என் மலர்
திரிபுரா
- ஆத்திரமடைந்த ஷியாமல் தாஸ் மனைவியை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்வப்னா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திரிபுராவில் குடும்ப தகராறில் மனைவியைக் கொன்று இரவு முழுவதும் சடலத்துடன் தங்கி இருந்து மறுநாள் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு 40 வயதான ஷியாமல் தாசு என்பவருக்கும் மனைவி ஸ்வப்னாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஷியாமல் தாஸ் மனைவியை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் ஸ்வப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து செய்வதறியாது ஷியாமல் இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன் தங்கினார்.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள அம்தாலி காவல் நிலையத்திற்கு சென்ற ஷியாமல் தாஸ் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறி சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்வப்னா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கடந்த 2016-ம் ஆண்டு முதல் மின் வினியோகம் நடந்து வருகிறது.
- நன்றிக்கடனாகவும் மின் வினியோகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
வங்காளதேசத்துக்கு நாள்தோறும் 60 முதல் 70 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை திரிபுரா மாநில மின் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த வினியோகம் நடந்து வருகிறது.
இந்த மின்சாரத்துக்காக வங்காளதேச அரசு சுமார் ரூ.200 கோடி வரை பாக்கி வைத்து உள்ளதாக முதல்-மந்திரி மாணிக் சகா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வங்காளதேசம் ரூ.200 கோடி வரை மின் கட்டண பாக்கி வைத்துள்ளது. இது நாள்தோறும் அதிகரித்தும் வருகிறது. இதை விரைவில் வழங்கி மின் வினியோகம் தடைபடாமல் பார்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்' என தெரிவித்தார்.
அதிகமான கட்டணம் பாக்கி வைத்துள்ளதால் வங்காளதேசத்துக்கு மின் வினியோகம் நிறுத்தப்படுமா? என்று கேட்டபோது, அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்தார்.
திரிபுரா மின் உற்பத்தி நிலையத்துக்கான பல தளவாடங்கள் வங்காளதேசம் அல்லது சிட்டகாங் துறைமுகம் வழியாக கொண்டு வரப்படுவதாகவும், எனவே அதற்கான நன்றிக்கடனாகவும் மின் வினியோகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். எனினும் கட்டண நிலுவையை வழங்காமல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மின்சாரம் வழங்க முடியும் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
- திரிபுரா மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
- கனமழை, நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு.
திரிபுரா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக விடாமல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திரிபுரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி திரிபுராவில் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 17 லட்சம் பேர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள 450 நிவாரண முகாம்களில் சுமார் 65 ஆயிரத்து 500 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், திரிபுரா மாநிலத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ. 40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.
அதில், "திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் பங்கு ரூ.40 கோடியை முன்பணமாக விடுவிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது."
"வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 11 குழுக்கள், ராணுவம் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்திய விமானப் படைக்கு சொந்தமான நான்கு ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன."
"திரிபுராவில் உள்ள நம் சகோதர, சகோதரிகள் இத்தகைய கடினமான காலக்கட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அவர்களுக்கு தோளோடு தோள் நின்று போராடுவதைக் காண்பீர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா
- ராணுவம் இடைக்கால அரசு அமைக்கும் என தளபதி அறிவிப்பு.
மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார். இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேசத்தில் ராணுவம் இடைக்கால ஆட்சி அமைக்கும் அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். மேலும் போராட்டக்காரர்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்தியாவுக்கு வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் எல்லை பாதுகாப்புப்படை உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லை பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் திரிபுரா எல்லை வழியாக ஊடுருவலை அனுமதிக்கமாட்டோம் என அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் மாணிக்யா தெப்பர்மா தெரிவித்துள்ளார்.
அவர் பேஸ்புக் இணையதளத்தில் "உள்துறை மந்திரி அமித் ஷா உடன் பேசினேன். இந்தியா எல்லைகள் சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒருவரை கூட ஊடுருவ அனுமதிக்கமாட்டோம். சூழ்நிலையை அவர் கண்காணித்து வருவதாகவும், எல்லையில் படைகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும்போது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு வளர்ந்து வருகின்றன. இதன்காரணமாக வங்காளதேசத்துடன் எல்லையை பகிர்ந்துள்ள திரிபுரா, மேற்கு வங்காளம், மேகாலயா, அசாம் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. திரிபுரா 856 கிலோ மீட்டர் எல்லையை வங்காளதேச நாட்டு எல்லையுடன் பகிர்ந்துள்ளன.
- திரிபுராவில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.
- எச்ஐவி பாதிக்கப்பட்ட 572 மாணவர்கள் உயிருடன் உள்ளனர், 47 பேர் உயிரிழந்தனர்.
