search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state holiday"

    • 4 சட்ட கல்லூரி மாணவர்கள் வழக்கை தொடர்ந்திருந்தனர்
    • மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதிப்பதை தவிர்த்தது நீதிமன்றம்

    உத்தர பிரதேச அயோத்தியாவில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமருக்கு கோவில் கட்டப்பட்டு வந்தது.

    நாளை, ஜனவரி 22 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

    இந்தியாவில் 15 மாநிலங்கள் இந்நிகழ்ச்சிக்காக விடுமுறை அறிவித்தன. அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலமும் ஜனவரி 22 அன்று அரசு விடுமுறை என அறிவித்தது.

    ஆனால், இந்த விடுமுறையை எதிர்த்து 4 சட்ட கல்லூரி மாணவர்கள், பொதுநல வழக்கு (Public Interest Litigation) ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

    இன்று சிறப்பு அமர்வில், ஷிவாங்கி அகர்வால், சத்யஜித் சால்வே, வேதாந்த் அகர்வால் மற்றும் குஷி பாங்கியா எனும் 4 சட்ட கல்வி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள், ஜி.எஸ். குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கினர்.

    அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதாவது:

    விடுமுறைகள் குறித்த முடிவுகள் மாநிலங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை. மதசார்பின்மைக்கு ஒத்து போகும் வகையில் வழிபாடு குறித்த விடுமுறைகளை மாநிலங்கள் அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த மனுவில் அவ்வாறு மாநிலம் செயல்படவில்லை என காட்ட மனுதாரர்கள் தவறி விட்டனர். இந்த மனு, அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், விளம்பர மோகத்தாலும் தூண்டப்பட்டதாக தெரிகிறது. இது பொதுநல வழக்கல்ல; பொது விளம்பர வழக்கு (publicity interest litigation). எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் எதிர்காலத்தில் கவனமாக இருப்பார்கள் என கருதி, அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக, விசாரணைக்கு எடுத்து கொள்ளும் முன்பே வழக்கு குறித்த விவரங்கள் ஊடகங்களில் எவ்வாறு கசிந்தது என மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டதற்கு, தங்களுக்கும் அது தெரியாது என அவர்கள் பதிலளித்தனர்.

    ×