search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water catchment area"

    போதிய அளவில் பருவ மழை பெய்யாததாலும், கோடை வெயிலின் தாக்கத்தாலும் பூண்டி ஏரி தண்ணீர் மட்டம் வேகமாக வறண்டு வருகிறது.
    ஊத்துக்கோட்டை:

    பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் வீராணம் ஏரி, போரூர் ஏரிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர், மீஞ்சூரில் உள்ள கடல் நீர் குடிநீராக்கும் மையத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.

    இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    போதிய அளவில் பருவ மழை பெய்யாததாலும், கோடை வெயில் காரணமாகவும் பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இதன் காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

    கோடை வெயிலின் தாக்கத்தால் பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருகிறது. இன்று காலை 6 மணியளவில் ஏரியில் வெறும் 175 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.

    இந்த ஏரியின் பரப்பளவு 70 சதுர கிலோ மீட்டர். ஏரியை சுற்றி அம்பேத்கார் நகர், புல்லரம்பாக்கம், சதுரங்க பேட்டை, நெய்வேலி, அரியத்தூர், நம்பாக்கம், வெள்ளாத்துகோட்டை, சென்றாம்பாளையம், ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர் உள்பட 45 கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதிகள் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளாகும். பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருவதால் மேற்கூறப்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன் இந்த கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இக்கிணறுகளில் உள்ள மின் மோட்டார்கள், இரும்பு பைப்புகள் சேதமடைந்து ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன.

    இதனால் நீர் இறைக்கும் போது கசிவதால் ஆழ்துளை கிணறுகளிலிருந்து மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் சரிவர வினியோகம் ஆவதில்லை என்று கிராம பொது மக்கள் தெரிவித்தனர்.

    பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருவதால் கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீர் செய்ய நிதி ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×