search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water level rose"

    • 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.
    • நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உருவாகும் நொய்யல் ஆறு கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம் கடந்து திருப்பூர், ஒரத்துப்பாளையம் என சுமார் 180 கிலோ மீட்டர் வந்து கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.

    இதனால் திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி தண்ணீர் கொட்டுகிறது. அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்கிறது.

    ஆனாலும் தரைப்பாலத்தையும் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தண்ணீர் அதிகம் செல்வதால் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர்.

    நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஈஸ்வரன் கோவில் வீதியில் பாலத்துக்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறு, வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்ல ம்மன் கோவில் உள்ளது. நல்லம்மண் தடுப்பணை கட்டும்போது ஏற்பட்ட இடையூறு காரணமாக தன் உயிரை தியாகம் செய்ததால் நல்லம்மன் என்ற சிறுமிக்கு அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் பலருக்கும் குலதெய்வ கோவிலாக இருந்து வருகிறது. இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.

    இதனால் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது தடைபட்டுள்ளது. மேலும் திருப்பூரில் பெய்து வரும் சாரல் மழையால் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×