search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Consumer Goods Trading Corporation"

    • ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
    • இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.

    ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை மிக மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. அதாவது துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது.

    அதுபோல சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்

    15-ந்தேதி முதல் இந்த விலையில் இந்த இரு பொருட்களும் கிடைக்கிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.

    கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. இந்த பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆகஸ்டு மாதத்திற்கான வினியோகத்துக்கும் இதுவரை துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    வெளிச்சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலை மிக மிக கடுமையாக உயர்ந்து விட்டதால் அவற்றுக்கு தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-15-ம் ஆண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய ஆண்டுக்கு ரூ.1,800 கோடி மானியம் கொடுத்தது.

    தற்போது அந்த மானிய தொகை ரூ.3,800 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் ரேசன் கடை களில் தொடர்ந்து துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

    கடந்த 2007-ம் ஆண்டு ஒரு கிலோ துவரம் பருப்பை வெளிச்சந்தையில் 50 ரூபாய்க்கு வாங்கி தமிழக அரசு ஏழை எளியவர்களுக்கு 30 ரூபாய்க்கு கொடுத்தது. அது போல பாமாயிலை வெளிச்சந்தையில் லிட்ட ருக்கு 45 ரூபாய் கொடுத்து வாங்கி நுகர்வோர்களுக்கு 25 ரூபாய்க்கு வழங்கியது.

    தற்போது துவரம் பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ 155 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாமாயில் ஒரு லிட்டர் 95 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது.

    தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும் ரேசன் கடைகளில் 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது போல இன்றும் துவரம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கும், பாமாயிலை 25 ரூபாய்க்கும் வழங்கி வருகிறது.

    துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய 2 பொருட்கள் விலை உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இத னால் இந்த விவகாரத்தில் ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களை பாதிக்காத வகையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    அதன்படி ரேசனில் வழங்கும் துவரம் பருப்பு, பாமாயில் விலையை சற்று அதிகரிக்கலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    என்றாலும் சில மாதங்களில் ரேசனில் துவரம் பருப்பு, பாமாயில் விலை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பொருட்கள் வாங்கும் நுகர்வோர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    ×