search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voting documents"

    மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. #MaduraiConstituency

    மதுரை:

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன.

    அதன் பிறகு துணை ராணுவத்தினர் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு மருத்துவக்கல்லூரிக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று பாதுகாப்பையும் மீறி பெண் அதிகாரி ஒருவர் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு மேலும் சில பணியாளர்களுடன் சென்றதாக தகவல் பரவியது.

    இதையடுத்து இரவு 8 மணிக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் மருத்துவக் கல்லூரிக்கு வந்தார். அவர் அங்கு வந்து சென்ற பெண் அதிகாரி யார்? என வாக்குவாதம் செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனை தொடர்ந்து சு.வெங்கடேசன் மற்றும் கட்சியினர் மருத்துவக் கல்லூரி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் தகவல் கிடைத்து அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர், சுயேட்சை வேட்பாளர் பசும்பொன்பாண்டியன் ஆகியோரும் அங்கு வந்து விளக்கம் கேட்டனர்.

    இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த மருத்துவக்கல்லூரி முன்பு பதட்டமான சூழ்நிலை உருவானது. மதுரை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சசிமோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் துணை கமி‌ஷனர் சசிமோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது யார் அனுமதியுடன் பெண் அதிகாரி இங்கு வந்தார்? அவர் எந்த அறைக்கு சென்றார்? என்பது குறித்து வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை காண்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் காண்பிக்கப்பட்டன. அதில் குறிப்பிட்ட பெண் அதிகாரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு செல்லவில்லை என்பதும், அதன் எதிரே உள்ள ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று திரும்பியதும் தெரியவந்தது. இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அறையில் பலத்த பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இருப்பினும் பெண் அதிகாரி குறிப்பிட்ட அறையில் எடுத்து சென்ற ஆவணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அறை ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாகவே உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பெண் அதிகாரி ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குதான் சென்றுள்ளார். தற்போது அந்த அறையும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கிடையில் பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாநில தலைமை தேர்தல் ஆணையர்தான் இறுதி முடிவை அறிவிப்பார்.

    மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி மதுரை கலால்துறை தாசில்தார் சம்பூர்ணம் என தெரியவந்துள்ளது. இவர் மதுரை மேற்கு தொகுதி தேர்தல் உதவி அலுவலராக செயல்பட்டுள்ளார்.

    வாக்குப்பதிவு நாளில் மதுரை சித்திரை திருவிழா நடைபெற்றதை கருத்தில் கொண்டு இங்கு மட்டும் வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நடைபெற்றது. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மருத்துவக்கல்லூரி கொண்டு செல்லப்பட்டு தனி அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

    இந்த பணிகள் முடிந்த பிறகு உதவி தேர்தல் அலுவலர் சம்பூரணம் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என தெரியவந்துள்ளது. எனவே ஆவணங்கள் அறைக்கு சென்று அதில் கையெழுத்திட அதிகாரி சம்பூரணம் சென்றதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர் யார்? அனுமதி பெற்று சென்றார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் கூறுகையில், பெண் அதிகாரி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரிக்கு வந்து சென்ற தகவல் கிடைத்ததும் நாங்கள் விரைந்து வந்தோம். ஆனால் எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. சில போராட்டங்களுக்கு பின்னர் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் காண்பிக்கப்பட்டன.

    அதில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறையின் ‘சீல்’ அப்படியே இருந்தது. அதன் எதிரே உள்ள ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குதான் பெண் அதிகாரி சென்று வந்துள்ளார். அங்கும் தற்போது பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

    அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் யார் தூண்டுத லின்பேரில் பெண் அதி காரி இங்கு வந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். #MaduraiConstituency

    ×