search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Success Formula"

    • மாதம் 10 லட்சம் வருமானம் விவசாயிக்கு சாத்தியமா? என்ற தலைப்பில் பேச உள்ளார்.
    • ஏராளமான முன்னோடி நெல் விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    நெல் விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை என விவசாயிகள் நினைக்கும் வேளையில், இன்று ஐடி ஊழியர்களுக்கு இணையான வருவாய் விவசாயத்திலும் சாத்தியம் என்பதை பல முன்னோடி விவசாயிகள் நிரூபித்து வருகின்றனர்.

    மேலும் விவசாய பொருட்களை முறையாக மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவதன் மூலம் நெல் விவசாயத்தில் பன் மடங்கு வருவாய் ஈட்ட முடிகிறது. இதை உணர்த்தும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் 'பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழாவை' வேலூரில் வரும் ஜூலை 28 ஆம் தேதி நடத்துகிறது. இதில் ஏராளமான முன்னோடி நெல் விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ஒரு விவசாயியாக தன் வாழ்வை தொடங்கி இன்று விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டியதன் மூலம் தொழிலதிபராக மாறியிருக்கும் "தான்யாஸ்" நிறுவனத்தின் நிறுவனர் திரு. தினேஷ் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    ஒரு விவசாயியாக தொடங்கிய இவரது பயணம் எப்படி வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறியது என்பதை நம்மோடு பகிர்ந்து கொண்டார் "நான் நெல் விவசாயியாக இருந்தால், என்னால் வெறும் நெல்லை மாத்திரமே விற்க முடியும். வெறும் நெல்லாக மாத்திரமே விற்கும் போது ஒரு விலை கிடைத்தது. அந்த நெல்லை மதிப்புக் கூட்டி நான் அரிசியாக விற்ற போது எனக்கு வேறொரு விலை கிடைத்தது. அது நெல்லில் கிடைத்ததை காட்டிலும் அதிகமாக இருந்தது. எனில் இதை மேலும் எப்படி மதிப்பு கூட்டலாம் என்ற தேடல் எனக்கு வந்தது.

    அப்போது தான் நாங்கள் கறுப்பு கவுனி நெல்லை, அரிசியாக விற்றோம். அடுத்து கறுப்பு கவுனி அரிசியிலிருந்து சத்து மாவு செய்து விற்க தொடங்கினோம். அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. வெறும் 10 ஆயிரம் முதலீட்டில் எங்கள் நிறுவனத்தை தொடங்கினோம் இன்று மாதம் 10 லட்சத்திற்கு மொத்த விற்பனை நடக்கிறது. சிறிய அடுப்பு, கேஸ் சிலிண்டர், அரிசியை வறுக்க தேவையான உபகரணம் இவை தான் எங்கள் அடிப்படை மூலதனம். ஒரே ஒரு நபருடன் தொடங்கிய நிறுவனத்தில் இன்று 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இதுவே எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி.

    மேலும் விவசாயம் சார்ந்த பொருட்களை மட்டுமே மூலப்பொருளாக வைத்திருக்கிறோம். இதில் வேறெந்த இரசாயனம் கலப்படமோ அல்லது நிறமூட்டிகளோ சேர்க்கப்படுவதில்லை. இன்று எங்கள் நிறுவனத்தில் புட்டு மாவு, சத்து மாவு, சிறுதானிய மாவு, இயற்கை அழுகு சாதன பொருட்கள் என பாரம்பரிய பொருட்களின் மூலம் 50க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறோம்." என உற்சாகமாக கூறினார்.

    மதிப்பு கூட்டலில் மகத்தான வருமானம் தரும் பாரம்பரிய அரிசி ரகங்கள் மற்றும் இந்த அரிசி ரகங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் இருக்கும் சாத்தியங்கள், நெல் விவசாயத்தில் புதிய ஸ்டார்ட் அப்-களுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகள் என மதிப்புகூட்டல் தொடர்பான விவசாயிகளுக்கு இருக்கும் பல கேள்விகளுக்கு தன்னுடைய அனுபவத்தின் மூலம் இவர் வழிகாட்டி வருகிறார்.

    அந்த வகையில் வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் நடைபெற உள்ள பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இவர் "மாதம் 10 லட்சம் வருமானம் விவசாயிக்கு சாத்தியமா?" என்ற தலைப்பில் பேச உள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 8300093777, 9442590077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ×