என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tiruchendur Temple"
- திருச்செந்தூர் கோவிலில் யானை தெய்வானை மிதித்து யானை பாகன் உள்பட இருவர் உயிரிழப்பு.
- கோவிலில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது.
திருச்செந்தூர் கோவிலில் யானை தெய்வானை மிதித்து யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஆகியோரை மிதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவிலில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது.
பிறகு, கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, கோவில் யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன், காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் மாவட்ட வன அலுவலர் ஆய்வு செய்து வருகின்றனர்.
- யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஒருவரை யானை மிதித்து தாக்கியது.
- இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருச்செந்தூரில் கோவில் யானை தெய்வானை பாகன் மற்றும் அவரது உறவினரை மிதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஒருவரை யானை மிதித்து தாக்கியது.
இதில், படுகாயமடைந்த யானை பாகன் மற்றும் பக்தர் ஆகியோரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை முன்பு உறவினர்கள் கதறி அழுதனர்.
- காமெடியனாகவும், கதாநாயகனாகவும் என்னை மக்கள்தான் கொடுத்தார்கள்.
- விடுதலை-2 படம் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது.
திருச்செந்தூர்:
நடிகர் சூரி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்தடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். விடுதலை-2 படம் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது. உலகின் தலை சிறந்த மேதைகளில் இளையராஜாவும் இருப்பார். 83 வயதிலும் பாடல் எழுதி இசை அமைத்து பாடி உள்ளார்.
தமிழ் சினிமாவில் அவர் இருக்கும் இந்த கால கட்டத்தில் நானும் உள்ளேன் என்பதை பாக்கியமாக நினைக்கிறேன். இறைவன் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இளையராஜாவுக்கு கொடுத்து இன்னும் பல படங்களில் அவர் இசையமைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.
அற்புதமான வாழ்வியலை கொடுக்கக் கூடிய இசையமைப்பாளர் அவர். காலத்திற்கும் நாம் படித்து கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான் இளையராஜா.
கதாநாயகனாக நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிறது. காமெடியனாகவும், கதாநாயகனாகவும் என்னை மக்கள்தான் கொடுத்தார்கள். விடுதலை பாகம்-2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் பங்களிப்பில் ஒரு படத்திற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.
கங்குவா திரைப்படம் நன்றாக உள்ளது. எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு எளிய ரசிகனாக குடும்பத்துடன் சென்று பார்த்தேன். 4 பேர் சொல்லும் எதிர்மறை கருத்துக்களை பார்க்க வேண்டாம். நிறைய பேர் கூறும் நல்ல கருத்துக்களை பார்க்க வேண்டும்.
கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்கள். அந்த எண்ணத்திற்கு நான் தலை வணங்குகிறேன். பல பேருடைய உழைப்பு இந்த படத்தில் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்.
எதிர்மறை விமர்சனம் செய்தால்தான் வரவேற்கப்படுகிறது என நினைத்து சிலர் தன்னை பிரபலப்படுத்தி கொள்ள காமிரா முன்பு எதிர்மறை விமர்சனத்தை செய்து வருகின்றனர்.
தனுஷ், நயன்தாரா விவகாரத்தை நான் பார்க்க வில்லை. அது இரண்டு பேருக்கும் உட்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.
- அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கோவில் வளாகத்தில் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
திருச்செந்தூர்:
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடக்கிறது.
இந்நிலையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் குவிந்தனர். அங்கு அவர்கள் கடலில் புனித நீராடி புத்தாடை அணிந்து கோவில் வளாகம், தூண்டுகை விநாயகர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர்.
திருச்செந்தூர் அகில பாரத ஐயப்ப சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் அஜித் குமார், ஆறுமுகநேரி குருசாமி முத்து கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் சரண கோஷம் முழங்கியது.
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கோவில் வளாகத்தில் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
- பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
- மழையை பொருட்படுத்தாமல் மக்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சமீபகாலமாக மாதந்தோறும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கியிருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இரவில் கடற்கரையில் தங்கி நிலா வெளிச்சத்தில் கடற்கரையில் பூஜை செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.
இன்று பவுர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் தங்க இயலாது.
எனவே இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவில் வளாகம் முழுவதும் நேரில் சுற்றி பார்த்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
- விடுதியில் உள்ள அலுவலரிடம் விடுதியில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி புகழேந்தி நேற்று ஆய்வு செய்தார். அவர் கோவில் வளாகம் முழுவதும் நேரில் சுற்றி பார்த்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளுக்கு நேரில் சென்று அங்கு தங்கியுள்ள பக்தர்களிடம் குடிதண்ணீர், சுகாதார வளாக வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதேபோல் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் கோவில் வளாகத்தில் தற்போது புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு சென்று அதில் தங்கியுள்ள பக்தர்களிடம் வாடகை குறித்தும், வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அந்த விடுதியில் உள்ள அலுவலரிடம் விடுதியில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி செல்வபாண்டி, நீதித்துறை நடுவர் வரதராஜன், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
- பயண கட்டணம் முன்பதிவு உள்பட ரூ.700 ஆகும்.
