search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite cooper factory"

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் போராட்டத்தில் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக இருந்தது. அப்போது வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், அதிகப்படியான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டியதை அடுத்து ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    மிக முக்கியமான வழக்குகளை மட்டும் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதமே விசாரணை தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். #Thoothukudi #Sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்திய பாகம், சிப்காட், முத்தையாபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த கலவரம் தொடர்பாக 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை விசாரணைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று விசாரணைக்காக பலர் வந்திருந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி சாட்சிகளை பதிவு செய்தனர். இன்று 2-வது நாளாக காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சி.பி.சி.ஐ.டி கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன், துணைக் கண்காணிப்பாளர் அணில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, காயமடைந்த அனைவரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    வழக்குகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்களை சேகரித்து உள்ளனர். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் ரத்தக் கறை படிந்த உடைகள், உடலில் பாய்ந்த துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் தடயங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான போலீசார், தாங்கள் சேகரித்த தடயங்களை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சங்கர் முன்னிலையில் தலைமை எழுத்தரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த தடயங்கள் அனைத்தும் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. இதேபோல துப்பாக்கி சூடு தொடர்பான கள ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், துப்பாக்கிக்கள் போன்றவையும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. #Thoothukudi #Sterlite
    “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #Sterlite #TNMinister #KadamburRaju
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலில் மீன்பிடிக்க செல்ல 15 அடி நீளமும், 150 எச்.பி. திறனும் கொண்ட விசைப்படகுகள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 24 அடி நீளமும், 240 எச்.பி. திறனும் கொண்ட பெரிய விசைப்படகுகளில் சென்று கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீன வர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதை ஏற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்தகைய பெரிய விசைப்படகுகளையும் கடலில் மீன்பிடிக்க அனுமதித்து உடனே அரசாணை பிறப்பித்தார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்படி சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தாரோ, அதேபோன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரும் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. அது மக்களின் உணர்வு பிரச்சினை.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 99 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை. 43 நாட்கள் முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்து, அதனை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

    தி.மு.க. ஆட்சிக்காலத்தில் துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு, 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.  #Sterlite #TNMinister #KadamburRaju
    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு, வர்த்தக மற்றும் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. #Sterlite
    சென்னை:

    பொதுமக்களின் தொடர் போராட்டத்தையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் ஆலை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

    இதற்கு அடுத்த நடவடிக்கையாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்காக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 342.22 ஏக்கர் நிலத்துக்கான ஆணையையும் சிப்காட் நிறுவனம் ரத்து செய்தது.

    இந்தநிலையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் தமிழ்நாடு குழு தலைவர் அரு.ராம.அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் ஏராளமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. எனவே அதனால் ஏற்படும் மாசுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சுதந்திரமான நிபுணர் குழு ஒன்றை அமைக்கவேண்டும்.

    உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் மாசுகள் அப்பகுதியில் இருந்தால், அதனை அகற்றுவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அந்த நிபுணர் குழு உடனடியாக தேவையான ஆலோசனைகளை வழங்கவேண்டும்.

    ஆலையை மூடினால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இதற்காக உடனடியாக நீடித்த, நிலையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

    தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் (சரியான நேரத்தில் ஒப்புதல் வழங்குதல், மாசு கட்டுப்பாட்டு விதிகளில் வெளிப்படைத்தன்மை, உகந்த கட்டுமானம் மற்றும் திறமையான தொழிலாளர் கொள்கைகள்) முற்போக்கான ஆட்சியை வழங்குவது கட்டாயம் ஆகும்.

    அதே சமயத்தில் அருகாமையில் உள்ள சமூகங்களை தத்தெடுப்பதோடு, கார்பரேட் துறையையும் ஊக்குவிக்கவேண்டும். ஆர்வங்கள் தேவையற்ற வகையில் செலவிடப்படுவதை விடவும், மாநிலத்தின் உள்ளடங்கிய வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரின் செயல்பாடுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Sterlite #SterliteProtest
    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என்பதா? இதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தடியடியில் காயம் அடைந்தவர்கள் ஆவேசமாக கூறினர். #SterliteProtest #Rajinikanth
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 22-ந்தேதி நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறினார். ரஜினிகாந்தின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


    இந்த நிலையில் போலீஸ் தடியடியில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ரஜினிகாந்த் கருத்து குறித்து ஆவேசமாக பதிலளித்தனர்.

    தேவர் காலனியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் முதலில் பேட்டி கொடுத்து விட்டு, அதன்பிறகு பணம் கொடுத்து இருந்தால் அந்த பணத்தை வாங்கி இருக்க மாட்டோம். எங்களிடம் நன்றாக பேசிவிட்டு, ஆஸ்பத்திரிக்கு வெளியில் இப்படி பேட்டி கொடுத்தது வருத்தம் அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய எங்களை சமூக விரோதிகள் என்பதா? இதற்கு அவர், வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடியடியில் காயம் அடைந்த பிளஸ்-2 முடித்த மாணவி பினோலின் பிரியங்கா கூறுகையில், “நாங்கள் அமைதியான முறையில் போராடினோம். போராட்டத்துக்கு சிறு குழந்தைகளையும் அழைத்துச் சென்றோம். வன்முறையில் ஈடுபடுவதாக இருந்தால் நாங்கள் குழந்தைகளை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்.

    எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த், சமூக விரோதிகள் என்று கூறியுள்ளார். இது தேவை இல்லாத வார்த்தை. இந்த மனநிலையில் அவர் எங்களை சந்தித்து இருக்க கூடாது. போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்கிறார் ரஜினிகாந்த். போராட்டம் நடத்தினால்தான் தமிழகம் நல்ல மாநிலம் ஆகும். எங்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.


