search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiger Skin"

    • சிவம் என்ற சொல்லுக்கு மங்களமானது என்று பொருள்.
    • கையினில் உடுக்கை, திரிசூலம் தாங்கியிருத்தல்.

    சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

    சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் திருமேனியுடைய சிவம் `சத்தர்' என்றும், அருவுருவத் திருமேனியுடைய சிவம் `பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் `பிரவிருத்தர்' என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது. சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;

    காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.

    நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.

    மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்

    அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.

    சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.

    நெற்றிக்கண் காணப்படல்.

    கழுத்து நீலநிறமாக காணப்படல்.

    சடைமுடியில் பிறை நிலாவைக் கொண்டிருத்தல்.

    நீண்ட சுருண்ட சடாமுடி

    தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.

    உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.

    புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.

    கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.

    கையினில் உடுக்கை, திரிசூலம் தாங்கியிருத்தல். நந்தியினை (காளை) வாகனமாகக் கொண்டிருத்தல். இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர் சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல் அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள்.

    இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம். மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன.

     சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா, இலங்கை, நேபாளம் உள்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு. சோதி லிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள், பஞ்சபூத சிவத்தலங்கள், ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள், ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள், சத்த விடங்க சிவத்தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், தமிழகத்தின் நவ கைலாயங்கள் (சிவதலங்கள்), தேவாரப்பாடல் பெற்ற சிவதலங்கள், அட்டவீரட்டானக் கோயில் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும். மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள்.

    இந்த ஆண்டு மகா சிவராத்திரி வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பார்வதி தேவி, சிவபெருமானை எண்ணி வழிபட்டதாக சைவர்கள் நம்புகின்றார்கள். அன்று நாமும் சிவனை வணங்கி எல்லா வளமும், நலனும் பெறலாம்.

    ×