search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Succession Law"

    • நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது.
    • சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டத்தின்படி இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது என்று தெளிவுப்படுத்தி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

    நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவரது மகன் மோசஸ். இவருக்கும், அக்னஸ் என்கிற கற்பக தேவிக்கும் கடந்த 2004-ல் திருமணம் நடந்தது. கற்பக தேவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி மோசசை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மோசஸ் இறந்துவிட்டார். அவர், தனது சொத்து குறித்து எந்த உயிலையும் எழுதிவைக்கவில்லை.

    இதையடுத்து, மோசசின் சொத்துகளில் பங்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அக்னஸ் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சி.முனுசாமி, ''இந்திய வாரிசுரிமை சட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கான சட்டம் பிரிவு 33 மற்றும் 33-ஏயில் மகன் தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரது சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும். தாய்க்கு எந்த பங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

    மோசசின் தாய் பவுலின் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த ஐகோர்ட்டு உதவும் விதமாக வக்கீல் பி.எஸ்.மித்ரா நேஷாவை நியமித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அவர், ''கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டம் பிரிவு 42-ன்படி கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி, குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உண்டு. மனைவியோ, குழந்தைகளோ இல்லாதபட்சத்தில் தந்தைதான் மகனின் சொத்துக்கு வாரிசு ஆவார். தந்தையும் இல்லையென்றால் தாய், சகோதர, சகோதரிகள் வாரிசுகளாவார்கள் என்று விளக்கம் அளித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பில், ''இந்த வழக்கில் மகனின் சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டத்தின்படி, இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது என்றும், தாய் பங்கு கேட்க முடியாது என்றும் ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு (ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன்) 2021-ம் ஆண்டே தீர்ப்பு அளித்துள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் நாகை மாவட்ட நீதிபதி, இந்த ஐகோர்ட்டு தீர்ப்பையும், வாரிசுரிமை சட்டத்தையும் கவனிக்காமல் உத்தரவிட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த ஐகோர்ட்டுக்கு உதவிய வக்கீல் மித்ரா நேஷாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

    ×