search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two leaves symbol"

    • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    இடைத்தேர்தலில் போட்டியிட இன்று மதியம் வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசும் இன்றுதான் மனு தாக்கல் செய்தார். தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    என்றாலும் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையேதான் வழக்கம் போல பலப்பரீட்சை உருவாகி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும் போட்டி வேட்பாளரை அறிவித்ததால் அ.தி.மு.க. வேட்பாளராக யார் கருதப்படுவார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதுபோல யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதிலும் பரபரப்பு நிலவியது.

    இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வின் அவை தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி அவர் பொதுக்குழு உறுப்பினர்களில் 98 சதவீதம் பேரிடம் கையெழுத்து பெற்று தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்பித்தார்.

    அதை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமாருக்கு டெல்லி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியது.

    அதில், "அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஏ, பி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்கும் அதிகாரம் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்" என்று கூறி இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள வேட்பாளருக்கு அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியானது. இதை தேர்தல் அதிகாரி சிவக்குமார் உறுதிப்படுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், "தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் எனக்கு வந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நான் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்வேன்.

    அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தரும் ஏ, பி படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்" என்று கூறினார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    இதனால் உற்சாகம் அடைந்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்று தங்களது பிரசாரத்தை சுறுசுறுப்புடன் தொடங்கி உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஈரோடுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி அணியின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் தானாகவே முடங்குகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவது யார்? இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் முடங்கி விடுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஈரோடு இடைத்தேர்தலில் என் கையெழுத்துடன் கூடிய வேட்பாளர் பெயரை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. எனவே என்னை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்து நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் இன்னமும் ஏற்கவில்லை.

    இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி, யாரும் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஏ,பி படிவங்களில் கையெழுத்திட ஓ.பன்னீர் செல்வம் தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் அந்த படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தயாராக இல்லை என்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. வருகிற 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதற்குள் தீர்ப்பு வராவிட்டாலும் இருவருக்குமே இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போகலாம். இப்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கோ இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி அணியின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் தானாகவே முடங்குகிறது. எனவே இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினருமே சுயேட்சை சின்னத்தை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை.

    எனவே சுயேட்சை சின்னத்தை பெற்றாலும் தங்களின் பலத்தை காட்ட இரு அணியினருமே தயாராகி வருகிறார்கள்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது.
    • இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் இரு அணிகளாக செயல்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒரு வேட்பாளரை நிறுத்துகிறது.

    இதேபோல் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது.

    இது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

    இதில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது.

    இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

    அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

    இந்த இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

    இதுபற்றி ஓ.பன்னீர் செல்வம் அணியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அணியினர் இரட்டை இலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவதற்கு காரணம் என்ன என்றால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று தெரிந்து விட்டது.

    அப்படியென்றால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எங்கள் வசம்தான் இரட்டை இலை சின்னம் உள்ளதாக கருத வேண்டி உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தொடர்பான நோட்டீசு எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. வந்தாலும் பதில் அனுப்பப்படும்.

    இதற்காக எங்களது மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், ரஞ்சித் குமார் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு.
    • பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற கோரிக்கை.

    புதுடெல்லி:

    அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதிக்ககோரி நீதிபதிகளிடம்  இன்றுமுறையீடு செய்யப்பட்டது.

    அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

    தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் பதிவேற்றப்படும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். சின்னமும் கிடைத்துவிடும் என்ற நோக்கில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, திங்கட்கிழமை முறையிடும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    • ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது. 5 வருடங்களுக்கு பிறகு அந்த பெட்டிகளை திறந்தால் பிரயோஜனமில்லை.
    • எப்போது பெட்டிகளை திறந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்?

    சென்னை:

    திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டையில் சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வை மீண்டும் தனித்தன்மையோடு கொண்டு வர முடியும் என்று உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். ஏன் வாய்ப்பு இருக்கிறதா? என்று நினைக்கிறீர்கள். நிச்சயம் ஒன்றிணையும்.

    என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

    ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கேட்கிறீர்கள். அதனை நான் எப்படி சொல்ல முடியும். அது மக்கள் கையில் தான் இருக்கிறது.

    நான் ஜெயலலிதாவின் பிரசாரங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியுமோ அதனை மட்டும் தேர்தல் பிரசாரத்தில் சொல்வோம். ஏனென்றால் திரும்பவும் மக்களை நாங்கள் சந்திக்கும் போது அவர்கள் எங்களிடம் பேச வேண்டுமே தவிர, ஏன் சொன்னதை செய்யவில்லை என்று கேள்வி கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் என்ன செய்ய போகிறோமோ அதனை மட்டும் தான் சொல்வோம்.

