search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirumurthy Dam"

    • மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது.
    • நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகிறது. கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு கூட குளங்களில் தண்ணீர் இல்லை. நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையும் தாமதித்து வருவதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க திருமூர்த்தி அணையில் இருந்து கிராமப்புற குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் ஒரு சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. பிரதான கால்வாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பாசன காலம் நீட்டிக்கப்பட்ட போது ஆயக்கட்டு பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பாசன நிலங்களுக்கோ கூடுதல் திறப்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை. குளங்களையும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு வறட்சியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தற்காலிக தீர்வாக குளங்களுக்கு தண்ணீர் வழங்கலாம். குளங்களில் தண்ணீரை தேக்கினால், பல மாதங்களுக்கு, நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். முதலாம் மண்டல பாசனத்துக்கு போதிய இடைவெளி இருப்பதால், ஆயக்கட்டு பகுதி மட்டுமல்லாது, பிற பகுதிகளிலுள்ள குளங்களுக்கும் பாசன நீரை திருப்பி விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதிகளில் எடுக்கப்பட்ட மணலால் ஓரளவிற்கு ஆழம் அதிகரித்து நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.
    • அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    உடுமலை:

    உடுமலை திருமூர்த்தி அணை கட்டப்பட்ட பிறகு முறையாக தூர்வாரப்படாததால் அதன் நீர்ப்பரப்பில் சுமார் 20 சதவீதம் மண் தேங்கி உள்ளது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் படிப்படியாக குறைந்து வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் அணையில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பருவமழை குறுக்கிட்ட காரணத்தினால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும் அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதி ஓரளவிற்கு ஆழமானது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.

    இதையடுத்து கோடை காலத்தில் அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் பெருத்த போராட்டத்துக்குப்பிறகு அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதால் பணி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து அனுமதி அளித்து இருந்தால் அணையும் ஆழமாகி இருக்கும். அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கும்.

    அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர். வண்டல் மண் அள்ளும் பணியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    • அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் வழியாக, நீர்க்கசிவு அதிக அளவு காணப்பட்டதால் தற்போது முழுமையாக பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.
    • 3 ஆண்டுக்கு பின் தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்ட அணைகளில் பிரதானமாக உடுமலை திருமூர்த்தி அணை உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் வழியாக, நீர்க்கசிவு அதிக அளவு காணப்பட்டதால் தற்போது முழுமையாக பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.

    பிரதான கால்வாய்க்கு நீர் திறக்கும் 3 மதகுகள், தளி கால்வாய், 1 மதகு, தற்போது முழுவதுமாக மேலே ஏற்றப்பட்டு ரப்பர் பீடிங், துருப்பிடித்திருந்த இணைப்புகள், போல்ட்கள் என அனைத்தும் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் பழுது காரணமாக நீர்க்கசிவு அதிகளவு காணப்பட்டது. 3 ஆண்டுக்கு பின் தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரும்பு மதகுகளில் உள்ள பழுது நீக்கப்பட்டு நான்கு புறமும் ரப்பர் ஷீட் புதிதாக பொருத்தப்பட்டு பெயிண்ட் அடித்து மீண்டும் கீழே இறக்கப்படும். இதனால் முழுவதுமாக நீர்க்கசிவு தடுக்கப்படும் என்றனர்.

    • 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • 21 நாட்கள் நீர் வழங்கப்பட்டு இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு செய்யப்படுகிறது.

     உடுமலை : 

    உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இதன் வாயிலாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சூலூர் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நான்கு சுற்றுக்கள் உரிய இடைவெளி விட்டு டிசம்பர் 24 வரை 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில், முதல் இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றி வழங்கப்பட்டு, மூன்றாம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் நீர் திறக்கப்பட்டது.பாசனத்தின் கீழுள்ள அனைத்து கால்வாய்களுக்கும் படிப்படியாக நீர் வழங்கப்பட்டு கடந்த 13-ந் தேதி, பிரதான கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    பி.ஏ.பி., பாசனத்தில் திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்பட்டு காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பிரதான கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது.

    வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து திட்ட தொகுப்பு அணைகள் மட்டுமின்றி பாசன பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் இறுதிச்சுற்றுக்கு நீர் திறப்பு தள்ளிப்போனது.திருமூர்த்தி அணையிலும், மொத்தமுள்ள 60 அடியில் 52 அடி வரை நீர்மட்டம் உயர்ந்த நிலையில் திருமூர்த்தி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து பாலாறு, தோணியாறு உள்ளிட்ட ஆறுகள் வழியாக நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் திருமூர்த்தி அணை நிரம்பி வீணாக உபரி நீர் திறப்பதை தவிர்க்க திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து கடந்த 16ந்தேதி, காண்டூர் கால்வாயில் நீர் பெறுவது நிறுத்தப்பட்டது. பாலாறு வழியாக மட்டும் நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை.

    திருமூர்த்தி அணையில் தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில், 52.83 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவான 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,627.75 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு பாலாறு வழியாக வினாடிக்கு, 51 கனஅடி நீர்வரத்தும் 21 கனஅடி நீர் குடிநீருக்கு வெளியேற்றப்பட்டு வந்தது.

    இறுதிச்சுற்று திறப்புக்கான இடைவெளி அதிகரித்த நிலையில், பருவமழையும் குறைந்துள்ளதால் வருகிற 25-ந் தேதி முதல் இரண்டாம் மண்டலம் இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    இரண்டாம் மண்டல பாசனத்தில் 3 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்ட நிலையில், மழை பொழிவு அதிகரித்ததால் நீர் திறப்பு தாமதமானது. மேலும், மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கதிர் பிடிக்கும் பருவத்திற்கு நீர் தேவை என்றதால் இடைவெளி அதிகரிக்கப்பட்டு வருகிற 25-ந் தேதி முதல் இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்கப்படுகிறது.

    தொடர்ந்து 21 நாட்கள் நீர் வழங்கப்பட்டு இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு செய்யப்படுகிறது. காண்டூர் கால்வாய் விடுபட்ட பகுதிகளில் பராமரிப்பு மற்றும் பிரதான கால்வாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அதனால் குறைந்த நாட்கள் மட்டும் இடைவெளி விட்டு பிரதான கால்வாய் பராமரிப்பு மடை மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளது. நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கி 120 நாட்களுக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது. மூன்றாம் மண்டல பாசனம் நிறைவடைந்ததும் கால்வாய் பணிகள் துவங்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பரம்பிக்குளம்-ஆழியாறு(பி.ஏ.பி.,) பாசன திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் எடுத்து செல்ல 930 கோடி ரூபாயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பி.ஏ.பி., விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் டெண்டர் அறிவிக்கப்பட்டதும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    தி.மு.க., தவிர மற்ற அனைத்து கட்சியினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒட்டன்சத்திரத்துக்கு ஏற்கனவே காவிரியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழக-கேரளா ஒப்பந்தத்தில் செயல்படும் பி.ஏ.பி., திட்டமான ஆழியாறில் இருந்து தண்ணீர் எடுத்தால், இரு மாநில ஒப்பந்தத்தையும் பாதிக்கும் என அதிகாரிகள் மட்டத்திலும் தெரிவிக்கப்பட்டது.

    ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் அரசு மட்டத்தில் மறுபரிசீலனையில் இருப்பதால் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மதுரை தலைமை பொறியாளர் முருகேசன் அறிவித்துள்ளார். இதையடுத்து ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

    இது குறித்து பி.ஏ.பி., திட்ட பாலாறு படுகை திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறுகையில், ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ள செய்தியை அனைத்து பாசன சங்க தலைவர்களுக்கும், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி என்றார்.

    • அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு சர்க்கார் பதியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக 43 கிலோமீட்டர் பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. இதன் மூலம் அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணைக்கு மேல் பகுதியில் திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும் .பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை யின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றிலும் ஓடும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். தற்போது திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    • மே மாதம் 5-ந் தேதி, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர் நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்த மே மாதம் 5-ந் தேதி, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    குளம், குட்டைகள் மற்றும் அணையில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.நஞ்சை நிலமாக இருந்தால், இரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு வழங்கப்படும்.புஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு வழங்கப்படும். வி திமுறை அடிப்படையில், வருவாய்த்துறை, வேளாண் துறை, கனிம வளத்துறை வாயிலாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது.

