search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udumalai hill people"

    • மலைவாழ் கிராமங்களில் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • வீடுகளுக்கு சிமென்ட் தளம்அமைத்துத்தர மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை,அமராவதி வனச்சரகங்களுக்கு உட்பட்ட ஈசல் திட்டு, திருமூர்த்திமலை, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, காட்டுபட்டி, பெருமாள் மலை, பொருப்பாறு, கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    அங்குள்ள மக்களுக்குஅடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, மருத்துவம் உள்ளிட்ட எந்தவசதிகளும் செய்து தரப்படவில்லை. ஆனை மலை புலிகள் காப்பகத்தின் கீழ் இப்பகுதிகள் உள்ளதால் எவ்வித மேம்பாட்டுத் திட்டங்களும் அனுமதிக்கப் படுவதில்லை. மண் பூசப்பட்ட சுற்றுச்சுவரும், தகரக் கூரை வேயப்பட்ட மேற்கூரையும், மண் தரை கொண்ட குடிசை வீடுகளில்தான் இம்மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து காட்டுப்பட்டி மலைவாழ் மக்கள் கூறியதாவது: - கான்கிரீட் வீடுகளோ, செங்கல் அல்லது ஹாலோபிளாக் கற்களை கொண்ட சுற்றுச் சுவரோ எங்கள் வீடுகளுக்கு இல்லை. ஓலையால் வேயப்பட்ட குடிசைகளிலும், தகரம் பொருத்தப்பட்ட குடிசைகளிலும் மட்டுமே வசித்து வருகிறோம். மழை, வெயில் காலங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மழைக்காலங்களில் கூரைகளும், தகரங்களும் காற்றில் பறந்து விடுகின்றன.

    மண் தரையாக இருப்பதால் எலிகள் எளிதாக வீடுகளுக்குள் ஊடுருவி விடுகின்றன. அவற்றை பிடிக்க பாம்புகளும் படையெடுக்கின்றன. கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற அதீத விஷம் கொண்ட பாம்புகள் வீடுகளுக்குள் புகுவதால் அச்சத்துடனேயே வாழ வேண்டியுள்ளது.

    எனவே வீடுகளுக்கு சிமென்ட் தளம்அமைத்துத்தர மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×