என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tripura Poll"
- 20 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
- வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந்தேதி நடக்கிறது.
அகர்தலா :
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது.
இங்கு 60 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி, மாநிலக்கட்சியான திப்ரா மோதா ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது. 20 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பா.ஜ.க. அதிகபட்சமாக 55 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 47 இடங்களிலும், மாநிலக்கட்சியான திப்ரா மோதா கட்சி 42 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.
28.13 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர்.
ஆட்சியைத்தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் கடும் போட்டியில் இறங்கின.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடந்தது. மிகுந்த ஆர்வத்துடன் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கி படையெடுத்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்குப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக்கடமையை ஆற்றினர்.
ரெய்மா தொகுதியில், வாக்காளர்கள் டும்புர் ஏரியில் படகுகளில் வந்து வாக்குப்பதிவு செய்தனர்.
பிரதாப்கார் தொகுதியில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவின்போது ஒரு சில வன்முறைச்சம்பவங்களும் அரங்கேறின.
செபாஹிஜலா மாவட்டத்தின் பாக்சாநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச்செயலாளர் தாக்கப்பட்டார். கோமதி மாவட்டத்தில் காக்ரபான் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 2 தேர்தல் ஏஜெண்டுகள் தாக்கப்பட்டனர்.
கயெர்பூர் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பபித்ரா கர்ரின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.
40-45 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது பட்டதாகவும், அவை மாற்றப்பட்டு, வாக்குப்பதிவு மீண்டும் நடந்ததாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கித்தே கிரண்குமார் தினகர்ராவ் தெரிவித்தார்.
போர்டோவாலி தொகுதியில் போட்டியிடும் முதல்-மந்திரி மாணிக் சகா, அகர்தலாவில் காலையிலேயே வாக்குப்பதிவு செய்தார். அங்கு அவர் நிருபர்கள் மத்தியில் பேசும்போது, "பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறும் என்று 100 சதவீதம் நம்புகிறேன். கடந்த முறையை விட அதிக இடங்களைப் பெறுவோம்" என தெரிவித்தார். பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் தேப், கோமதி மாவட்டத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார், அகர்தலாவில் வாக்குப்பதிவு செய்தார். 25 ஆண்டுகளில் முதல்முறையாக இவர் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ராம் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு செய்தார். மக்கள் தைரியமாக வந்து வாக்கு அளித்து, ஜனநாயகம், அமைதி, சமாதானமான சூழலை உருவாக்கும் புதிய அரசை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெருந்திரளாக வந்து வாக்கு அளித்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
திரிபுராவில் 4 மணிக்கு வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. 85 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
வாக்குப்பதிவு அமோகமாக இருந்ததால், அது எதிர்க்கட்சிக்கு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆதரவாக அமைந்து, அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. கடந்த தேர்தலில் அங்கு 89 சதவீத வாக்குகள் பதிவானது, அப்போதும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.
வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந்தேதி நடக்கிறது. அதே நாளில்தான் மேகாலயா, நாகலாந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க. 55 இடங்களிலும், கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 5 இடங்களிலும் வேட்பாளரை நிறுத்தின.
- சமீப காலமாக செல்வாக்கு பெற்று வரும் திப்ரா மோத்தா என்ற கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
அகர்தலா:
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் 3-வது சிறிய மாநிலமாக இந்த மாநிலம் உள்ளது. 10 ஆயிரத்து 491 கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலம் 8 மாவட்டங்களை கொண்டது. இதில் 60 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன.
