என் மலர்
நீங்கள் தேடியது "Titli Cyclone"
ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களை சமீபத்தில் டிட்லி என்ற புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பல நூறு மக்கள் பாதிக்கப்பட்டனர். புயல் பாதிப்புகளில் இருந்து மக்கள் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.
புயல் பாதிப்புகளுக்கான மத்திய அரசின் நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை என ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், மாநில அரசு முழுமையான முயற்சிகள் அனைத்தையும் எடுத்துள்ளதாகவும், ஆனால் டிட்லியால் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஹுதுட் புயல் தாக்கியபோது ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால், 650 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்ததாகவும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்ய கடுமையாக முயற்சித்து வருவதாகவும், ஆனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை காண வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். #Titli #AndhraCM #ChandrababuNaidu #PMModi

ஒடிசாவில் கடந்த 11-ந்தேதி டிட்லி புயல் கடுமையாக தாக்கியது. கஜபதி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. லட்சுமிபூர் பஞ்சாயத்தில் உள்ள கதாங்பூர் கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அதாங்பூர் கிராமத்தை சேர்ந்த முகுந்த் டோரா என்பவரது 7 வயது மகள் பபிதாவை காணவில்லை. எனவே அவளை அவர் தேடி வந்தார். இந்த நிலையில் நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த அவளது உடல் சமீபத்தில் மீட்கப்பட்டது.
அவளது உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆம்புலன்சை போலீசார் ஏற்பாடு செய்யவில்லை. புயல் மற்றும் நிலச்சரிவினால் சாலை சேதமடைந்துள்ளது. அதை காரணம் காட்டி பிரேத பரிசோதனைக்காக இறந்த பபிதாவின் உடலை கானிபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரும்படி தெரிவித்தனர்.
ஏழையான முகுந்த் டோராவினால் ஆம்புலன்சோ, வேறு வாகனமோ ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே மகளின் பிணத்தை ஒரு சாக்குப் பையில் போட்டு கட்டி தோளில் சுமந்தபடி 8 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றார்.

மத்திய மந்திரி தர்மேந்திரா பிரதான் ஒடிசாவில் புயல் பாதித்த கஜபதி மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது, அவரிடம் தனது மகள் உடலை 8 கி.மீ. தூரம் சுமந்து சென்ற தந்தை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இச்சம்பவம் வேனை அளிக்கிறது என்றார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஒடிசா அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் தரவில்லை. எனவே ஏழை மலைவாழ் மனிதர் தனமாஜி தனது மனைவியின் உடலை 10 கி.மீ. தூரம் சுமந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். #TitliCyclone

வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர். ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டம், பராஹரா கிராமத்தில், கனமழையை தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, குகை ஒன்றில் தங்கியிருந்த 12 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை. அவர்கள், மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதிள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது :-
டிட்லி புயலால் ஆந்திராவில் 3 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மாநில அரசு நிவாரணப்பணிகள் மேற்கொண்டு வருகின்றது. சுமார் 2800 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 1200 கோடி வழங்க வேண்டும்
என சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சம், கஜாபதி, ராயகாடா உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சம் பகுதிகளில் உள்ள 4-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு நிவாரண உதவியாக தலா ரூ. 3000 அரசு சார்பில் வழங்கப்படும்.

நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணி துரிதமாக நடைப்பெற்று வருகிறது’ என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். #TitliCyclone #ChandrababuNaidu #NaveenPatnaik
வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை காலையில் கரை கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசாவில் பலத்த மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி டிட்லி புயல் கடற்கரையை நெருங்கிய சமயத்திலும், புயல் கரைகடந்த பிறகும் பிறந்த பல குழந்தைகளுக்கு டிட்லி என பெயர் வைத்துள்ளனர். குறிப்பாக கஞ்சம், ஜகத்சிங்பூர், நயாகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டியுள்ளனர்.
வியாழக்கிழமை காலையில் ஒடிசா கடற்கரையை புயல் கடந்து சென்றபோது சத்தர்பூர் அரசு மருத்துவமனையில் அலெமா என்ற பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த இரண்டு குழந்தைகளுக்கும் டிட்லி என பெயர் வைக்க உள்ளதாக தாய் கூறினார். அதே மருத்துவமனையில் பிம்லா தாஸ் என்ற பெண்ணுக்கு காலை 7 மணியளவில் பிறந்த பெண் குழந்தைக்கும் டிட்லி என பெயரிட உள்ளார்.
அஸ்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை 11 மணி வரையில் பிறந்த 9 குழந்தைகளும் பெண் குழந்தைகள் தான். இந்த குழந்தைகள் அனைவருக்கும் டிட்லி என பெயரிட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதனை பெற்றோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஹிஞ்சிலி, போல்சரா மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும் டிட்லி பெயர் சூட்ட உள்ளனர்.
கஞ்சம் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி வியாழன் காலை வரை சுமார் 64 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், ஜகத்சிங்பூர் மருத்துவமனைகளில் 6 குழந்தைகள் பிறந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு புயலின் பெயரை வைப்பது ஒடிசாவில் இது முதல் முறையல்ல. இதற்குமுன் 1999ல் பேரழிவை ஏற்படுத்தி 10000 உயிர்களை காவு வாங்கிய சூப்பர் புயலின் பெயரையும் ஏராளமான குழந்தைகளுக்கு சூட்டியது குறிப்பிடத்தக்கது. #TitliCyclone #OdishaNewbornBabies
வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவு நடந்த பகுதியில் மேலும் 4 பேரைக் காணவில்லை. அவர்களும் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கஞ்சம், கஜபதி, ராயகடா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் முதல்வர் நவீன் பட்நாயக் ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட உள்ளார். #TitliCyclone #OdishaRain #Landslide
நகரி:
சென்னைக்கு அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த டிட்லி புயல், தீவிர புயலாக மாறி வடஆந்திரா, தென் ஒடிசாவை தாக்கியது. ஆந்திரா மாநிலம் விஜய நகரம் மலைட் பகுதியில் நேற்று மதியம் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்த போது மணிக்கு 130 முதல் 150 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவில் இருந்தே பலத்த மழை பெய்தது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஆகிய 2 மாவட்டங்களையும் புயல் புரட்டி போட்டது.
புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வயல்வெளிகளில் இருந்த தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன. 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாயின.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். 9 லட்சம் பேர் புயலால் பாதிக்கப்பட்டனர்.
பலத்த புயல் மழைக்கு 3 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 2 மாவட்டங்களிலும் 4919 கிராமங்கள் இருளில் மூழ்கின.
சீரமைப்பு பணிகளுக்காக வெளி மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களுக்கும் மின் சப்ளை வழங்க சில நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
புயல் தாக்கிய போது பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த புயல் மழைக்கு ஆந்திராவில் 8 பேர் பலியாகி விட்டனர்.
மரங்கள் சாய்ந்ததால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
ஸ்ரீகாகுளம் பலாசா ரெயில் நிலையம் உருக்குலைந்தது. புயல் மழையால் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி மதிப்பளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
புயல் காற்று வீசியபோது கடலில் படகு மூழ்கியதால் 3 மீனவர்கள் மாயமானார்கள். 6 படகுகள் கடலில் மூழ்கி விட்டன. மீனவர்களுக்கு மட்டும் ரூ.2 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே போல் ஒடிசாவிலும் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. #TitliCyclone #rain
வங்க கடலில் அந்தமான் அருகே உருவான டிட்லி புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது.
நேற்று அதிகாலை வடக்கு ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களையும் தெற்கு ஒடிசாவின் கஜபதி மற்றும் கஞ்சம் மாவட்டங்களையும் பலமாக தாக்கியது. அப்போது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. காற்றும் மழையும் 4 மாவட்டங்களையும் துவம்சம் செய்தது.
அதன்பிறகு அதி தீவிர புயலாக இருந்த டிட்லி புயல், தீவிர புயலாக மாறி தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி சுழன்று நகர்கிறது.

