என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vigilance Department"
- கூட்டாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
- ஐஏஎஸ் அதிகாரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாக சஞ்சய் பாப்லி லஞ்சம் வாங்கியதாக ஜூன் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கழிவுநீர் கால்வாய் அமைக்க டெண்டர் வழங்கியதில் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சஞ்சய் பாப்லி மீது பஞ்சாப் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அவரது கூட்டாளி சந்தீப் வாட்ஸ் என்பவரும் ஜலந்தரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சண்டிகரில் உள்ள சஞ்சய் பாப்லி வீட்டில் நேற்று அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஸ்டோர் ரூமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் உள்பட மொத்தம் 12 கிலோ தங்கம், மூன்று கிலோ வெள்ளி, 4 ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லியின் மகன் துப்பாக்கிச் சூட்டில் சனிக்கிழமை உயிரிழந்தார். இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இது குறித்த விசாரணையில் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி சாஹல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கும் அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது வழக்கம்.
சமீபத்தில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.
இதில், அரசு அதிகாரிகள் ரூ.134 கோடிக்கு முறைகேடு செய்திருப்பதற்கான ஆவணங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பிற துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து, புகார்கள் வந்த அதிகாரிகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று காலையில் ஒரே நேரத்தில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர்களின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். மாநிலம் முழுவதும் ஊழல் தடுப்பு படையின் 8 போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், 300 போலீஸ்காரர்கள் என ஒரே நேரத்தில் 410 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
ஒட்டு மொத்தமாக 15 அதிகாரிகளுக்கு சொந்தமான 68 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. பெங்களூரு மாநகராட்சியில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் மாயண்ணா. இவரது தந்தை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி இருந்தார். பணியின் போது அவர் மரணம் அடைந்ததால், 2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரு மாநகராட்சியில் ஊழியராக மாயண்ணா பணியில் சேர்ந்தார்.
அதன்பிறகு, பல்வேறு பகுதிகளில் பணியாற்றி தற்போது மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான பெங்களூரு வீரபத்ரநகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசங்கர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து பல லட்சம் ரூபாய் நகைகள், பணம் போலீசாருக்கு சிக்கியதாக தெரியவந்துள்ளது. மேலும் மாயண்ணாவுக்கு பெங்களூருவில் 6 வீட்டுமனைகள், 4 வீடுகள் இருப்பதற்கான சொத்து ஆவணங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு மாநகராட்சியில் டி-குரூப் ஊழியராக இருந்து வருபவர் கிரி. இவருக்கு சொந்தமான வீடு பாகுலகுன்டே அருகே பி.டி.எஸ். லே-அவுட்டில் உள்ளது. அந்த வீட்டில் ஊழல் தடுப்பு படை போலீசார் நேற்று காலையில் சோதனை நடத்தினார்கள். டி-குரூப் ஊழியரான கிரி வீட்டை பார்த்து ஊழல் தடுப்பு படை போலீசாரே ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் அந்த வீடு அரண்மனை போல இருந்தது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பணம், தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோல், பெங்களூரு எலகங்காவில் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரப்பிஸ்டாக உள்ள ராஜசேகர், பெங்களூரு சகாலா திட்டத்தில் முக்கிய அதிகாரியாக பணியாற்றும் நாகராஜ், நந்தினி பால் கூட்டமைப்பில் பொது மேலாளராக பணியாற்றும் கிருஷ்ணாரெட்டி, பெங்களூரு கட்டுமான பொருட்கள் தொடர்பான மையத்தின் மேலாளர் வாசுதேவ் ஆகிய 4 பேரின் வீடுகளிலும் நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த 4 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், நகை, பணம் சிக்கியது. அவர்களுக்கு சொந்தமான வங்கி லாக்கர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 அதிகாரிகளும் தங்களது வருமானத்தை காட்டிலும் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கதக் மாவட்டத்தில் வேளாண் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் ருத்ரேசப்பா. இவருக்கு சொந்தமான கதக், சிவமொக்கா, தாவணகெரேவில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ருத்ரேசப்பாவுக்கு சொந்தமான வீட்டில் இருந்து மட்டும் 9 கிலோ 400 கிராம் தங்க நகைகள், ரூ.15 லட்சம் ரொக்கம் சிக்கியது. அவரிடம் 3 சொகுசு கார்கள், கதக், சிவமொக்கா, தாவணகெரேயில் சொந்தமான வீடுகள், விவசாய நிலங்கள் இருப்பதும் தெரியவந்தது. அதாவது 53 தங்க கட்டிகள், 14 தங்க நாணயங்கள், 25 தங்க சங்கிலிகள், தங்க மோதிரங்கள் உள்பட 9 கிலோ 400 கிராம் தங்க நகைகள் சிக்கி இருந்தது. அவற்றில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நெக்லசும் அடங்கும்.