    தி.மு.க. சார்பில் தேர்தல் சமயத்தில் பெரிய பெட்டி வைத்து பூட்டு போட்டு, அதில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை கடிதங்களாக போடுங்கள். அதன் சாவி என்னிடம் தான் இருக்கும்.

    ஆட்சிக்கு வந்ததும் அந்த பெட்டிகளை எல்லாம் திறந்து அந்த கோரிக்கை கடிதங்களை மாவட்டம் வாரியாக பிரித்து, அதில் ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி வாரியாக மீண்டும் பிரித்து மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னது ஊடகங்களிடம் இருக்கும்.

    அது போன்று சொல்லி மக்களை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். அந்த பெட்டியின் சாவி தொலைந்து விட்டது என்று தான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால் அந்த சாவி இருந்திருந்தால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பார்கள்.

    ஊடகங்கள் முன்பு வைத்து தான் அந்த பெட்டிகளை பூட்டு போட்டு பூட்டினார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது. 5 வருடங்களுக்கு பிறகு அந்த பெட்டிகளை திறந்தால் பிரயோஜனமில்லை.

    அதனால் எப்போது அந்த பெட்டிகளை திறந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்?

    அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் சரியாக இருந்தால் நம்மை யார் என்ன செய்து விட முடியும். பா.ஜனதா மட்டுமல்ல, எல்லா கட்சியையும் சொல்கின்றேன் அடுத்த கட்சியை குறை சொல்லி கொண்டு இருக்க கூடாது.

    அவரிடம் கொடு, இவரிடம் கொடு என்று மற்ற கட்சிகள் ஏமாற்றுவதற்கு நாம் என்ன ஒரு மாத குழந்தையா? நாம் சரியாக இருந்தால், சரியாக செயல்பட முடியும். என்னையெல்லாம் யாரும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட யாரும் நெருங்க முடியாது.

    நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒரு போதும் முடங்க விடமாட்டேன்.

    இவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை பார்க்கும் போது அது தி.மு.க.வுக்கு தான் நல்லதாக இருக்கிறது. அதனால் ஒருவருக்கொருவர் திட்டுவதை விட்டு விட்டு ஒழுங்காக ஒருங்கிணைந்து தி.மு.க.வை வீழ்த்துவதற்கு கைகோர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய 102 வயது மூதாட்டி வாழ்கிறார். #Loksabhaelections2019
    சென்னை:

    தேர்தல் களம் பரபரப்பும், சுவாரஸ்யமும் நிறைந்தது. அது வெளிப்படும்போது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படும்.

    நாளை மறுநாள் (18-ந் தேதி) 17-வது பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களையும் பார்த்தவர்களும், ஓட்டளித்தவர்களும் இருப்பது அரிது.

    தென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய கண்ணம்மாள் என்ற மூதாட்டி வாழ்கிறார். 102 வயதாகும் அவர் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன்களை பார்த்தவர். கந்தன்சாவடி அண்ணா நெடுஞ்சாலையில் வசித்து வருகிறார்.

    அந்த பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவு திரட்டி வரும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் இன்று கண்ணம்மாள் வீட்டுக்கு சென்றார். தள்ளாத வயதிலும் தன்னை பார்க்க வருபவர்களை அடையாளம் பார்த்து அவர்களிடம் பேசுகிறார். அவரிடம் பாட்டி ஓட்டு கேட்க வந்திருக்கிறோம் என்றதும் உற்சாகத்தில் பேச தொடங்கினார்.

    பேராண்டி, அந்த காலத்தில் இருந்தே ஓட்டு போடுகிறேன். அப்பெல்லாம் இப்படி கிடையாது. இப்ப திருவிழா மாதிரி நடக்குதே... என்று கூறி சந்தோஷப்பட்டார். அவரிடம் பிளாஸ்டிக்கால் ஆன இரட்டை இலை சின்னத்தை கொடுத்து பாட்டி மறக்காம இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்றதும் கண்ணம்மாளின் கண்களில் அப்படி ஒரு ஆனந்தம். “மவராசன் எம்.ஜி.ஆர். அவருக்கு நிறைய தடவை இரட்டை இலையில் ஓட்டு போட்டிருக்கேன். நீங்களும் அந்த மவராசன் சின்னத்துக்குத்தான் ஓட்டு கேட்டு வந்திருக்கீங்களா... கண்டிப்பா இரட்டை இலைக்கு போடுவேன்பா என்றார்.

