாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது.

    அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதனை குலைக்க கொடுக்கவில்லை. கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ.க்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும் ஜக்கையனுக்கு ஒரு முடிவும் சபாநாயகர் எடுத்துள்ளார்.

    இந்த காரணங்களுக்கான சபாநாயகரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது.

    இவ்வாறு நீதிபதி சுந்தர் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    ×