எச்.ஐ.வி. என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் நோய் மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவும் வைரஸ் ஆகும். உலகம் முழுவதும் உள்ள மிக கொடிய நோய்களில் எச்.ஐ.வி.யும் ஒன்று. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திரிபுரா எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அம்மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.
சோதனையை தொடர்ந்து இந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களிடையே பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூத்த அதிகாரி கூறுகையில்,
திரிபுரா மாநிலத்தில் மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி பாசிட்டிவ் உள்ள 828 மாணவர்களை நாங்கள் இதுவரை மீட்டுள்ளோம். அவர்களில் 572 மாணவர்கள் உயிருடன் உள்ளனர், 47 பேர் உயிரிழந்தனர்.
பல மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பிரபல பல்கலைக்கழகங்களுக்கு இங்கிருந்து படிக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்ப அறிவுறுத்தி இருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு போதை பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது, ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியுள்ளனர். இதனால்தான் தொற்று பரவியிருக்கிறது. எனவே அனைவரையும் கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளோம்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இருவரும் அரசு பணிகளில் இருக்கின்றனர். தங்கள் பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் தயங்குவதில்லை. தங்கள் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு இரையாகிவிட்டனர் என்பதை பெற்றோர் உணர தாமதமாகி விடுகிறது, என்று அவர் கூறினார்.
- இவரது கணவன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் மகள் திருமணமாகி சென்றுவிட்டார்.
- கட்டிட வேலைகளில் தினக்கூலியாக பணி செய்து வயிற்றைக் கழுவியும் மகனை வளர்த்தும் வந்தார்.
திரிபுராவில் தனது 9 வயது மகனை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் அகார்தலாவில் உள்ள ஜோயாநகர் பகுதியில் சுபர்ணா பால் என்ற பெண் தனது 9 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
இவரது கணவன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் மகள் திருமணமாகி சென்றுவிட்டார். பணத்துக்கு மிகவும் சிரமப்படும் சுபர்ணா, கட்டிட வேலைகளில் தினக்கூலியாக பணி செய்து வயிற்றைக் கழுவியும் மகனை வளர்த்தும் வந்தார்.
இந்நிலையில் நேற்று(ஜூன் 10) மாலை வீட்டில் வைத்து தனது 9 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மகனின் பிணத்துக்கு அருகிலேயே பிரம்மை பிடித்து உட்கார்ந்திருந்திருக்கிறார் அபர்ணா. கொலை குறித்து தகவலறிந்து வந்த போலீசாரிடம், தானே தனது மகனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் அவர் போலீசாரிடம், மகன் தனது சொல் பேச்சு கேட்பதில்லை எனவும் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறினார். அதைத்தொடர்ந்து, வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடியதால் மிகுந்த ஆத்திரத்தில் மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். ஏறக்குறைய உலகின் அனைத்து குற்றங்களுக்கும் காரணமாக உள்ள பணத்தால் மற்றொரு ஏழைக் குடும்பம் நிர்மூலமாக்கியுள்ளது என்றே இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

- வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண், வறுமையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயான மோர்மதியின் கணவர் 5 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் கடுமையான வறுமையில் குடும்பம் இருந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண், வறுமையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் கந்தசேராவில் உள்ள தாராபன் காலனியைச் சேர்ந்த மோர்மதி திரிபுரா (39) என்ற பழங்குடியின பெண்ணுக்கு கடந்த மே 22 ஆம் தேதி வீட்டில் வைத்து நடந்த பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயான மோர்மதியின் கணவர் 5 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் கடுமையான வறுமையில் குடும்பம் இருந்துள்ளது. ரேஷன் கார்டை அடைமானம் வைத்து குழந்தைகளைப் பராமரித்து வந்த மோர்மதி, தற்போது பிறந்த குழந்தையை ஹெஜமாராவில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ. 5,000-க்கு விற்றுள்ளார்.

முன்னதாக தனது கருவைக் கலைக்குமாறு மருத்துவரை மோர்மதி அணுகியுள்ளார்.ஆனால் மருத்துவர் அதற்கு மறுப்பு தெரிவித்து மோர்மதிக்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்கி வந்துள்ளார். இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு, வறுமை காரணமாகக் குழந்தையை விற்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு செயலாளருமான ஜிதேந்திர சவுத்ரி அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தால் குழந்தையை வாங்கிய தம்பதியரிடம் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. வறுமை காரணமாக அப்பகுதியில் குழந்தைகளை விற்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜிதேந்திர சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

- பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
- பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
அகர்தலா:
வட மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கால நிலை மாற்றம் மற்றும் வெயில் கொளுத்தி வருவதால் இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு, திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
- அகர்தலா விமான நிலையத்திலிருந்து தினமும் மொத்தம் 32 விமானங்கள் புறப்படுகின்றன.
