என் மலர்
நீங்கள் தேடியது "TNassembly"
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மத்திய இணைய தள நூலகம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தொடங்கியுள்ள இணைய தள நூலகத்தில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல தென்னக மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் நூல்களும் இடம் பெறவில்லை.
தெற்கு, வடக்கு என்று மாநிலங்களை பிளவு படுத்தும் வகையில் மத்திய அரசு நடந்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 3 லட்சம் எழுத்தாளர்கள் எழுதிய 1 கோடி நூல்கள் உள்ளன. தமிழக வரலாறு உள்ளது.
இவையெல்லாம் இணைய தள நூலகத்தில் இடம் பெறவில்லை. ஆனால் வேறு நூல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிகளை புறக்கணித்து மத்திய அரசு சமஸ்கிருத துதி பாடுகிறது.
தமிழக மக்களை இவ்வாறு புறக்கணித்த மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் பேசி இணைய தள நூலகத்தில் தமிழ்மொழி நூல்கள் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
இதே கருத்தை வலியுறுத்தி சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேசினார். இதற்கு தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் அளித்த பதில் வருமாறு:-
மத்திய அரசு இந்திய தேசிய இணைய தளத்தை தொடங்கி 5 நாட்கள் ஆகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் இடம் பெற வேண்டும். இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் அறிய வேண்டும் என்பதற்காகவே இதை தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழ், குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 8 மாநில மொழி புத்தகங்கள் இதில் விரைவில் இடம் பெற உள்ளன. இந்த இணைய தளம் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் சவடேகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நாட்டில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் இந்த இணைய தள நூலகத்தில் இடம் பெறும் என்று கூறினார்.
முதல் கட்டமாக இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருத நூல்கள் பரீட்சார்த்த முறையில் இடம் பெற்றுள்ளன. அனைத்து மொழிகளும் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் 149 தமிழ் அறிஞர்களின் 2 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் தமிழக அரசு உரிமம் பெற்றுள்ள 10 ஆயிரம் புத்தகங்கள்இந்த கணினி நூலகத்தில் இடம் பெறுகின்றன. இன்னும் 2 வாரத்துக்குள் இதற்கான வடிவமைப்புகள் நிறைவு செய்யப்பட்டு அனைவரும் படிக்கும் நிலை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “கன்னி மாரா நூலகத்தில் உள்ள 10 ஆயிரம் புத்தகங்கள் இந்த இணைய தள நூலகத்தில் இடம் பெற செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது” என்றார். #MKStalin #TNassembly
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கவுண்டபாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தனது கோரிக்கை குறித்து பேசினார்.
அப்போது தமிழ் மாதங்களை வரிசைப்படுத்தி அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளை கிராமிய பாடல்களாக பாடினார். நீண்ட நேரம் அவர் பாடிக்கொண்டே இருந்ததால், கடுப்பான தி.மு.க. உறுப்பினர்கள் நீண்ட நேரம் அவர் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கோரிக்கைகளை மட்டும் தெரிவிக்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனால் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. பாடுவதை நிறுத்தி விட்டு தனது கோரிக்கைகளை தெரிவித்து விட்டு அமர்ந்தார். #TNAssembly
சென்னை:
பல்லாவரம் இ.கருணாநிதி சட்டசபையில் இன்று மீனம்பாக்கம், பொழிச்சலூர், திரிசூலம் பகுதிகள் பல்லாவரம் தாசில்தார் அலுவலக கட்டுப்பாடடின் கீழ் கொண்டு வரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “ஏற்கனவே பொழிச்சலூர், பல்லாவரம் தொகுதியில் உள்ளது. மீனம்பாக்கம் கிராமம் சென்னை மாவட்டத்துடன் இணைகிறது, திரிசூலம் பல்லாவரம் வட்டத்துடன் இணையும். சென்னை மாவட்ட விரிவாக்கப்பணி தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. வருகிற ஜூலை மாத இறுதியில் விரிவாக்கப் பணி முடிவடைந்து செயல்படும்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “சென்னை மாநகராட்சிக்கு இணையாக வருவாய் மாவட்டத்திலும் ஒரே மாதிரியான ஆட்சி எல்லைகள் வரும் வகையில் மாவட்ட எல்லைகள் விரிவுபடுத்தப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து இ.கருணாநிதி:- 3 நகர நிர்வாகத்துக்கு ஒரு வி.ஏ.ஓ.தான் உள்ளார். பல்லாவரம் நகர வி.ஏ.ஓ. அனகாபுத்தூர் சென்று பணியாற்றுகிறார். எனவே ஒரு கிராமத்துக்கு ஒரு வி.ஏ.ஓ. பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 10,000 பட்டாக்களை பம்மல், அனகாபுத்தூருக்கு வழங்க வேண்டும்” என்றார்.