ருத்ரேசப்பாவுக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், பத்திரங்களை போலீசார் பரிசோதித்து வருகின்றனர். இதுதவிர வங்கி கணக்குகள், பினாமி பெயரில் ஏதேனும் சொத்து வாங்கி உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக அதிகாரி ருத்ரேசப்பா தனது வருமானத்தை காட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோல், கலபுரகி மாவட்டம் ஜேவர்கியில் பொதுப்பணித்துறை ஜுனியர் என்ஜினீயராக இருந்து வருபவர் சாந்தனகவுடா பிராதார். இவர், ஆரம்பத்தில் பொதுப்பணித்துறையில் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்திருந்தார். கடந்த 2002-ம் ஆண்டில் தான் பொதுப்பணித்துறையில் நிரந்தர பணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். இவருக்கு சொந்தமான கலபுரகி மாவட்டம் குப்பி காலனியில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது சாந்தனகவுடா வீட்டில் இருந்து ரூ.54 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை ஊழல் தடுப்பு படை போலீசார் கைப்பற்றினர். சாந்தனகவுடா வீட்டில் கலபுரகி ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டு மாயண்ணவர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி சொத்து பத்திரங்கள், ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர். பெங்களூருவில் பல கோடி ரூபாய்க்கு சாந்தனகவுடாவுக்கு வீடு இருப்பதையும் போலீசார் கண்டித்துள்ளனர்.
இதுபோல், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஜூனியர் என்ஜினீயராக இருக்கும் கே.எஸ்.லிங்கேவுடா, மண்டியா மாவட்டத்தில் எச்.எல்.பி.சி.யில் என்ஜினீயராக இருக்கும் சீனிவாஸ், பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் வருவாய்த்துறை இன்ஸ்பெக்டராக இருக்கும் லட்சுமி நரசிம்மய்யா, பெலகாவி மாவட்டம் பைலஒங்கலாவில் கூட்டுறவுத்துறை வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றும் ஏ.கே.மஸ்தி ஆகிய 4 பேரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதுதவிர, பெலகாவியில் கோகாக் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சதாசிவ், பெலகாவி மின்வாரியத்தில் சி-குரூப் ஊழியராக பணியாற்றும் நேதாஜி ஹீராஜி பட்டீல், பல்லாரி மாவட்டத்தில் சார் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட சிவானந்த் ஆகிய 3 அரசு அதிகாரிகளின் வீடுகள், அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூருவில் மட்டும் 6 அரசு அதிகாரிகள் வீடுகளிலும், அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக பெங்களூரு, பெங்களூரு புறநகர், பெலகாவி, கலபுரகி, மண்டியா, மங்களூரு, பல்லாரி என மாநிலம் முழுவதும் 68 இடங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி ஊழல் தடுப்பு படை போலீசார் அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.
இந்த சோதனையின் போது 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணம், சொகுசு கார்கள், வீட்டுமனைகள், விவசாய நிலங்களின் பத்திரங்கள், வீடுகளின் சொத்து பத்திரங்கள் கிடைத்திருப்பதாக ஊழல் தடுப்பு படை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 அரசு அதிகாரிகளும் தங்களது வருமானத்தை காட்டிலும் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வீடுகளில் சிக்கிய ஆவணங்களை பரிசீலனை நடத்தி வருவதாகவும், அதன்பிறகு தான் வருமானத்திற்கு அதிகமாக எந்த அளவுக்கு சொத்து சோத்துள்ளனர் என்பது தெரியவரும் எனவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கும்பகோணம் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் மேலாளராக உள்ளார்.
ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விளாத்திகுளம் சப்- ரிஜிஸ்டராக பணிபுரிந்தார். அங்கு பத்திரப்பதிவின்போது பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி சோதனையிட்டதில் அவரிடம் இருந்து ரூ. 3 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து, அவர் கும்பகோணம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேலாளராக பணி இடமாற்றம் செய்யப்படார்.
இதற்கிடையே கணக்கில் வராத பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ரவிச்சந்திரன், அவரது மனைவி சுதா மற்றும் மாமனார் சுந்தரராஜன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 6 வீடுகள் உள்ளது. இந்நிலையில் ரவிச்சந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுதா, ஜெயராணி ஆகியோர் தலைமையில் 2 வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போல் அங்குள்ள அவரது மாமனார் சுந்தரராஜனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சாம்வின்சென்ட். சைதாப்பேட்டை சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சரவணன்.
இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள காவல் ஆய்வாளர் குடியிருப்பிலும், இன்ஸ்பெக்டர் சரவணன் புழுதிவாக்கம் ஜெகலட்சுமி நகரிலும் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளிலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
லஞ்ச குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சாம்வின்சென்ட், சரவணன் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை காவல்துறையில் உள்ள விபசார தடுப்பு பிரிவில் பணிபுரிந்தனர். அப்போது இருவர் மீதும் விபசார புரோக்கர்கள் மற்றும் விபசார கும்பலிடம் லஞ்சமாக பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக இருவர் மீதும் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் மீது 13(2), 13(1)(டி) ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தியது அங்கு வசித்து வரும் மற்ற அதிகாரிகள் மத்தியிலும், அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
காவல்துறையில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியிலும் இந்த சோதனை பரபரப்பான பேச்சாக மாறி இருந்தது.
இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட், சரவணன் இருவரும் விபசார தடுப்பு பிரிவில் கடந்த 2018-ம் ஆண்டு பணிபுரிந்தபோது விபசார கும்பலிடம் பணபலன்களை பெற்றுக்கொண்டு பயன் அடைந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம் சுமத்தி வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் அவர்கள் தவறாக முறைகேடான வழியில் யார், யாரிடம் பணம் பெற்றுள்ளார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இருவரும் லஞ்ச புகாரில் சிக்கிய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சாம்வின்சென்ட், சரவணன் இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் வரை நீடித்தது. இன்று மாலையில் சோதனை முடிந்த பிறகு அதுதொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், இருவரும் விபசார புரோக்கர்களிடம் பலன் அடைந்ததாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார், யாரிடம் பணம் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை அவர்கள் விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய காலத்தில் புரோக்கர்களால் கொடுக்கப்பட்டுள்ளது? என்ற தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இன்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அது தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட வாய்ப்புள்ளது.
லஞ்சம் பெற்றதால் கலெக்டரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வட்டாட்சியர் தர்மராஜ், பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டாட்சியர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, புற்றுநோய் போல் ஊழல் பரவி உள்ளதாக வேதனை தெரிவித்ததுடன், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
“லஞ்சம் ஊழலை தடுக்க அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்த வேண்டும். தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது. லஞ்சம் தொடர்பாக அனைத்து அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும்” என்றும் நீதிபதி கூறினார்.
