search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state's finances"

    • என்.டி.ஏ. அரசு 2004ல் பழைய பென்சன் திட்டத்தை நிறுத்தி விட்டது
    • தொடக்கம் முதலே அரசு ஊழியர்கள் புது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

    அரசு ஊழியர்களின் பணிக்காலம் நிறைவடைந்ததும் அவர்கள் இறுதியாக வாங்கிய ஊதியத்தின் அடிப்படை தொகையை கணக்கிட்டு மாதாமாதம் நிலையாகவும் நிரந்தரமாகவும் ஒரு தொகையை அரசாங்கம் வழங்கி வந்தது. இது மாதாமாதம் முதல் வாரத்தில் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதால், நிலையான நிரந்தரமான வருமானமாக அவர்களுக்கு இருந்தது. இத்திட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) எனப்படும்.

    2004ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதில் மாற்றம் கொண்டு வந்தது. இதன்படி அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து தாங்களாக முன்வந்து ஒரு தொகையை மாதாமாதம் செலுத்த வேண்டும். இத்துடன் பணியாளர்களின் அடிப்படை தொகையின் 14 சதவீதத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து தன் பங்காக அரசாங்கம் ஒரு தொகையை செலுத்தும். இதுவே ஓய்வூதியமாக வழங்கப்படும். இத்திட்டம் புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) எனப்படும்.

    2009 வருடத்திலிருந்து 18 வயதிலிருந்து 60 வயது வரை எந்த துறையில் பணியாற்றுபவரும் புதிய பென்சன் திட்டத்தில் சேரலாம் என இத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டது.

    அரசின் செலவினங்களை குறைக்கும் முயற்சியாகவும், பல துறைகளை சேர்ந்தவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில் அமைந்ததாலும், இத்திட்டத்தை பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் பின்பற்றி வந்தன.

    ஆனால், நிரந்தரமாக மாதாமாதம் ஊழியர்களுக்கு கிடைத்து வந்த நிலையான வருமானம் நின்று போனதால், அரசு ஊழியர்கள் என்.பி.எஸ். திட்டத்தை எதிர்த்து வந்தனர்.

    சமீபத்திய சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வென்றுள்ள பா.ஜ.க. அங்கு முன்னர் இருந்த அரசுகள் அமல்படுத்தி வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர போவதாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் வென்றுள்ள தெலுங்கானாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி (RBI) "மாநில நிதிநிலைமை: 2023-24க்கான பட்ஜெட் குறித்த ஆய்வு" எனும் அறிக்கையை வெளியிட்டது. அதில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    "சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மீண்டும் திரும்பி உள்ளதும், சில மாநில அரசுகள் திரும்ப உத்தேசித்திருப்பதும் தவறான முடிவு. இது மாநில அரசுகளின் நிதி ஆதாரத்திற்கு பெரும் சுமையாக மாறி விடும். மாநிலத்தில் ஒரு அரசு செயல்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான பெரும் திட்டங்களுக்கான செலவினங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும். இது ஒரு பிற்போக்கான முடிவு. இதன் மூலம் சுமார் 4.5 மடங்கு வரை நிதிச்சுமை அதிகரிக்கும் அபாயம் உள்ளது" என மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எதிர்கட்சிகள் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்துவோம் என பிரசாரம் செய்வதும், அதற்கு ஒரு சில அரசு ஊழிய தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு அளிப்பதும் அதிகரித்து வரும் நிலையில், ஆர்.பி.ஐ.-யின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

    ×