இதற்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளிக்கையில், “அரசு இதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார். #TNAssembly #MinisterUdayakumar
சென்னை:
தமிழக சட்டசபையில் நகராட்சி சட்ட திருத்த முன்வடிவு தாக்கல் விவாதத்தில் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்று நாங்கள் கோர்ட்டுக்கு போனது உண்மைதான். 33 சதவிகிதம் மகளிருக்கான இட ஒதுக்கீடு, 50 சதவிகிதமாக ஆனதற்கு பின்னால், யார்-யாருக்கு அந்த 50 சதவிகிதம் என்பது தெரிவிக்காமலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டது அதை அறிவியுங்கள் என கோர்ட்டுக்கு போனது உண்மைதான்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருக்கிறதே, அதனை சரி செய்துவிட்டு தேர்தலை நடத்துங்கள் என கோர்ட்டுக்கு போனது உண்மைத்தான். அதனை சரி செய்து, தேர்தலை நீங்கள் நடத்தியிருக்கலாம். ஐகோர்ட்டு இரண்டு, மூன்று தடவை தேர்தலை நடத்தலாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அமைச்சர் இதையே சொல்லி, எங்கள் காதுகளில் தயவு செய்து ரத்தம் வர வைத்து விடாதீர்கள்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் போனதால் பாதிப்புகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது என்று சொல்வதை நிறுத்தி விட்டு, நீங்கள் தேர்தலை உடனடியாக நடத்துவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் என்று ஒன்று இருக்கிறது. அந்த வாரியத்திற்கு ஏற்கெனவே இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தனர். மேலாண்மை இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் என்று இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தனர். இப்போது இரண்டு பேர்களுமே இல்லை. இது ஒரு மிகப்பெரிய கோளாறு. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகின்றன என்று சென்னையைச் சுற்றிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்த இடத்தில் இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே இல்லை. தமிழ்நாடு தேர்தல் ஆணையர்தான் பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் என்பது ஒரு மிகப்பெரிய அமைப்பு.
தனி அலுவலரால் நிச்சயமாக செயல்படவே முடியாது. ஒரு தனி அலுவலர் எப்படி எல்லா இடங்களுக்கும் செல்ல முடியம்? உள்ளாட்சிகளில் எந்த வேலைகளும் நடக்கவில்லை. இன்றைக்கு உள்ளாட்சி ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து போன ஒரு நிர்வாகமாக இருக்கின்றன. இப்போது இரண்டு வருடங்களாக நாம் காரணங்களைத் தேடி தேடிக் கொண்டிருக்கிறோம்.
வார்டு எல்லை வரையறை செய்ய வேண்டுமென்ற புதிதாக ஒரு காரணத்தை கண்டுபிடித்து-இட ஒதுக்கீடு சரி செய்யப்பட்டுவிட்டது. வாக்காளர் பட்டியல் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு விட்டன. வார்டு எல்லை வரையறை என்று புதிதாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து, அதில் பொது மக்களிடமிருந்து 10,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்களை சீராய்வு செய்து வேண்டியுள்ளது என்ற காரணமும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த காரணங்கெல்லாம் ஒரு சாக்கு போக்குகள் தான் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைப்பதை நிறுத்திவிட்டு தேர்தலை நடத்துவற்குண்டான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #TNassembly #Localbodyelections
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்துவது பற்றிய கேள்விக்கு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பதில் சொல்லிக் கொண் டிருந்தார்.
அப்போது 1 லட்சம் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன் நாடகக் கலையை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகள், ‘‘அருணாச்சல கவிராயர் ஆகியோர் எழுதிய வரிகளிலேயே அந்த நாடகங்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.
துரைமுருகன்:- நான் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். இப்போது இந்த சபையில் இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு வகையில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோருமே நடிகர்கள் தான்.