திரிபுராவில் வங்காள மொழி பேசும் மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள். இதனால் மேற்கு வங்காளத்தின் தாக்கம் காரணமாக அந்த மாநிலத்தில் சுமார் 27 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆட்சியே நடந்து வந்தது. பா.ஜனதா கட்சி கடந்த 2018-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
மானிக் சாகா தலைமையில் அங்கு தற்போது பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் 5 ஆண்டு பதவிகாலம் அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திரிபுரா தேர்தலில் பா.ஜனதா கட்சி மாநில கட்சியான ஐ.பி.எப்.டி. எனப்படும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க. 55 இடங்களிலும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 6 இடங்களிலும் வேட்பாளரை நிறுத்தின. இரு கட்சிகளும் அம்பிநகர் தொகுதியில் மட்டும் சுமூகமாக மோதுகின்றன. ஒரு காலத்தில் பரம எதிரிகளாக இருந்த காங்கிரசும், கம்யூனிஸ்டும் இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்துள்ளன. கம்யூனிஸ்டு 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
திரிபுராவில் சமீப காலமாக செல்வாக்கு பெற்று வரும் திப்ரா மோத்தா என்ற கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பழங்குடியின மக்களிடம் தனி செல்வாக்குடன் திகழும் இந்த கட்சி மற்ற 2 கூட்டணிகளுக்கும் கடும் சவால் விடுத்துள்ளது. இதனால் திரிபுரா தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. 3 கூட்டணிகளிலும் மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக அந்த மாநிலத்தில் விறுவிறுப்பான பிரசாரம் நடைபெற்றது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு சவால் விடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
நேற்று முன்தினம் மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து 60 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. மொத்தம் 3,328 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் அதிகளவு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று இரவு டுவிட்டரில் அழைப்பு கொடுத்தார். அவர் வெளியிட்ட பதிவில், 'ஜனநாயக திருவிழாவை பலப்படுத்தும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அளவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களை வாக்களிக்க வருமாறு அழைக்கிறேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதை உறுதிபடுத்துவது போல இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் ஆர்வமுடன் வந்தனர். தொடக்கம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
திரிபுரா மாநிலத்தில் சுமார் 41 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் சுமார் 28 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். அவர்கள் அமைதியாக வாக்களிப்பதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுமார் 31 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திரிபுரா மாநிலத்தை சுற்றிலும் வங்கதேச நாடு, அசாம், மிசோரம் மாநிலங்களின் எல்லைகள் அமைந்துள்ளன. இந்த எல்லைப் பகுதிகள் அனைத்தும் ஓட்டுப்பதிவை முன்னிட்டு சீல் வைக்கப்பட்டு இருந்தன.
பாதுகாப்பு கருதி பதட்டமான 1,100 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 97 வாக்குச் சாவடிகள் முழுக்க முழுக்க பெண் அதிகாரிகளால் கையாளப்பட்டன. மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி 81.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
திரிபுராவில் ஏற்பட்டுள்ள மும்முனை போட்டி காரணமாக பா.ஜனதா மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டணி அமைத்திருப்பதால் சுமார் 40 தொகுதிகளில் கடுமையான பலப்பரீட்சை ஏற்பட்டு இருக்கிறது.
பா.ஜ.க. தலைவர்களில் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு கட்சிகளுக்கு தாவியது மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி, வங்க மொழி பேசும் மக்களின் வாக்குகளை பிரிப்பதும், பா.ஜனதாவுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.
திரிபுராவின் 527 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களின் அமோக ஆதரவை திப்ரா மோத்தா கட்சி பெற்றிருக்கிறது. பழங்குடியின மக்களுக்காக உருவான இந்த கட்சியை திரிபுரா அரச பரம்பரையை சேர்ந்த பிரத்யோத் கிஷோர் வழி நடத்தி வருகிறார்.
மன்னரான இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பழங்குடியின மக்கள் லட்சக்கணக்கில் திரண்டனர். பழங்குடியின மக்களுக்காக 'திப்ராலாந்து' என்ற மாநிலத்தை உருவாக்க இந்த கட்சி போராடி வருகிறது.
இதன் காரணமாக பழங்குடியின மக்கள் வாக்குகள் இந்த கட்சிக்கு தான் கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் பழங்குடியின மக்கள் செல்வாக்கு மிகுந்த 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவை பா.ஜனதாவுக்கு அந்தளவுக்கு வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகமும் நிலவுகிறது.
இத்தனை சவால்களையும் கடந்து திரிபுராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நாங்களே ஆட்சி அமைப்போம் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்