search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "walmart company"

    வால்மார்ட் நிறுவனத்தை கண்டித்து டெல்லியில் அடுத்த மாதம் வியாபாரிகள் கண்டன பேரணி விக்கிரமராஜா அறிவிப்பு
    சங்கரன்கோவில்:

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சங்கரன் கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்களில் வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, குறு வியாபாரிகளை பாதிக்கும் வால்மார்ட் நிறுவனத்தை அனுமதிக்கக்கூடாது.

    கடந்த 2012-ம் ஆண்டு சென்னையில் வால்மார்ட் நிறுவனம் தனது கிளையை திறக்க முயற்சி செய்தது. அப்போது வணிகர் சங்கங்களின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அன்றைய முதல்அமைச்சர் ஜெயலலிதா வால்மார்ட் நிறுவனத்திற்கு தடை விதித்து, அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தார்.

    தற்போது வேறு பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் கால் ஊன்ற வால்மார்ட் நிறுவனம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து டெல்லியில் அடுத்த மாதம் (ஜூலை) 24ந்தேதி பெரிய அளவில் கண்டன பேரணி நடத்த உள்ளோம். ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கரன்கோவில் நகரில் பாரம்பரிய திருவிழா ஆடித்தவசு திருவிழாவாகும். திருவிழா காலங்களில் இரவில் கூடுதல் நேரம் வியாபாரிகள் கடைகள் நடத்த அனுமதி கொடுக்க வேண்டும். அதேபோல் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட நேரங்களில் கடைகளை அடைக்க வியாபாரிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. தொடர்ந்து வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    வால்மார்ட் நிறுவனத்தை விரட்டி அடிப்போம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சில்லரை வணிகத்தை சீரழிக்கும் செயல் ஆகும். லட்சோப லட்சம் சிறுவணிகர்களின் வாழ்தாவாரத்தையும், வாழ்க்கை முறையையும் சின்னா பின்னாமாக்கி விடும்.

    எனவேதான் அந்நிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்த்து வருகிறோம். அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் தமிழகத்தில் கால் ஊன்ற முயற்சித்த போது வணிகர்களை திரட்டி போராடினோம். அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த வி‌ஷயத்தில் வணிகர்களுக்கு துணையாக நின்றது மறக்க முடியாதது.

    அன்று விரட்டப்பட்டு முன் வாசல் வழியாக வெளியேறி வால்மார்ட் நிறுவனம் இன்று இந்திய ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கி பின் வாசல் வழியாக நுழைந்து சில்லரை வணிகத்தை ஒட்டு மொத்தமாக கைப்பற்ற பார்க்கிறது. மத்திய அரசு இதை அனுமதித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

    உள்நாட்டு வணிகத்தின் மீதும், வணிகர்கள் மீதும் உண்மையில் அக்கறையிருந்தால் பிளிப்கார்ட்- வால்மார்ட் உடன்பாட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும். வால்மார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்குள் நுழைய வணிகர்கள் அனுமதிக்கமாட்டோம். ஆன்லைன் வணிகத்தில் நுழைந்த வால்மாட்டை விரட்டி அடிப்போம்.

    தேச விரோத வர்த்தக செயல்பாடுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் வணிகர் நலன் காக்க தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நேரடியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு த.வெள்ளையன் கூறினார். #tamilnews

    ×