- சர்வதேச விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகர்தலாவில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் (எம்பிபி) விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவையை விரைவில் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.
நவீன திரிபுராவின் கட்டிடக் கலைஞராகக் கருதப்படும் மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் 5 மீட்டர் உயர வெண்கலச் சிலையை இங்குள்ள விமான நிலையத்தில் சஹா திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியிருப்பதாவது:-
திரிபுராவின் வளர்ச்சியில் மாணிக்ய வம்சத்தினர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் இருந்தபோதிலும், கடந்த காலத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
2014ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று, 2018ல் திரிபுராவில் பா.ஜ., தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, திரிபுராவின் மகாராஜாக்கள் கவுரவிக்கப்பட்டு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சிங்கர்பில் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பின்னர் அது எம்பிபி விமான நிலையம் என மறுபெயரிடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டு மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் நினைவாக விமான நிலையத்தை அதிகாரப்பூர்வமாக அர்ப்பணித்தார்.
70களில், திரிபுராவில் இவ்வளவு அழகான விமான நிலையம் கட்டப்படும் என்று நாம் யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இந்த விமான நிலையம் இப்போது வடகிழக்கில் உள்ள மிகவும் கவர்ச்சிகரமான விமான நிலையங்களில் ஒன்றாகும்.
தற்போது, அகர்தலா விமான நிலையத்திலிருந்து தினமும் மொத்தம் 32 விமானங்கள் புறப்படுகின்றன.
அகர்தலா விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகளை தொடங்குவதற்கு மாநில அரசு சாதகமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சர்வதேச விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமருக்கு நன்றி, திரிபுரா விமான இணைப்பு, சாலை இணைப்பு மற்றும் ரெயில் இணைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
- திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு வேறு பெயர் வைக்குமாறு மேற்கு வங்க அரசிற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக திரிபுரா மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி சீதா, அக்பர் சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அவ்வழக்கின் விசாரணையில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.
திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம்" எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
- அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு கோவிலிலும் தூய்மை இயக்கத்தை தொடங்க பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
- தனது தொகுதியில் உள்ள கோவில்களில் தூய்மை பணியில் ஈடுபட்டார் திரிபுரா முதல்வர்
அயோத்தியில் நடைபெற உள்ள ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தூய்மை இயக்கம் மேற்கொள்ள பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
அதனை தொடர்ந்து, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹி, தனது தொகுதியான போர்டோவாலியில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று தூய்மை இயக்கத்தை தொடங்கினார். அத்துடன் முதல்வரும் இதில் பங்கெடுத்து கோவில் சுற்றுவட்டார பகுதியை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது, "அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு கோவிலிலும் தூய்மை இயக்கத்தை தொடங்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். எனவே பாஜக தொண்டர்கள் அனைவரும் கை கோர்த்து கோவில்களை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். திரிபுராவின் ஒவ்வொரு தொகுதியிலும் இது போன்ற தூய்மை இயக்கம் நடந்து வருகிறது. கோவில்களில் தூய்மை இயக்கம் ஒரு தெய்வீக உணர்வு" என்றும் மாணிக் தெரிவித்தார்.
முன்னதாக மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள கலராம் கோவில் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்தது குறிப்பிடதக்கது. துடைப்பம் மற்றும் வாளியுடன் பிரதமர் மோடி கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
- வாக்குப் பதிவின்போது முறைகேடு நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசமிருந்த தொகுதியை கைப்பற்றியது பா.ஜனதா
திரிபுராவில் உள்ள தன்புர், போக்சாநகர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டு தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தன்புர் தொகுதி பா.ஜனதா வசம்தான் இருந்தது. பிரதிமா பௌமிக் மத்திய மந்திரியானதால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் பிந்து டெப்நாத் போட்டியிட்டார். அவர் 30,017 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுசிக் சண்டா 11,146 வாக்குள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பழங்குடியின வகுப்பினரை சேர்ந்த 18,871 வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
போக்சாநகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாம்சுல் ஹக் காலமானதால், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் 30,237 வாக்குகள் (சுமார் 66 சதவீதம்) சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்களுடையது. இதனால், இந்த வாக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.
ஆனால் பா.ஜனதா வேட்பாளர் டஃபாஜ்ஜால் ஹொசைன் 34,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மிஜன் ஹொசைன் 3,909 வாக்குகள் பெற்றார்.
ஏழு மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தன்புர் தொகுதியில் முதன்முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது.
தேர்தலின்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.