    உடுமலை தாலுகாவில் விருகல்பட்டி, பழையூர், வாகத்தொழுவு, ஜக்கமநாயக்கன்பாளையம், பொன்னேரி, இலுப்பநகரம், ஆலாமரத்தூர், வடுகபாளையம், சுங்காரமுடக்கு, அந்தியூர், கணபதிபாளையம், கரையான் குட்டை, கருப்பராயன் கோவில் குளம், சின்ன வாளவாடி, பெரிய குளம் என 9 குளம், குட்டைகளில் 30 ஆயிரத்து 742 கன மீட்டர் மண் விவசாயிகள் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் அடிப்படையில் விவசாயிகள் மண் எடுத்து வருகின்றனர்.

    பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் ஒன்றான, திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவு மண் மேடாக உள்ளது. இந்த மண் அகற்றி ஆழப்படுத்த வேண்டும்.இதனால் கூடுதலாக ஒன்றரை டி.எம்.சி., நீர் தேக்க முடிவதோடு, பி.ஏ.பி., திட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.கடந்த 2017ம் ஆண்டு, சர்வே எண் 252, 253ல், 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது.

    அப்போது 36 ஆயிரம் கன அடி மண் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் மழை துவங்கியது பாசனம் ஆகிய காரணங்களினால் நிறுத்தப்பட்டது.அந்த ஆண்டே, சர்வே எண் 254ல் 34 ஆயிரம் கன மீட்டர் எடுக்க அனுமதியளித்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.ஆனால் நடப்பாண்டு குளம், குட்டைகளில் மண் எடுக்க அனுமதி அளிக்கும் அரசு ஆணையில் திருமூர்த்தி அணை விடுபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள்திருமூர்த்தி அணையிலும் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன் அடிப்படையில் நடப்பாண்டு திருமூர்த்தி அணையில் 34 ஆயிரத்து 100 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.இதனையடுத்து திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரிய விவசாயிகள் விண்ணப்பத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. முதல் கட்டமாக 10 விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கன மீட்டர் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டு, மண் எடுக்கும் பணி துவங்கியுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    திருமூர்த்தி அணையிலுள்ள வண்டல் மண், விவசாய நிலங்களுக்கு அதிக பயன் அளிக்கும் என்பதால், விவசாயிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். ஏறத்தாழ, 40 விவசாயிகள் வரை விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதிக கன மீட்டருக்கு அனுமதி உள்ளதால் விருப்பம் உள்ள விவசாயிகள், வி.ஏ.ஓ.,சான்று வேளாண்துறை பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம்.இதன் வாயிலாக அணை நீர் தேக்கும் பரப்பளவு ஆழம் அதிகரித்து கூடுதல் நீர் சேமிக்கப்படுவதோடு விவசாய நிலங்களும் வளமாகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
    • வண்டல் மண்ணை கொட்டி விவசாயிகளின் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு சேமிக்கப்படுகிறது. 60 அடி உயரம் உடைய திருமூர்த்தி அணையின் மூலம் திருப்பூர் , கோவை மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுகின்றன. மேலும் உடுமலை நகராட்சி பூலாங்கிணறு ,கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் அணையை தூர்வாரி கூடுதல் நீரை சேமிக்கும் வகையிலும் விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும் விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் உள்ள ஜல்லிப்பட்டி ,பெருமாள் கரடு, கோனக்கரடு பகுதியில் இருந்து விவசாயிகளிடம் இருந்து அணை கட்ட கையகப்படுத்தப்பட்ட சுமார் 300 ஏக்கர் பரப்பளவு நிலம் வீணாக உள்ளது. எனவே விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிப்பதோடு அணையை தூர்வார நிதியை ஒதுக்கி கிழக்குப் பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள 300 ஏக்கர் நிலத்தையும் ஆழப்படுத்த வேண்டும் .மேலும் நீர் தேங்கும் பரப்பில் உள்ள மண்மேடான பகுதிகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை ஏற்று அணையில் தூர்வாரி வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தது. இதற்கு அனுமதி பெற பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட கலெக்டர் விதித்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர் . விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கான உத்தரவு தபாலில் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார் . இதையடுத்து அணையில் தூர்வாரும் பணி தொடங்கியது .பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு டிப்பர் லாரியில் வண்டல் மண்ணை கொட்டி விவசாயிகளின் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×