    102 வயதிலும் எம்.ஜி.ஆரையும் அவர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னத்தையும் கண்ணம்மாள் பாட்டி நினைவில் வைத்திருந்ததை பார்த்ததும் வாக்கு கேட்டு சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.

    இதுபற்றி கே.பி.கந்தன் கூறும்போது, இதுதான் இரட்டை இலையின் வெற்றி. இது வெறும் சின்னம் மட்டுமல்ல, மக்களின் எண்ணம். எந்த காலத்திலும் அவர்கள் உணர்வில் இருந்து இரட்டை இலை மறைய போவதில்லை என்றார். பின்னர் கண்ணம்மாளிடம் ஆசி பெற்று அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். #Loksabhaelections2019
    இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.

    இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமி‌ஷன் அந்த சின்னத்தை முடக்கியது.

    பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

    இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.



    இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    மேலும் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran 
    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது வருகிற 15-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. #SC #TwoLeaves #TTVDhinakaran
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது.

    இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.

    இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமி‌ஷன் அந்த சின்னத்தை முடக்கியது.

    பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.



    இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

    இந்த அப்பீல் மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

    தினகரனின் அப்பீல் மனு வருகிற 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. #SC #TwoLeaves #TTVDhinakaran
    த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். #ADMK #VaigaiChelvan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகி உள்ளது.

    தமிழகம்-புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்து தே.மு.தி.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஜி.கே.வாசனின் த.மா.கா., கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி ஆகியவை அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்தி வருகிறது.

    இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியில் த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம்பெறுகின்றன. இது தொடர்பாக அந்த கட்சி தலைவர்கள் எங்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்கள். ஓரிரு நாளில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

    அப்போது அவரிடம் இந்த கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடும் என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், “கடந்த தேர்தலில் சிறிய கட்சிகளுக்கு அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.



    அது போல் இந்த தேர்தலில் இந்த கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது” என்றார்.

    இந்த 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது என்றும் வைகைச் செல்வன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து செய்திகள் வருகின்றன. நடந்து முடிந்த காலங்களில் சூழ்நிலைக்கேற்ப கருத்துக்கள் கூறுவது வழக்கம். அது காலப்போக்கில் மறைந்து விடும். கூட்டணி என்று வந்த பிறகு பழையவற்றை தோண்டி பார்க்க கூடாது.

    தற்போதைய நிலைப்பாட்டைதான் பார்க்க வேண்டும். தி.மு.க., காங்கிரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் லட்சியம். அதனால்தான் ஒன்று சேருகிறோம். ஜெயலலிதா இருக்கும் போது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

    இந்த தேர்தலில் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவோம். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அடையாளம் தெரியாமல் போய்விடும்.

    டி.டி.வி. தினகரன் அணியில் உள்ளவர்கள் தேர்தலுக்குள் தாய் கழகத்தில் சேருவார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #VaigaiChelvan #TamilMaanilaCongress

    அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை செய்கிறது. #AIADMK #DelhiHighCourt
    புதுடெல்லி:

    அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் கமிஷன் வழங்கிய உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.



    நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா டிங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சார்பில் செம்மலை தரப்பு வக்கீல் ஆஜர் ஆனார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை இன்று(வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர். அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் டெல்லி ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. #AIADMK #DelhiHighCourt
    இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று தொடங்கியது. #TwoLeavesSymbol #DelhiHighCourt
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



    டி.டி.வி.தினகரன் தரப்பில் கோர்ட்டில் நேற்று ஆஜரான அவருடைய வக்கீல் மீனாட்சி அரோரா தன்னுடைய வாதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற வழக்கு தேர்தல் கமிஷனில் நடைபெற்று வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த ஆவணங்களில் பல போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக அவர்கள் மீது தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் கமிஷனின் இந்த அணுகுமுறை சட்டவிரோதமானது என்றார். 7 நாட்கள் நடந்த இவர்களின் வாதம் நிறைவடைந்தது.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தன்னுடைய வாதத்தை தொடங்கினார். வாதம் தொடங்கிய சிறிது நேரத்தில், இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்து வாதம் நடைபெறும் என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

    வழக்கு விசாரணையின் போது அமைச்சர் சி.வி.சண்முகம் கோர்ட்டில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து விசாரணையை கவனித்து கொண்டிருந்தார்.

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முதன்மையாக குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருடைய ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு கோரியதை ஏற்று, அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பதிவு மீதான இறுதி வாதம் ஜூலை 17-ந் தேதி என்று அறிவித்த நீதிபதி, அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.  #TwoLeavesSymbol #DelhiHighCourt
    ×