search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri lanka parliament dissolution"

    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. #SriLankaParliament #Ranil #UNP
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் நேற்று இரவு பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    சிறிசேனாவின் நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த சபாநாயகர் கரு.ஜெயசூர்யா, தற்போதைய பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கையையும் ஏற்கவில்லை. 

    இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளார். அவர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வழக்கு தொடரப்படுகிறது.

    நீதிமன்றம்  தலையிட்டு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், சர்வாதிகார நடவடிக்கைகளில் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வழக்கு தொடரப்படும் என ஐக்கிய தேசிய கட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    சிறிசேனாவின் கொடுங்கோன்மை இனி நீதிமன்றங்கள், பாராளுமன்றம் மற்றும் தேர்தலில் போராட வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி மங்கள சமரவீரா தெரிவித்தார். #SriLankaParliament #Ranil #UNP
    ×