- திருச்செந்தூரில் இருந்து காரைக்காலுக்கு மறுநாள் 7-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
புதுச்சேரி:
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் இருந்து புதுச்சேரி அரசின் பி.ஆர். டி.சி., சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவையொட்டி புதுச்சேரியில் இருந்து திருச்செந்துாருக்கு 6-ந் தேதி இரவு 7 மணிக்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. பயண கட்டணம் முன்பதிவு உள்பட ரூ.700 ஆகும்.
இதேபோல் மறுநாள் 7-ந் தேதி திருச்செந்தூரில் இருந்து புதுச்சேரிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் இரவு 9:30 மணிக்கு புறப்படுகிறது. பயண கட்டணம், முன்பதிவுடன் ரூ.700 ஆகும். இந்த பஸ் விழுப்புரம், திருச்சி மதுரை, தூத்துக்குடி வழித்தடத்தில் செல்லும். காரைக்காலில் இருந்தும் திருச்செந்தூருக்கு 6-ந் தேதி இரவு 9 மணிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கப்படுகிறது.
பயண கட்டணம், முன்பதிவு ரூ.500 ஆகும். இதே போல் திருச்செந்தூரில் இருந்து காரைக்காலுக்கு மறுநாள் 7-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ் பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக இயக்கப்படும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பஸ் நிலையத்தில் உள்ள பி.ஆர்.டி.சி., பயண சீட்டு முன் பதிவு மையம் மற்றும் பஸ் இந்தியா செயலி வழியாக பக்தர்கள் திருச்செந்தூர் மட்டும் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என பி.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது.
- 2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
- 7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது.
காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனையும் நடைபெற்று பின்னர் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30-க்கு விஸ்வ ரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடை பெறுகிறது.
மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.
பின்னர் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபி சேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும்-தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
பக்தர்கள் விரதம் இருப்பதற்காக கோவில் வெளி கிரி பிரகாரங்களில் 18 இடங்களில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பரப்பளவில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியதையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள்.
நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர்.
தற்காலிக குடில்களிலும், கோவிலுக்கு சொந்தமான விடுதிகள், தனியார் விடுதிகள், திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள மடங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி விரதத்தை தொடங்கி உள்ளனர்.
சஷ்டி திருவிழாவையொட்டி நடைபெறும் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதி, தற்காலிக பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவைகள் சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கடலில் புனித நீராடி வருவதால் கடலோர காவல் படையினரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காவல்துறை சார்பில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இன்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராள மானோர் திரண்டனர். இன்று காலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- இந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது.
- பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் ஸ்தலத்தில் தான், முருகப் பெருமான் சூரனை வதம் செய்து தேவர்களை காத்ததுடன், தன்னை நோக்கி தவம் செய்த குரு பகவானுக்கும் காட்சி அளித்தார் என்பதால் கந்த சஷ்டி விழாவிற்குரிய தலமாக திருச்செந்தூர் கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் நடைபெற்றாலும், திருச்செந்தூர் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காணவே லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவது வழக்கம்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதியும், முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் 8-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்திற்கு வருகை தர உள்ளனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம், சூரசம்ஹாரம் நடைபெற உள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் ஆய்வாளர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, கோவில் தக்கார் அருள்முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சாதாரண நாட்களில் இலவச தரிசனம் உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விசேஷ நாட்களில் விரைவு தரிசன கட்டணம் இரட்டிப்பாக, அதாவது ரூ.200 வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர். இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பக்தர்கள் கைதானார்கள். பின்னர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.
இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா விரைவில் தொடங்க உள்ளது. இதில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல. கந்தசஷ்டி விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள், கடவுளை தரிசனம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். எனவே இங்கு கந்தசஷ்டியின்போது தரிசனத்துக்கு கூடுதல் கட்டணத்துக்கு தடை விதிக்க வேண்டும். தரிசனத்துக்கு ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கவும், இதற்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கோவில்களில் தரிசனம் செய்வதற்கு ரூ.1,000, ரூ.2,000 என வசூலித்தால், ஏழை பக்தர்கள் நிலை என்ன ஆகும்? அவர்களால் இந்த தொகையை செலுத்த இயலுமா? வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கோவில்கள் இருக்கிறதா? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர்.
பின்னர் இந்த மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
- சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
- விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
மேலும் கடற்கரையில் அமைந்துள்ளதால் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதிலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இங்கு வழங்கப்படும் நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும். இலை விபூதி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இங்கு சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது. தற்போது ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா நடைபெற உள்ள நிலையில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விடுமுறையை கொண்டாட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 68.36 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபக்கோவிலான கிருஷ்ணா புரம், வெங்கடாஜலபதி கோவிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி மற்றும் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடை பாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புதுப்பொலிவுடன் புனரமைக்கும் பணி, என மொத்தம் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 29.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமை பெறாத நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின்பு, பக்தர்களின் நலன் கருதி கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 19.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 48.36 கோடி ரூபாய் செல வில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள், ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள், சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்திட்ட வரைவின் கீழ் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம், 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள சுகாதார வளாகங்கள், 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் என மொத்தம் 68.36 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி., தலை மைச்செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், தலைமைப் பொறியாளர் பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூரில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.அருள்முருகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்