search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virudhachalam protest"

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் ஆலடி ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான குடிநீர் வசதிக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகள் தோறும் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதுவும் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.

    இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களான கொட்டாரங்குப்பம், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கும் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் விருத்தாச்சலம் பாலக்கொல்லை சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலடி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சுண்ணாம்பு கலந்த குடிநீர் வருவதால் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக கோளாறு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு உள்ளது. எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகிப்பதுடன் தட்டுப்பாடின்றி அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சேறும்- சகதியுமான சாலையில் மாணவ, மாணவிகள் நாற்று நட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சி.கீரனூர்- பவளங்குடி செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளித்தது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள்.

    எனவே இந்த சாலையை சீரமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சாலையின் ஓரம் உள்ள மணலை எடுத்து ஊழியர்கள் சாலையில் போட்டு குண்டும்- குழியுமாக இருந்த இடத்தை மூடினர்.

    ஆனால், அதன் பின்னர் பெய்த மழையால் அந்த சாலை மீண்டும் குண்டும்-குழியுமாக மாறியது. மேலும் நேற்று இரவு பெய்த மழையால் அந்த சாலை சேறும்-சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.

    இந்த நிலையில் இன்று காலை அந்த சாலை வழியாக நேருக்கு நேர் வந்த தனியார் பஸ்சும், லாரியும் சேற்றில் சிக்கி கொண்டது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் சாலை ஆய்வாளர் விமலா ராணி, உதவி கோட்ட பொறியாளர் நல்லத் தம்பி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பொது மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சி.கீரனூர்- பவளங்குடி செல்லும் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விருத்தாசலம் அருகே ஊதிய உயர்வு வழங்க கோரி பள்ளியில் தலைமை ஆசிரியர் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பாலை கொல்லை புதுப்பேட்டையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் சுற்றுபகுதியை சேர்ந்த 150 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நிர்வாகியாக வெள்ளையன் உள்ளார். இவரது மகன் கிருஷ்ணசாமி (வயது 41) தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இந்த பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    பள்ளியின் நிர்வாகி வெள்ளையனுக்கும் வட்டார கல்வி அலுவலருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக வட்டார கல்வி அலுவலர் கடந்த 1.4.2018 முதல் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமிக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. மேலும் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவ- மாணவிகளுக்கு சீருடை மற்றும் முதல் பருவ பாட புத்தகங்களும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்தும், தனக்கு ஊதிய உயர்வு வழங்க கோரியும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி இன்று பள்ளியில் உள்ள தனது அறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். மேலும் அவர் தனது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தார்.

    தலைமை ஆசிரியர் கருப்புபேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×