search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirukurungudi nambi temple"

    நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை கடந்த 2 நாட்களாக வலுவடைந்தது. இதையொட்டி அருவி மற்றும் நீரோடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    களக்காடு தடுப்பணையே தெரியாதவாறு, தடுப்பணையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. ஆற்றுக்கு இறங்கி செல்லும் முதல்படி வரை வெள்ளம் கரை புரண்டது. இதுபோல திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. சப்பாத்தில் உள்ள பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் கடந்த 9-ந் தேதி திருமலை நம்பி கோயிலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவித்தனர். அவர்களை தீ அணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை, போலீசார் கயிறு கட்டி மீட்டனர்.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி களக்காடு புலிகள் காப்பகத்தை மூட, களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன் ஆலோசனையின் பேரில், களக்காடு துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டார்.

    எனவே 10-ந் தேதி புலிகள் காப்பகம் மூடப்பட்டது. இதையடுத்து தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயில் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, அங்கு வனசரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது. இதனால் நம்பிகோவிலுக்கு பக்தர்கள் செல்லத்தொடங்கினர்.

    இந்நிலையில் களக்காடு தலையணையில் வெள்ளபெருக்கு குறையாததால் அங்கு செல்ல விதிக்கப்பட்ட தடை 5-வது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது.

    ×