(அப்போது சபையில் சிரிப்பலை எழுந்தது).
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- 2001- 2006-ம் ஆண்டு ஆட்சியின் போது துரைமுருகனை பார்த்து அன்றைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ‘நீங்கள் சிறப்பாக நடிக்கிறீர்கள். நவரச நடிப்பும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் நடிகராகி இருந்தால் உலக நடிகர் ஆகி இருக்கலாம்’ என்று சொன்னார். அந்த வார்த்தைதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly #Duraimurugan
சென்னை:
சட்டசபையில் இன்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சி சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்டமுன் வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுவதற்கு இதுவரை வழிவகை இல்லை. மேலும் உரிய காலத்திற்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு வட்டி விதிப்பதற்கும் தற்போது வழிவகை இல்லை.
4-வது மாநில நிதி ஆணையமானது சொத்து வரியை காலம் தாழ்த்தாமல் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கும், காலம் தாழ்த்தி வரி செலுத்துபவர்களுக்கு வட்டி விதிப்பதற்கான அவசியத்தை ஆய்வு செய்வதற்கு அரசுக்கு பரிந்துரைகள் செய்துள்ளது.
இதன்படி சொத்துவரியை உரிய தேதிக்கு பிறகும் செலுத்தாமல் இருந்தால் அந்த தொகையுடன் கூடுதலாக 2 சதவீதத்திற்கு மிகையல்லாத விதத்தில் வகுத்துரைத்து தனி வட்டி செலுத்த வேண்டும்.
சொத்துவரி செலுத்துபவர்கள் அரையாண்டு தொடக்க தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தினால் அவருக்கு சொத்துவரி செலுத்தும் தொகைக்கு 5 சதவீதம் அல்லது 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை சொத்துவரியை எப்போது வேண்டுமானாலும், எத்தனை ஆண்டுகள் கழித்தும் செலுத்தும் நிலை இருக்கிறது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு சொத்துவரியை சரியான காலத்தில் செலுத்தும் நிலை ஏற்படும். #ChennaiPropertyTax #TNAssembly
சென்னை:
சட்டசபையில் இன்று போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உதயசூரியன் (தி.மு.க.) பேசியதாவது:-
தமிழகத்தில் பொதுவாக போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள் என்று சொன்னால் சிலரை கைது செய்யாமல் விடுவது உண்டு. சிலரை கைது செய்வது உண்டு. இன்னும் சிலரை இரவில் கைது செய்வதும் உண்டு.
எங்கள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தவர் 4 முறை போலீஸ் துறைக்கு மந்திரியாக இருந்தவர். நள்ளிரவில் வீடு புகுந்து கதவை உடைத்து அவரை கைது செய்த படலம் உண்டு.
அது என்ன இரவு நேரத்தில் கைது செய்வது? வீடு இருக்கிறது, நிலம் இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறார்கள். யாரும் எங்கும் ஓடிவிட மாட்டார்கள். ஏன் இரவு நேரத்தில் புகுந்து கைது செய்ய வேண்டும்.
பெரிய நிகழ்வுகளாக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம். கிராமத்தில் வாய்க்கால் வரப்பு தகாராறு, அண்ணன்- தம்பி தகராறு, ஒரு பெண்ணை அடுத்தவர் வீட்டு பையன் இழுத்துச் சென்ற தகராறு இதுபோல் பல்வேறு விஷயங்களில் இரவு நேரத்தில் தாய்- தந்தையரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கைது செய்கிறார்கள். இந்த நிலைமை தவிர்க்கப்பட வேண்டும். காவல்துறைக்கு தகுந்த வழிமுறையை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-
காவல்துறையினர் இரவு நேரத்தில் சென்று கைது செய்வதாக சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்கள். உங்களுடைய ஆட்சி காலத்தில் நாங்கள் எல்லாம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பொழுது எங்களையும் கைது செய்திருக்கிறீர்கள்.
நானே 6 முறை கைது செய்யப்பட்டு இருக்கிறேன். பல்வேறு போராட்டங்களின் வாயிலாக கைது செய்யப்பட்டிருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உங்கள் ஆட்சியிலும் கைது செய்திருக்கிறீர்கள். ஆகவே அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு காவல் துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறுனார்.