    10-ம் வகுப்பு மாணவி டிசானி கூறுகையில், “நான் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளேன். ரஜினிகாந்த் சாரை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எனது முதுகில் தட்டிக்கொடுத்து பேசினார். ஆனால், ஆஸ்பத்திரிக்கு வெளியே சென்ற பிறகு, எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் என்று கூறியுள்ளார். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள்தான் போராடினோம். சமூக விரோதிகள் யாரும் போராடவில்லை. நாங்கள் குடும்பமாக சென்றுதான் போராடினோம். அந்த வார்த்தையை அவர் கூறியிருக்க கூடாது. அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

    திரேஸ்புரத்தைச் சேர்ந்த எடிட்சன் கூறுகையில், “கடந்த 22-ந்தேதி நடந்த சம்பவத்தின்போது போலீசார் என்னை கைது செய்து வல்லநாடு, புதுக்கோட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் வைத்து இருந்தனர். அதன்பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். தடியடி சம்பவத்தில் எனக்கு காயம் இருப்பதால் நான் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளேன். ரஜினிகாந்தின் இந்த கருத்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சமூக விரோதிகள் யாரும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடவில்லை. போராட்டம் நடந்தால்தான் நல்ல தமிழ்நாடு உருவாகும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் நாங்கள் இதைவிட வேகமாக போராடுவோம். எங்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று ஆவேசமாக கூறினார். #SterliteProtest #Rajinikanth
    ‘தூத்துக்குடி சம்பவத்துக்கு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்டுவோம்’ என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று வெளிநடப்பு செய்த பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக நேற்று (நேற்று முன்தினம்) அரசாணை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. இது ஒரு கண் துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ள ஆணை. உண்மையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதென அரசு முடிவு செய்தால், அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டி, கொள்கை முடிவெடுத்து, அதை தீர்மானமாக நிறைவேற்றியிருக்க வேண்டும். அதன்பிறகு அரசாணை வெளியிட்டால், எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும் செல்லுபடியாகாது. அந்தவகையில் அரசாணை வெளியிடாமல், அந்த தனியார் ஆலை நீதிமன்றத்துக்கு சென்று அனுகூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், அந்த ஆலையின் முதலாளியிடம் ஏற்கனவே வாங்கியிருக்கக்கூடிய மாமூலை உயர்த்தி, இன்னும் அதிகமாக வாங்கிக்கொள்வதற்காக, இந்தப் பணியை திட்டமிட்டு ஆளுகின்ற ஆட்சியாளர்களும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செய்திருக்கிறார்கள்.

    நாங்கள் திரும்ப திரும்ப சொல்ல விரும்புவது, துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு, மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., நெல்லை சரக டி.ஐ.ஜி., மதுரை மண்டல ஐ.ஜி., மாநில உளவுத்துறை ஐ.ஜி., தமிழக காவல்துறை சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. ஆகியோர் மீது உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.


    அதுமட்டுமல்ல, அவர்கள் அனைவரையும் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு, அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல்லாம் கடந்து, இவற்றுக்கெல்லாம் தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

    அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தீர்மானம் நிறைவேற்றி, அரசாணை வெளியிடும் வரையில், நாங்கள் இந்த அவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை தி.மு.க. எடுத்திருக்கிறது என்ற எங்களுடைய முடிவையும் அறிவித்துவிட்டு, அவையை புறக்கணித்து வெளியேறினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துப்பாக்கிசூடு என்ற வார்த்தையும், அதில் எத்தனை பேர் இறந்தார்கள், காயமுற்றார்கள் என்ற விவரங்களும் வெளியிடப்படவில்லையே?

    பதில்:- உண்மைகளை எல்லாம் மூடி மறைக்கின்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதையும் நான் அவையில் பதிவு செய்திருக்கிறேன். இறந்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை கூட அரசின் சார்பில் அதிகாரபூர்வமாக வரவில்லை. சட்டசபையில் இன்றைக்கு (நேற்று) விவர அறிக்கையை வைத்திருக்கிறார்களே தவிர, அதுவும் ஊரை ஏமாற்றுகின்ற கபட நாடகம் தான்.

    அதுகுறித்து நாங்கள் பேசினால், ‘ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் குழு கொண்ட நீதி விசாரணை வைக்கப்பட்டு இருக்கிறது, எனவே நீங்கள் பேசக்கூடாது’, என்று சபாநாயகர் அனுமதி வழங்க மறுக்கிறார். ஆனால், முதல்-அமைச்சர் வைத்துள்ள விவர அறிக்கையில் ‘ரவுடியிசம்’, ‘தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர்’, என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். நீதி விசாரணை வைத்திருக்கின்றபோது அவர் மட்டும் எப்படி இந்த வார்த்தைகளை சொல்ல முடியும்? அதுமட்டுமல்ல, முதல்-அமைச்சர் பேட்டி தந்தபோதும் இதே வார்த்தைகளை சொல்லியிருக்கிறார்.

    எனவே, அவரே நீதிபதியாக மாறி ஏற்கனவே தீர்ப்பை சொல்லிவிட்டார். அவர் வைத்திருக்கின்ற ஒரு நபர் குழுவும் கூட வெறும் கண் துடைப்புக்காக மட்டுமே. இதெல்லாம் மக்களுக்கு தெளிவாகவே தெரியும்.

    கேள்வி:- துப்பாக்கிசூட்டுக்கு தாசில்தார்கள் உத்தரவிட்டதாக அறிவித்து விசாரணையை திசை திருப்புகிறார்களே?

    பதில்:- நேற்றே (நேற்று முன்தினம்) நான் கூறியது போல, முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தை நாடி, வழக்கு தொடர்ந்து, யார் யார் குற்றவாளிகள் என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SterliteProtest #TNAssembly #MKStalin
    ×