பின்னர், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக தர்மராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #MadrasHighCourt #VigilanceRaid
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் உள்ளது. இதன் இயக்குனராக அறிவொளி உள்ளார். இந்த பயிற்சி மையத்தின் செயல்பாட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
பள்ளி மாணவர்களுக்காக இந்த பயிற்சி மையம் சார்பில் மாதஇதழ் நடத்தப்படுகிறது. அந்த மாத இதழுக்காக அரசு ஒதுக்கிய நிதியிலும், உலகமெல்லாம் தமிழ் என்ற திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் கல்வியியல் பாடத்திட்டம் குறித்து நடத்தப்படும் வல்லுனர்குழு ஆலோசனைக்கூட்டத்தை நடத்தாமல், நடத்தியதாக கணக்கு காட்டி அதிலும் முறைகேடு நடந்ததாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் பூர்வாங்க விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உண்மை என்று தெரியவந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு அடிப்படையில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அறிவொளியின் அலுவலகத்திலும், கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் ஒரேநேரத்தில் நேற்று காலை 10 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் வசிக்கும் வீடு 3 அடுக்குமாடி குடியிருப்பாகும். கீழ்தளத்தில் அறிவொளி வசிக்கிறார்.
இந்த சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அதையொட்டி அறிவொளியிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். அறிவொளியின் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் அறிவொளியின் அனுமதியோடு முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. அறிவொளியோடு, மாநில முறைசாரா கல்வித்துறை இயக்குனர் ஆர்.லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியை சங்கீதா, காஞ்சிபுரம் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை சித்ரா, சேலம் மாவட்டம் எஸ்.எஸ்.காட்டுவளவு பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் அமலன் ஜெரோன் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட 2 இதழ்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.17 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் ‘உலகெல்லாம் தமிழ்’ என்ற திட்டத்துக்காக 5 வீடியோ படங்கள் தயாரிக்க ரூ.17 லட்சத்து 98 ஆயிரத்து 400 ஒதுக்கப்பட்டது. அதிலும் முறைகேடு நடந்துள்ளது அம்பலம் ஆகி உள்ளது. கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்வி செயற்கை கோள் வாங்கியதிலும் ரூ.2 கோடி சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேற்கண்ட தகவல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. #VigilanceDepartment #Raid
இந்த விசாரணை ஆணையம், மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கருணாநிதி உள்ளிட்ட 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி ஆர்.ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையத்துக்கு புதிய நீதிபதி யாரையும் நியமிக்கவில்லை என்றும் தலைமை செயலகம் கட்டிட முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ‘அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளினால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதிலும், வரிப்பணம் வீணாகியுள்ளது. ஒரு அரசு கட்டிய சட்டப் பேரவையை மாற்றி அமைப்பதற்கும், அழகுபடுத்துவதற்கும் பணம் வீணடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு ஆணையம் அமைத்து, அதற்கு ரூ.5 கோடி வரை செலவும் செய்யப்பட்டுள்ளது.
வரியாக கொடுத்த பணத்தை இவ்வாறு அரசு வீணடிக்கும்போது, அதுகுறித்து கேள்விக் கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர், வழக்கை வாபஸ் பெறுவதாக தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு, வாபஸ் பெற அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighCourt #MKStalin #Karunanidhi
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது சம்பந்தி பி.சுப்பிரமணியம், நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோருக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.4,833.57 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளார். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
பொது ஊழியரான எடப்பாடி பழனிசாமி ஆதாயம் அடையும் நோக்கில் இதுபோன்று செயல்பட்டுள்ளார். எனவே, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீதும், தொடர்புடைய மற்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்காக ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனுதாரர் கொடுத்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட விசாரணையை ஜூன் 22-ந் தேதியே தொடங்கி விட்டனர். தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையை முடிக்க 3 மாதம் காலஅவகாசம் அளிக்க வேண்டும். உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெற்று வரும் இந்த திட்டப்பணிகளை உலக வங்கியும் கண்காணித்து வருகிறது. இதில் தவறு நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது’ என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ‘ஜூன் 22-ந் தேதியே முதற்கட்ட விசாரணை தொடங்கி விட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி ஒரு புகார் மீது 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடித்து ஆகஸ்டு 22-ந் தேதியே அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை’ என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி, ‘புகார் கொடுத்து 2 மாதம் முடிவடைந்து விட்ட நிலையில் ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை’ என அட்வகேட் ஜெனரலை பார்த்து கேள்வி எழுப்பினார்.
பின்னர் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். #EdappadiPalaniswami
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்