தொடர்ந்து உதய சூரியன் பேசும்போது, தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை இன்னும் நடைபெறுவதாக கூறினார். அதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-
உங்கள் ஆட்சியிலும் போதைப் பொருள்கள் விற்கப்பட்டிருக்கின்றது. அந்த தகவலை நாளைக்கு சொல்கிறேன். ஆகவே, ஆட்சி யார் செய்தாலும், போதைப் பொருள் விற்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும். இன்றைக்கு அம்மாவினுடைய அரசைப் பொருத்தவரைக்கும், யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆகவே, போதைப் பொருள்கள் வெளியிலே விற்கப்படுகின்றது என்று தகவல் கிடைத்தவுடன் காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். என்னவோ அம்மாவினுடைய அரசில் தான் போதைப்பொருள்கள் விற்பதைப்போலவும், இவர்கள் ஆட்சியில் போதைப்பொருள் விற்காதது மாதிரியும் ஒரு கற்பனையான தோற்றத்தை இங்கே உருவாக்கக்கூடாது.
உங்களுடைய ஆட்சியிலும் சரி, எந்த ஆட்சியாக இருந்தாலும், போதைப் பொருள்கள் விற்பது தவறு, அது காவல் துறையின் கவனத்திற்கு வந்தபொழுது, அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNassembly #EdappadiPalaniswami
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் 5 ஆயிரத்து 68 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டம் ஆரல்வாய் மொழி பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளி கொணர்வதற்காக, சமூக ரெங்கபுரத்தில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி, சிவகங்கை மாவட்டம், கோந்தகை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், பரலி ஆகிய இடங்களில் மொத்தம் மூன்று புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 1,669 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
உடன்குடி அலகு 1, 2x660 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், 2x150 மெகாவாட் இந்த் (ஐ.என்.டி.) பாரத் அனல் மின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும் மற்றும் புதிய காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1,039 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
சென்னை மாநகரத்தின் மின் கட்டமைப்பை மேம்படுத்த, சென்னை மாவட்டத்தில் கணேஷ் நகர் மற்றும் கே.கே.நகர், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மற்றும் எண்ணூர்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறைமலை நகர் மற்றும் பல்லாவரம்; ஆகிய ஆறு இடங்களில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 932 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் கே.புதூர், திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜகோபாலபுரம், திருப்பூர் மாவட்டத்தில் கலிவேலம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி என மொத்தம் நான்கு இடத்தில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 716 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காரப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தளுர்; நாகை மாவட்டத்தில் ஆச்சாள்புரம், வேலூர் மாவட்டத்தில் மேல்பாடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி, திருப்பூர் மாவட்டத்தில் பணப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சின்னதடாகம், மதுரை மாவட்டத்தில் தானியமங்கலம் மற்றும் மாணிக்கம்பட்டி ஆகிய 10 இடங்களில் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு நீர்த் தேக்கங்களில் நீர் ஆவியாவதை தடுக்கவும் மற்றும் சூரிய சக்தி கட்டாய கொள்முதல் அளவை அதிகரிக்கவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், இந்திய சூரியசக்தி கழகமும் இணைந்து முதன்முறையாக 250 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை 1,125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாத்தியக்கூறின் அடிப்படையில் அமைக்கப்படும்.
65 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மோயாறு புனல் மின் நிலையத்தின் ஆயுட் காலத்தை மேலும் 25 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்திடவும், நிறுவு திறனை 3x12 மெகாவாட்டிலிருந்து 3x14 மெகாவாட்டாக அதிகப்படுத்திடவும், 67 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
2023-ம் ஆண்டு சூரிய எரிசக்தியில் 8,884 மெகாவாட் திறனை அடைவதற்கு ஏதுவாக “சூரிய எரிசக்திக் கொள்கை 2012” மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம், தமிழ்நாடு சூரிய எரிசக்திக் கொள்கை 2012, அம்மா தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023 மற்றும் தேசிய சூரிய இயக்கம் ஆகியவற்றின் நோக்கங்கள் ஒருங்கிணைக்கப்படும்.
தமிழ்நாட்டுக்கு வழங்கிய தொலைநோக்கு பார்வை 2023 ஆவணத்தின் படி, உயர்ந்த பொருளாதார மற்றும் சமூக குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், புதிய எரிசக்தி கொள்கை ஒன்று உருவாக்கப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #tnassembly #EdappadiPalaniswami