இதற்கிடையே அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள லூபன் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசைநோக்கி மெதுவாக நகர்வதால் இன்னும் 4 நாட்களில் ஏமன்-ஓமன் கடற்கரை பகுதியை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #TitliCyclone

வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது.
நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். பெயர்தான் வண்ணத்துப் பூச்சியே தவிர இந்த புயலின் சீற்றம் தொடக்கத்தில் இருந்தே அதிக ஆற்றலுடன் இருந்தது. இதனால் வங்கக் கடலில் இந்த ஆண்டு உருவான புயல்களில் டிட்லி புயல்தான் அதிக வலுவான புயல் என்று வானிலை இலாகா அறிவித்தது.
சென்னைக்கு அருகே வங்கக் கடலில் உருவான இந்த புயல் முதலில் தமிழகத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்ககைள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.
டிட்லி புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி மேலும் நகர்ந்தது. இதனால் தமிழகம் மிகப்பெரிய புயல் ஆபத்தில் இருந்து தப்பியது. நேற்று மாலை டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் வகையில் வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
மணிக்கு சுமார் 19 கி.மீ. வேகத்தில் நகர்ந்த டிட்லி புயல் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த புயல் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதையடுத்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம், ஒடிசா வின் கஞ்சம், கஜபதி, பூரி, கேந்திரபதா, நயகர், பத்ரக், ஜெகத்சிங்பூர், ஜஜ்பூர், கோர்தா, கட்டாக், பலா சோர், மயூர்பஞ்ச், கலஹந்தி, பவுத் மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடப்பட்டது. இந்த நிலையில் இன்று (வியாழக் கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலசா எனும் இடம் அருகே டிட்லி புயல் கரையை கடந்ததாக வானிலை இலாகா கூறியது.
டிட்லி புயல் கரையை கடந்தபோது மணிக்கு 140 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருந்தபோது அது மேலும் வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.

டிட்லி புயல் சுமார் 15 மாவட்டங்களை பாதிக்கும் என்றும் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்த நிலையில் 6 மாவட்டங்களை துவம்சம் செய்து விட்டது.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் டிட்லி புயல் துவம்சம் செய்து விட்டது. இந்த 6 மாவட்டங்களிலும் மழை பெய்தபடி உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டிட்லி புயல் தாக்கத்துக்குப் பிறகு மேலும் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்குவதற்கு 836 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஒடிசாவை உலுக்கியுள்ள டிட்லி புயலின் தாக்கம் இன்று மாலை வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிட்லி புயல் கோரத்தாண்டவத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக ஒடிசா மாநிலம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஒடிசா கடலோர பகுதி ரெயில் போக்குவரத்தை கிழக்கு கடலோர ரெயில்வே முழுமையாக ரத்து செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இண்டிகோ விமானம் தனது விமான சேவையில் 5 விமான சேவையை ரத்து செய்துள்ளது.
மிக பலத்த மழை பெய்து மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்க நேரிட்டால் மக்களை உடனுக்குடன் மீட்க வேண்டும் என்பதற்காக 300 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 120 படகுகள் டிட்லி புயல் தாக்கியதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
ஒடிசாவுக்கு உதவ விமான படையும், கடற்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் டிட்லி புயலின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
சென்னை - அவுரா வழித்தடத்தில் ரெயில்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணிகளை விரைந்து செய்ய ஒடிசா முதல்- மந்திரி நவீன்பட்நாயக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆய்வு செய்தபடி உள்ளார். #TitliCyclone
#WATCH: Early morning visuals of #TitliCyclone making landfall in Srikakulam's Vajrapu Kotturu. #AndhraPradeshpic.twitter.com/x7H4yoF7ez
— ANI (@ANI) October 11, 2018






