search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi toll gate"

    • சுங்கச்சாவடியில் பணியிலிருந்த போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நள்ளிரவு நடந்த விபத்தில் பணியில் இருந்த ஊழியர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    கடலூர் மாவட்டம் ராசாபாளையத்தை சேர்ந்தவர் கணேசன்( வயது 31 ).இவர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை பார்த்துவந்தார். நேற்று இரவு இவர் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழி எண் 4-ல் பணியில் இருந்தார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்றுக்கு சுங்கவரி செலுத்துவதற்காக பணியில் இருந்த கணேசன், மணிகண்டன் ஆகியோர் கார்டிரைவரிடம் சுங்கவரியை வசூலித்துக் கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் அதே மார்க்கத்தில் ஒரு லாரி காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தது, மேலும் அதே திசையில் வந்த முட்டை லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துசுங்கச்சாவடி வழி எண் 4-ல் வரி செலுத்த நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் நின்று கொண்டிருந்த லாரி, காரின் மீது மோதி அங்கு வரி வசூல் செய்து கொண்டு இருந்த கணேசன், மணிகண்டன் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விபத்து ஏற்படுத்திய முட்டை லாரி டிரைவர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காங்கேயம் பகுதியை சேர்ந்த முத்துக் குமாரை (வயது29) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுங்கச்சாவடியில் ஊழியர்கள் அங்குள்ள பூத்தில் அமர்ந்து பணி செய்யாமல் வெளியில் நின்று பணி செய்வதால் இச்சம்பவம் நடந்ததாகவும், சுங்கச்சாவடியில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு இதற்கு காரணம் என்று அங்கு பணி செய்யும் மற்ற ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    விபத்தில் பலியான கணேசனுக்கு அஞ்சலை தேவி என்ற மனைவியும் ஹரிஷ் என்ற மகனும் ரித்திஷா என்ற மகளும் உள்ளனர். சுங்கச்சாவடியில் பணியிலிருந்த போது ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×